search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மந்திரிகள் பதவியேற்பு"

    ராஜஸ்தானில் 13 கேபினட் மந்திரிகள் மற்றும் 10 இணைமந்திரிகள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் கல்யாண்சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார். #AshokGehlot #Sachinpilot
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக அசோக் கெலாட், துணை முதல்-மந்திரியாக சச்சின் பைலட் பதவி ஏற்றனர்.

    இதையடுத்து ராஜஸ்தானில் புதிய மந்திரிசபை அமைப்பதற்கான ஆலோசனைகள் நடந்தன. 200 சட்டசபை தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் 15 சதவீதம் கணக்குபடி 30 எம்.எல்.ஏ.க்களை மந்திரிகளாக நியமனம் செய்ய முடியும்.

    அந்த அடிப்படையில் புதிய மந்திரிகள் நியமனத்திற்கான பட்டியலை முதல்-மந்திரி அசோக் கெலாட் தயாரித்தார். அந்த பட்டியலில் 40 பேர் பெயர் இடம் பெற்று இருந்தது.

    அந்த பட்டியலுடன் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் டெல்லி சென்றனர். அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது முதல் கட்டமாக மந்திரிசபையில் 23 பேருக்கு இடம் அளிக்க தீர்மானிக்கப்பட்டது.



    அதில் 22 பேர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள். ஒருவர் ராஷ்டீரிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர்களது பெயர் பட்டியலுடன் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் நேற்று இரவு டெல்லியில் இருந்து ராஜஸ்தான் திரும்பினார்கள்.

    இன்று மதியம் 12 மணியளவில் தலைநகர் ஜெய்ப்பூரில் புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. 23 எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் கல்யாண்சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    23 மந்திரிகளில் 13 பேர் காபினெட் அந்தஸ்து மந்திரிகள் ஆவார்கள். 10 பேர் ராஜாங்க மந்திரிகள் ஆவார்கள்.

    புதிதாக பதவி ஏற்ற 23 மந்திரிகளும் இன்றே தங்களது அலுவலகம் சென்று பணிகளை தொடங்கினார்கள். ராஜஸ்தானில் 2-ம் கட்டமாக மேலும் ஒரு சில மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது.

    ராஜஸ்தான் மந்திரிசபையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் சச்சின் பைலட் மிகவும் தீவிரமாக இருந்தார். 50 சதவீத மந்திரி பதவிகளை கேட்டார். ஆனால் அசோக் கெலாட் அனுபவம் வாய்ந்தவர்களையே மந்திரிகளாக நியமிக்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்று உள்ளார்.

    இதனால் ராஜஸ்தானில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    காங்கிரஸ் வெற்றி பெற்ற மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நாளை புதிய மந்திரிகள் பதவி ஏற்க உள்ளனர். #AshokGehlot #Sachinpilot
    ×