search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிநாடுகள்"

    கேரளா மழை வெள்ளத்திற்கு ஐக்கிய அமீரகம் 700 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ள நிலையில், குஜராத் பூகம்பத்துக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் உதவியுள்ளது நினைவு கூறத்தக்கது. #keralaFlood
    புதுடெல்லி:

    கேரளாவில் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழை மாநிலத்தையே புரட்டிப்போட்டது. 300-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பல ஆயிரம் கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. பிற மாநிலங்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், பொதுமக்கள் என பல தரப்பில் இருந்தும் கேரளாவுக்கு நிதியுதவி குவிந்து வருகிறது.

    இந்நிலையில், கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதியுதவி வழங்கப்படும் என ஐக்கிய அமீரக அரசு அறிவித்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர்களின் பங்கு ஐக்கிய அமீரத்தின் வளர்ச்சியில் இருப்பதால் அவர்களின் துக்கத்தில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கிறோம் என அமீரக இளவரசர் குறிப்பிட்டிருந்தார்.

    எனினும், சர்வதேச உதவியை எதிர்நோக்கக்கூடாது அது இந்தியா மீதான மதிப்பை சீர் குலைக்கும் என பல வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதற்கு முன்னதாக கடந்த 2001-ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் இந்தியா சர்வதேச உதவிகளை பெற்றுள்ளது. 

    மத்திய வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் உள்ள தகவலின் படி குஜராதில் பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து, சுமார் 109 நாடுகள் நேரடியாக உதவி செய்துள்ளன. நிதியுதவி, நிவாரணப்பொருட்கள், உணவுப்பொருட்கள், கூடாரம், அடிப்படை தளவாடங்கள் ஆகியவை வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டுள்ளது.

    அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா உள்ளிட்ட வல்லரசுகள் முதல் ஷிசெல்ஸ், நேபாள் ஆகிய குட்டி நாடுகள் வரை குஜராத்துக்கு உதவிக்கரம் கொடுத்துள்ளது. வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அமீரகம், ஏமன், சிரியா ஆகிய நாடுகளும் கனிசமான உதவியை அளித்துள்ளன.

    109 நாடுகள் போக, சர்வதேச அமைப்புகள், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் குஜராத்துக்கு நிவாரணம் அனுப்பியுள்ளது. குஜராத் பூகம்பம் ஏற்பட்ட போது அங்கு முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
    ×