search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் எச்சரிக்கை."

    • விதிகளை மீறினால் ஜெயில் தண்டனை, அபராதம்.
    • நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் தவறு செய்த நபருக்கு 2 வருடம் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம்அ பராதம் விதிக்கப்படும்.

    கோவை,

    கோவையில் கடந்த மாதம் 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உடைப்பதற்கு விற்கப்பட்ட கார் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.

    அந்த கார் ஆர்.சி. பெயர் மாற்றம் செய்யா மலேயே 10 பேர் கை மாறியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் குண்டு வைப்பதற்காகவே பழைய வாகனத்தை வாங்கியது தெரிய வந்தது.

    இந்த நிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார் தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பழைய வாகனங்களை வாங்கும் வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போலீசார் கூறியதாவது:-

    வாகனங்கள் உடைக்கும் தொழிலில் ஈடுபடுவோர் அனைவரும் மோட்டார் வாகன பராமரிப்புத்துறை வழங்கிய உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். உரிமத்தை தணிக்கை அதிகாரிகள் பார்வையில் படுமாறு கடையில், அலுவலகத்தில் வைக்க வேண்டும்.ஒவ்வொரு உரிமமும் 3 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பித்திருக்க வேண்டும். உரிமம் புதுப்பிக்கப்படாமல் தொழிலில் ஈடுபட்டால், தக்க சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

    அரசு சுகாதார அலுவலர் மற்றும் போக்குவரத்து போலீசாரிடம் தொழில் நடைபெறும் இடத்திற்கான இருப்பிடத் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    விற்பனைக்கு வரும் வாகனங்களை முறைமைப் படுத்த தனி பதிவேடுகள் வைத்து பராமரிக்க வேண்டும். அந்த பதிவேட்டில் உடைப்பதற்காக வாங்கப்பட்ட வாகனத்தின் பதிவு எண்,சேசிஸ் எண், என்ஜின் எண், மாடல் உரிமையாளர் விபரம், விற்போர்களின் முகவரி மற்றும் செல்போன் எண் விவரங்கள் அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வாகனத்தின் விலை போன்றவை பதிவு செய்யப்பட வேண்டும்.

    பதிவேடு ஒவ்வொரு நாளும் காலை ,மாலை தணிக்கை செய்யப்பட்டு உரிமையாளரால் கையொப்பமிடப்பட்டு இருக்க வேண்டும். இந்த பதிவேடு போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கும் போது தணிக்கைக்கு காண்பிக்கப்படல் வேண்டும்.

    வாகனங்களை விற்போர் விபரங்களை கணிணியில் பதிவேற்றம் செய்தால் அதன் நகலை மாதம் ஒருமுறை சம்மந்தப்பட்ட எல்லைக்குரிய போலீஸ் நிலைய அதிகாரியிடம் வழங்க வேண்டும்.

    கடையில் பணிபுரியும் ஊழியர்களின் முகவரி ,ஆதார் ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவைகளை வைத்திருத்தல் வேண்டும். மேலும் ஊழியர்களின் இதர விவரங்களையும் மற்றும் நன்னடத்தை சான்று போலீசாரிடம் இருந்து பெற்று பராமரித்து வர வேண்டும். அரசு அலுவலர்கள் தணிக்கையின் போது கடையில் உள்ள வாகனத்தின் உதிரி பாகங்கள் குறித்த முழு விவரங்களையும் கடையின் உரிமையாளர் தெரிவிக்க வேண்டும்.

    உள்நோக்கத்தோடு தெரிந்தே தணிக்கை அதிகாரி கேட்கும் தகவலை அளிக்க மறுத்தாலோ அல்லது தவறான தகவல் அளித்தாலோ 6 மாதங்கள் ஜெயில் தண்டனை அல்லது ஆயிரம் அபராதம் இரண்டும் சேர்ந்த தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

    கடைக்கு கொண்டு வரப்படும் வாகனங்கள் திருட்டு வாகனங்களாக இருப்பின் அல்லது சந்தேகத்திற்கு இடம் அளிக்கக் கூடிய வாகனங்களாக இருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பழைய வாகனங்களை உடைத்து உதிரி பாகங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் அல்லது கடையின் உரிமையாளர் திருடப்பட்ட வாகனம் என்பதை தெரிந்தே வைத்திருந்தாலும் மற்றும் அவற்றின் உடைக்கப்பட்ட உதிரி பாகங்களை விற்பனை செய்ய வைத்திருந்தாலும்,3 வருடங்கள் ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

    உரிமம் இல்லாமல் பழைய வாகன உதிரி பாகங்கள் மற்றும் இரும்பு சாமான்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தால் ஒரு வருடம் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    2-வது முறையாக நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் தவறு செய்த நபருக்கு 2 வருடம் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம்அ பராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    இந்த கூட்டத்தில் கூடுதல் துணை கமிஷனர் சிற்றரசு, சப்-கலெக்டர் (பயிற்சி) சவுமியா, உதவி கமிஷனர்கள் சரவணன், அருள் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    ×