search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எழும்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் கமல்ஹாசன் சந்திப்பு
    X

    எழும்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் கமல்ஹாசன் சந்திப்பு

    எழும்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். #ayyakannu #FarmerStruggle #KamalHassan

    சென்னை:

    தமிழக விவசாயிகளில் ஒரு பிரிவினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தென் இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த இந்த போராட்டத்தால் டெல்லி போலீசார் திணறிப் போனார்கள். பல நாட்களாக நீடித்த இந்த போராட்டம் பின்னர் முடிவுக்கு வந்தது.

    இந்தநிலையில் அய்யாக்கண்ணு தலைமையிலான போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகளும் பங்கேற்றன.

    டெல்லியில் போராட்டத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலை சென்னை திரும்பினார்கள். காலை 7.30 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்த அவர்கள் அங்கிருந்து எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்றனர்.

    பின்னர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் எழும்பூர் ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட் பாரத்தில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி இந்த போராட்டம் நடந்தது. ஆண்கள், பெண்கள் என சுமார் 200 பேர் இதில் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 2 பேர் மண்டை ஓடுகளை கழுத்தில் தொங்கவிட்டிருந்தனர். போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். முதல்-அமைச்சரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். இருப்பினும் விவசாயிகள் அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

     


    விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கமலை வரவேற்று போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். விவசாயிகளிடம் போராட்டம் குறித்து கமல் கேட்டறிந்தார்.

    பின்னர் விவசாயிக்ள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    நீங்கள் கேட்டிருக்கும் கோரிக்கைகள் நியாயமனது தான் அரசால் நிறைவேற்ற முடிந்ததுதான். நீங்கள் அனைவரும் இதேபோல் ஒற்றுமையோடு இருக்க வேண்டும். இந்த ஒற்றுமையால் தான் டெல்லியில் இவ்வளவு கூட்டத்தை கூட்ட முடிந்தது.

    உங்கள் மொழி விவசாயம். எங்களால் முடிந்தவரை உங்களோடு தோள் கொடுத்து உங்கள் கோரிக்கைகளுக்காக அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதை தவிர வழியே இல்லை. புயலும், வெள்ளமும் மட்டுமே தேசிய பேரிடர் அல்ல. பஞ்சமும் தேசிய பேரிடர்தான்.

     


    நாங்களும் உங்கள் குடும்பம்தான். உங்கள் தொழில் எங்களுக்கு தெரியாது. ஆனால் உங்கள் கையால் வாங்கி சாப்பிடுகிறோம். அதற்கு மரியாதை செலுத்தத்தான் இங்கு வந்தேன். அரசு விவசாயிகளின் நிலைமையை உணர்ந்து செயல்பட வேண்டும். இப்போது கெஞ்சி கேட்கிறோம். எப்போதும் இப்படியே நிலைமை இருக்காது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகள் நாடு தழுவிய அளவில் விவசாய கடன்களை ரத்து செய்வது, விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிப்பது, உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அறவழி போராட்டத்தை நடத்துகிறார்கள். அவர்களுக்கு எங்கள் ஒத்துழைப்பு உண்டு.

    நேற்று வரை கஜா புயல் பாதித்த பகுதிகளில் தான் இருந்தேன். எங்கள் குரல் எதிர்க் கட்சிகளின் குரல் அல்ல. மக்களின் குரலாக பார்க்க வேண்டும். 15 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் பல கிராமங்களில் மின்சாரம் இல்லை. குடி தண்ணீர் வசதி இல்லை. மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

    இன்னும் ஒரு கிராம நிர்வாக அதிகாரிகள் கூட போய் பார்க்கவில்லை. நாங்கள் போன பல இடங்களில் மக்கள் ஆத்திரத்தில் கண்ணீர் அஞ்சலி என்று வைத்திருந்ததை பார்த்தோம்.

    நாங்கள் அரசை விமர்சிக்க வில்லை. பணிகளை துரிதப்படுத்த வேண்டியது எங்கள் கடமை. அதைத்தான் சொல்கிறோம். இதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். சேத விவரங்களை கூட இருந்த இடத்தில் இருந்தே சேகரித்ததாகத்தான் நான் கருதுகிறேன். மத்திய அரசு இடைக்காக நிவாரணம் வழங்கி இருப்பதற்கு நன்றி.

    விவசாயிகள் டெல்லியில் போராடிய விதம் தவறு என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருப்பது சரியல்ல. விவசாயிகள் பசியோடு இருக்கிறார்கள். பசிக்காக போராடுபவர்களும் இப்படித்தான் போராட வேண்டும், அப்படித்தான் போராட வேண்டும் என்று சொல்ல முடியாது.

    கஜா புயல் பாதித்த பகுதிகளில் அவலங்களை நேரில் பார்த்து வந்தவன் நான். அங்குள்ள விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பரிசீலனையில் இருப்பதாக கூறுகிறார்கள். அதற்கான கால அவகாசம் இல்லை. உடனே தள்ளுபடி செய்வதுதான் நல்லது.

    பாதிக்கப்பட்டுள்ள பகுதி முழுவதுமாக மீண்டு வருவதற்கு இன்னும் 7 ஆண்டுகள் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விவசாயிகள் எழும்பூரில் இருந்து இன்று மதியம் செல்லக்கூடிய வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் செல்வதற்கு முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால் விவசாயிகள் தொடர்ந்து சில மணிநேரம் எழும்பூர் ரெயில் நிலையத்திலேயே தங்கி இருக்க வேண்டி இருந்தது. அதுவரை போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டதால் ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் பேசி வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைத்து அனைத்து விவசாயிகளையும் ஒரே ரெயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர். #ayyakannu #FarmerStruggle #KamalHassan

    Next Story
    ×