search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    விநாயகர் சதுர்த்தி பிறந்த கதை!
    X

    விநாயகர் சதுர்த்தி பிறந்த கதை!

    • இந்த ஹோமத்தில் 108 மூலிகைகள், வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
    • விக்கினங்கள் விலகவும், நன்மைகள் ஓங்கவும் இவை செய்யப்படுகின்றன.

    விநாயகர் சதுர்த்தி பிறந்த கதை

    முன்னொரு காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பல பெற்றமையால் இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்தான்.

    அவன் தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர்.

    எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.

    விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் கடும்போர் நடந்தது. முடிவில் விநாயகர் பெருமான் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை அழிக்க ஏவினார்.

    அசுரனோ, மூஞ்சுறாய் வந்து எதிர்த்து நின்றான். விநாயகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்தார்.

    பின்னர் அவர் மூஞ்சுறைத் தனது வாகனமாக்கிக் கொண்டு அருளினார். இதன்மூலம் அனைவரும் சுபிட்சம் பெற்றனர்.

    எனவே அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால் தீராதவினைகள் தீரும். சகல பபாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்

    விநாயகர் சதுர்த்தி விரதம்

    விநாயகர் சதுர்த்தி விரதம் ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி, புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி வரை மேற்கொள்ளப்படுகிறது. ஆவணி மாதம் அமாவாசைக்கு அடுத்த நான்காவது நாள் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது.

    அன்று விடியற்காலையில் எழுந்து வீட்டை நன்றாக பெருக்கி, மெழுகி சுத்தம் செய்துவிட்டு வீட்டு வாசலில் மாவிலை, தோரணங்களை கட்ட வேண்டும்.

    வீட்டின் வாசலுக்கு இருபுறமும் வாழைமரக் கன்றையும் கட்டி வைக்கலாம்.

    பூசை அறையைக் கழுவி, மொழுகி, கோலம்போட்டு, அதன் மையப்பகுதியில் ஒரு பலகை வைத்து மேலும் ஒரு கோலம் போட்டு தலைவாழை இலை விரித்து பச்சரிசையைப் பரப்பி வைக்க வேண்டும்.

    அதில் வலது கை மோதிர விரலால் பிள்ளையார் சுழி போட்டு "ஓம்" என்று எழுதி மண்பிள்ளையாரை வைக்க வேண்டும்.

    அதற்கு அறுகம்புல், எருக்கம்பூ, விபூதி, சந்தனம் மலர்களால் அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், தேங்காய், வெல்லம் கலந்த மாவு உருண்டை, விளாம்பழம், அப்பம், சுண்டல், அவல், பொரி, கடலை, எள்ளுருண்டை போன்ற நிவேதனப் பொருள்களை வைத்து தூபமிட்டு சாம்பிராணி புகை காட்டி சூடம் ஏற்றி வழிபட வேண்டும்.

    அப்பொழுது விநாயகருக்குரிய அகவல், கவசம், சகஸ்ரநாமம், காரிய சித்திமாலை, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல் ஆகியவற்றை பாடுவது நற்பலன்களை தரும்.

    ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு எல்லா விநாயகர் கோவிலிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி ஹோமம் நடைபெறும்.

    விக்கினங்கள் விலகவும், நன்மைகள் ஓங்கவும் இவைகள் செய்யப்படுகின்றன. இந்த ஹோமத்தில் 108 மூலிகைகள், வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    கணபதி ஹோமத்திற்குரிய திரவியங்கள் எட்டு. அவை மோதகம், அவல், நெய், பொரி, சத்துமா, கரும்பு, கொப்பரைத் தேங்காய், சுத்தமான எள், வாழைப்பழம், இதை தவிர அறுகம்புல், விளாம்பழம், நாவல்பழம், மாதுளம்பழம் இவைகளையும் ஹோம நிவேதனமாக செய்ய வேண்டும்.

    முதலில் தைலக்காப்பு, பிறகு மாகாப்பு (அரிசி மாவு) பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், பழ வகைகள், தயிர், கரும்புச்சாறு, விபூதி, சந்தனம், பன்னீர் அபிஷேகங்கள் செய்யப்படும். மாலையில் விநாயகருக்கு சந்தனக்காப்பு, விபூதிக்காப்பு, பூவலங்காரம் நடைபெறும். துளசி இலைகள் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் பூஜைக்கு உகந்தது.

    Next Story
    ×