என் மலர்

  தனுசு - தமிழ் மாத ஜோதிடம்

  தனுசு

  தமிழ் மாத ராசிப்பலன்

  17.8.2022 முதல் 17.9.2022 வரை

  எடுத்த கொள்கை மாறாமல் லட்சியத்தை நோக்கிப் பயணிக்கும் தனுசு ராசி நேயர்களே!

  ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். சனியும் வக்ர இயக்கத்தில் இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர் களின் அனுசரிப்பு குறையலாம்.

  சிம்ம - சூரியன் சஞ்சாரம்

  உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில், இந்த மாதம் முழுவதும் சூரியன் சஞ்சரிக்கிறார். பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான சூரியன் அங்கேயே சஞ்சரிப்பது யோகம்தான். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய பாதை புலப்படும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். பணிபுரியும் இடத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். தனித்து தொழில் செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.

  கன்னி - புதன் சஞ்சாரம்

  ஆவணி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் உச்சம் பெறுவதால், தொழில் வளம் சிறக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பதவிகளும், பொறுப்புகளும் கிடைக்கலாம். பயணங்கள் பலன் தரும். இக்காலத்தில் எடுக்கும் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

  வக்ர புதன் சஞ்சாரம்

  ஆவணி 12-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வக்ர இயக்கத்தில் வருகிறார். உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் புதன் சூரியனோடு இணைந்து வலுவிழக்கிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற புதன், வக்ரம் பெறுவது யோகம்தான். சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். கடன்சுமை குறைய புதிய வழிபிறக்கும்.

  சிம்ம - சுக்ரன் சஞ்சாரம்

  ஆவணி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், உங்கள் ராசிநாதன் குருவிற்கு பகை கிரகம் ஆவார். சூரியனோடு இணையும் சுக்ரனால் நற்பலன்கள் கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். அடகுவைத்த நகைகளை மீட்பீர்கள். இல்லத்தில் மங்கல காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வுடன் கூடிய மாறுதல்கள் வரலாம்.

  குரு வக்ரமும், சனி வக்ரமும்

  மாதம் முழுவதும் குருவும், சனியும் வக்ரத்தில் இருக்கிறார்கள். உங்கள் ராசிக்கும், சுக ஸ்தானத்திற்கும் அதிபதியாக குரு இருப்பதால், ஆரோக்கிய தொல்லை அதிகரிக்கும். பெற்றோர் வழியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் திருப்பங்கள் தொழிலில் ஏற்படலாம். இக்காலத்தில் குரு, சனி வழிபாட்டை செய்யுங்கள்.

  இந்த மாதம் வியாழக்கிழமை தோறும் ஆதியந்தப் பிரபுவை வழிபடுவதன் மூலம் ஆனந்தமான வாழ்வு அமையும்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

  ஆகஸ்டு: 23, 24, 29, 30, செப்டம்பர்: 5, 6, 9, 10

  மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

  பெண்களுக்கான பலன்கள்

  ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்கள் ராசிநாதன் வக்ர இயக்கத்தில் இருப்பதால், எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. கொடுக்கல்- வாங்கலில் பிரச்சினை வரலாம். இல்லறம் இனிமையாக கணவன்- மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். பணிபுரியும் பெண்களுக்கு சகப் பணியாளர்களின் ஒத்துழைப்பும், அலுவலக சலுகைகளும் கிடைக்கும்.

  தனுசு

  தமிழ் மாத ராசிப்பலன்

  17-07-2022 முதல் 16-08-2022 வரை

  மனதில் பட்ட கருத்துக்களை மறைக்காமல் எடுத்துரைக்கும் தனுசு ராசி நேயர்களே!

  ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு சுக ஸ்தானத்தில் இருப்பதால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

  ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் போது நினைத்த காரியங்கள் நிறைவேறும். நீடித்த நோய் அகலும். அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும் விதத்தில் கிரக நிலைகளின் சஞ்சாரம் இருக்கிறது. ஆயினும் ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் ஒருசில காரியங்கள் தடைப்படலாம். திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

  ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதியான அவர் 8-ம் இடத்திற்கு வரும்போது, 'விபரீத ராஜயோகம்' செயல்படும். பகைக் கிரகம் வலுவிழக்கும் இந்த நேரத்தில் பணவரவு திருப்தி தரும். கல்வி மற்றும் அரசு வேலை தொடர்பான முயற்சி கை கூடும். புதிய நகைகளை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.

  ஆடி 23-ந் தேதி, மீன ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் குரு வக்ரம்பெறும் போது எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் திருப்பம் நிகழும். ஆரோக்கியத் தொல்லை உண்டு. உங்கள் ராசிநாதனாகவும், சுக ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் குரு இருப்பதால் கவனத்தோடு செயல்படுங்கள். நீங்கள் நன்மை செய்தாலும், பிறருக்கு அது தீமையாகவே தெரியும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. வெளிநாட்டிற்குச் சென்றவர்களில் சிலர், வேலையின்றி திரும்ப நேரிடும். படித்து முடித்து பல காலமாக வேலையின்றி தவித்தவர்களுக்கு, தற்காலிகப் பணி அமையலாம். இந்த நேரத்தில் குலதெய்வம் மற்றும் எல்லை தெய்வங்களை வழிபடுவது நல்லது.

  ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி 6-ல் வரும்போது, புதிய திருப்பங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு. புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். அருளாளர்களின் ஆலோசனை கைகொடுக்கும். அரசு வழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கலாம். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருந்து, தொழில் வளம் பெற வழிகாட்டுவர். 12-க்கு அதிபதியாகவும் செவ்வாய் இருப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். இட விற்பனை மூலம் தன லாபம் கிடைக்கலாம்.

  இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 19, 20, 31, ஆகஸ்டு: 1, 5, 6, 11, 12 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

  பெண்களுக்கான பலன்கள்

  இம்மாதம் சுபச்செலவு அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அன்பும், ஆதரவும் கூடும். பிள்ளைகளின் கல்யாணம், சீமந்தம் செய்யும் சூழ்நிலை உருவாகும். ஒரு சிலருக்கு, வீடு மாற்றம் அமையலாம். உறவினர் பகை அகலும். பணிபுரியும் பெண் களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சகப் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குருவின் வக்ர காலத்தில் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

  தனுசு

  தமிழ் மாத ராசிப்பலன்

  ஆனி மாத ராசி பலன்கள் 15-06-2022 முதல் 16-07-2022 வரை

  முடியாத காரியத்தை எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற தனுசு ராசி நேயர்களே!

  ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பகவானோடு விரயாதிபதி செவ்வாய் இணைந்து சஞ்சரிப்பதால் விரயங்கள் கூடுதலாகவே இருக்கும்.

  ஆனி 4-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, உத்தியோகம் மற்றும் தொழிலில் நன்மைகள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். இதுவரை போராடியும் வராத பாக்கிகள் இப்பொழுது வசூலாகும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. சிறுசிறு தொல்லைகள் அடிக்கடி தலைதூக்கும்.

  ஆனி 11-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் சொந்த வீட்டில் பலம்பெற்று சஞ்சரிக்கும் பொழுது, கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும். கடமையில் இருந்த தொய்வு அகலும். பயணங்கள் பலன் தருவதாக இருக்கும். குடும்ப முன்னேற்றம் கூடும்.

  ஆனி 12-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். மேஷம் செவ்வாய்க்கு சொந்த வீடாகும். தைரியகாரகன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பலம்பெற்றிருக்கும் இந்த நேரம், தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தனவரவு திருப்தி தரும். பூர்வீக சொத்துக்களை கொடுத்துவிட்டுப் புதிய சொத்துக்கள் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். பொதுவாழ்வில் புதிய பதவிகள் கிடைக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்பும், அதற்கேற்ப வருமானமும் உண்டு.

  ஆனி 28-ந் தேதி, கடக ராசிக்குப் புதன் செல்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு. கேந்திராதிபத்தியத்தில் தோஷம் பெற்ற கிரகம் மறைவது யோகம்தான். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். தொலை தூரத்தில் இருந்து நல்ல தகவல் வந்து சேரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையும் வாய்ப்பு உண்டு. சுபகாரியங்கள் நடைபெறும் நேரம் இது.

  ஆனி 29-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு லாபாதிபதியான சுக்ரன் 7-ல் வரும்பொழுது பகை கிரகமாக இருந்தாலும் பலன் கொடுக்கும். அதே நேரத்தில் பாக்கியாதிபதி சூரியனோடு அவர் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். இல்லத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியங்கள் பலவும் செய்து முடிப்பீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டுவரும் வாய்ப்பு கிட்டும். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. பெண் வழிப் பிரச்சினைகள் அகலும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும்.

  இம்மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிவனை வழிபடுங்கள்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 18, 19, 22, 23, ஜூலை: 2, 3, 4, 8, 9, 15, 16மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

  பெண்களுக்கான பலன்கள்

  இம்மாதம் விரயங்கள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீட்டுத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு அகலும். குடும்ப ஒற்றுமை திருப்தி தரும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பணிபுரியும் பெண்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடி நிலை மாறும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

  தனுசு

  தமிழ் மாத ராசிப்பலன்

  வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை

  நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தனுசு ராசி நேயர்களே!

  வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குருபகவான் சுக ஸ்தானத்தில் சொந்த வீட்டில் சஞ்சரிக்கிறார். அதே நேரம் கேதுவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும்.

  மீன - செவ்வாய் சஞ்சாரம்

  வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் சுக ஸ்தானத்திற்கு செல்லும்போது, ஆடம்பரச் செலவு அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வரலாம். கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் தனித்து இயங்க முற்படுவர். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும்.

  சனி - செவ்வாய் பார்வைக் காலம்

  வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். உங்கள் ராசிக்கு 5, 12-க்கு அதிபதியானவர் செவ்வாய். 2, 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. எனவே விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் உறுதியாகும். பிள்ளைகளின் போக்கில் திடீர் மாற்றம் உருவாகலாம். வாங்கிய பூமியை விற்க நேரிடலாம்.

  புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

  வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதி வக்ர நிவர்த்தியாவதால் கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். எனவே உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும்.

  மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

  இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். 6, 11-க்கு அதிபதியான சுக்ரன், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்பொழுது பிள்ளைகளின் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெற்று, சுயதொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

  மகரச் சனியின் வக்ர காலம்

  வைகாசி 11-ந் தேதி, உங்கள் ராசிக்கு தனம் மற்றும் சகாய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பணப்புழக்கத்தில் தடை ஏற்படும். தொழில் மூலதனத்திற்கு செய்த ஏற்பாடு தாமதப்படும். மனக் கலக்கம் அதிகரிக்கும். பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரிப்பு குறையும். கடன்கள் வசூலாவது அரிது. திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாத அளவிற்கு பிரச்சினைகள் வரலாம்.

  இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் வராகி அம்மனை வழிபடுவது நல்லது.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 15, 16, 21, 22, 25, 26, ஜூன்: 6, 7, 11, 12மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

  பெண்களுக்கான பலன்கள்

  இம்மாதம் உடல்நலனில் கவனம் தேவை. சுபச்செலவு அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் பிரச்சினை ஏற்படாமல் இருக்க விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் வேலை மற்றும் திருமணத்திற்கான வாய்ப்புகள் கைகூடும். சனியின் வக்ர காலத்தில் சஞ்சலங்கள் கூடலாம். பணிபுரியும் இடத்தில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

  ×