search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பத்துநாள் விரதம் வெற்றிகளை குவிக்கும்
    X

    பத்துநாள் விரதம் வெற்றிகளை குவிக்கும்

    • நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    • இலட்சுமி தேவி செல்வத்தின் தெய்வம். மலரின் மென்மையுடன் அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள்.

    சக்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பௌர்ணமி விரதம், நவராத்திரி விரதம் என்பன மிகவும் முக்கியமானவை. சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு'பிரம்மோற்சவம்' என்றும் கூறப்படுகிறது. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.

    சாரதா நவராத்திரி

    ஆண்டிற்கு நான்கு நவராத்திரிகள் உண்டு . சக்தியைச் சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி எனப்படும். ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும். புரட்டாசி மாதத்தில் வழிபடுவது பாத்ரபத நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி எனப்படும். புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் வரும் நவராத்திரியை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியுடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா. நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நாவராத்திரியை வழிபடுவார்கள். புரட்டாசி மாதத்தில் சரத்காலம் என்று கூறுவர். இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசராவாகக் கொண்டாடப்படுகிறது. மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு தசராவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வங்காளத்தில் துர்க்கா பூஜை என்ற பெயரோடு கொண்டாடுகிறார்கள்.

    கன்னியர்கள் வழிபாடு

    நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னிகள் பெறுவது திருமணப் பயன். சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன நிறைவு; எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி. நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை. நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை. இதனால், நவராத்திரி வழிபாட்டில் மிகப் பலகன்னியர்களும், அவர்களின் குடும்பத்தாரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வழிபாட்டில் பலர் பங்கேற்பது என்பது நவராத்திரியின் விழாவின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.

    கொலுவைத்து கொண்டாட்டம்

    நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பல வித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதே. ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களுக் கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றாள்.

    நவசக்திகளுக்கான வழிபாடு

    புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபடவேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு. நடுவில் உள்ள மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் உள்ளன. துர்க்கை: 1. மகேசுவரி, 2. கௌமாரி , 3. வராகி. இலட்சுமி: 4. மாகலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி. சரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி. நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும்.

    வீரம் தரும் துர்க்கை

    துர்க்கையானவள் வீரத்தின் தெய்வம். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம் இவள் நெருப்பின் அழகுடன் ஆவேசப் பார்வை கொண்டவள் சிவபிரியையான துர்க்கை இச்சா சக்தி. கொற்றவைஎன்றும் காளி என்றும் குறிப்பிடுவர். வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

    செல்வம் தரும் லட்சுமி

    இலட்சுமி தேவி செல்வத்தின் தெய்வம். மலரின் மென்மையுடன் அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். இவள் விஷ்ணு பிரியை, கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள். இவளுக்குத் தனிக் கோயில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சானூர். அஷ்ட இலட்சுமியாக அருள் பாலிக்கிறாள் ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி, சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி , கஜ இலட்சுமி . இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.

    சகல வித்தை தரும் சரஸ்வதி

    சரஸ்வதி தேவி கல்வியின் தெய்வம். இவள் அமைதிப் பார்வையுடன் வைரத்தின் அழகுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள்.. பிரம்பிரியை. ஞான சக்தி. நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. ஆயுதபூஜையாகவும் கொண்டாடுகின்றனர். சமுதாயத்தில் தொழில் , புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான், இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. சரஸ்வதி தேவியும் வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி என அஷ்ட சரஸ்வதியாக போற்றப்படுகிறாள்.

    விஜயதசமி

    நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி அதாவது துர்க்காஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும். ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை அம்பெய்து வதம் செய்தாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்துநற்காரியங்களும் வெற்றி தரும் என்பது நம்பிக்கை. வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன், இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு புறப்பட்டதாக இருக்கிறது. பத்தாவது நாளான விஐயதசமி அன்று புதிய கல்வி கற்பதைத் தொடங்குவார்கள். பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான் ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த யுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று மீண்டும் எடுத்து உயிர்ப்பித்துகொண்டான்.

    Next Story
    ×