search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புயல் நிவராணம்"

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை பிரதமரை சந்தித்து கஜா புயல் நிவாரணத்துக்கு ரூ.13 ஆயிரம் கோடி நிதி கேட்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #GajaCyclone #Cyclone #EdappadiPalaniswami

    சென்னை:

    கஜா புயலால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் சுமார் 3 லட்சம் பேர் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

    நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக தமிழக அரசு முதல் கட்டமாக 1000 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவிகள் செய்யப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக முகாம்களில் தங்கி இருக்கும் ஏழை-எளியவர்களுக்கு அரிசி, உடை, மண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் ரொக்கப் பணமும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    புயல் தாண்டவத்தால் டெல்டா மாவட்ட மக்கள் பல ஆயிரம் கோடி சொத்துக்களை இழந்து விட்டனர். லட்சக்கணக்கானவர்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்துக் கொள்ள தமிழக அரசு வழங்கும் நிதி உதவி மட்டும் போதாது.

    பல்வேறு புதிய திட்டங்கள் மூலம்தான் டெல்டா மாவட்ட மக்கள் மத்தியில் மீண்டும் புத்துணர்ச்சியையும் மறுமலர்ச்சியையும் உருவாக்க முடியும். அதற்கு நிறைய பணம் தேவை. இந்த நிதியை மத்திய அரசிடம் உடனே கேட்டுப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? எத்தனை ஆயிரம் கோடி சொத்துக்கள் நாசமாகி உள்ளன? என்ற கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்தியது. வருவாய் துறை அதிகாரிகளுடன் பல்வேறு துறையினரும் ஒருங்கிணைந்து நடத்திய அந்த ஆய்வில் சேத விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பு அடிப்படையில் முதல் கட்ட பாதிப்பு விபரங்கள் தெரிய வந்துள்ளது.



    மின் கம்பங்கள், தென்னை மரங்கள், படகுகள், வீடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பது ஊர் வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல்களைத் தொகுத்து அறிக்கையாக தயாரித்துள்ளனர். இந்த அறிக்கையை பிரதமர் மோடியிடம் கொடுத்து நிவாரண நிதி கேட்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்காக இன்று (புதன்கிழமை) மாலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். டெல்லியில் இன்றிரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். நாளை (வியாழக்கிழமை) காலை பிரதமர் அலுவலகத்துக்கு செல்கிறார்.

    அங்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேச உள்ளார். அப்போது அவர் பிரதமரி டம் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் ஏற்படுத்தியுள்ள மிகக் கடுமையான பாதிப்புகள், சேதங்கள், இழப்புகள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்வார்.

    புகைப்பட தொகுப்புகளையும் பிரதமர் மோடியிடம் காண்பிப்பார் என்று தெரிகிறது.

    கஜா புயல் சேசத விபரங்கள் அனைத்தையும் விரிவாக தெரிவிக்க திட்டமிட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அது தொடர்பான ஆய்வறிக்கையையும் பிரதமர் மோடியிடம் வழங்குவார். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு உடனே நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார்.

    புயலால் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உடமைகள் நாசமாகி விட்டன. என்றாலும் நிவாரண பணிகளுக்கு முதல் கட்டமாக ரூ.13 ஆயிரம் கோடி தேவைப்படுவதாக தமிழக அரசு அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர். எனவே நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு ரூ.13 ஆயிரம் கோடியை உடனே தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார்.

    ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்ற விபரத்தையும் மத்திய அரசிடம் வழங்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அந்த வகையில் மின் வாரியத்துக்குத்தான் அதிக நிதி தேவைப்படுவது தெரிய வந்துள்ளது. மின் வாரியத்துக்கு ரூ.5000 கோடி கேட்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    வேளாண், தோட்டக்கலை, வீட்டு வசதி ஆகியவற்றுக்கும் தனித்தனியே நிதி உதவி கேட்க அறிக்கை தயாரித்துள்ளனர். மீனவர்களின் சுமார் 5 ஆயிரம் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்து விட்டன.

    சில நூறு படகுகள் புயலில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகி விட்டன. மீனவர்கள் தங்களுக்கு நிதி வேண்டாம், படகு வாங்கி தாருங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றியும் தனியாக நிவாரண நிதி கேட்க உள்ளனர்.

    டெல்டா மாவட்ட மக்களுக்கு பயிர் பாசனம் தவிர வாழ்வாதாரத்துக்கான மாற்று ஏற்பாடாக தென்னை மரங்கள் இருந்தன. சுமார் 50 லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. இந்த அளவு தென்னை மரத்தை மீண்டும் உருவாக்க சிறப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கு தனியாக சிறப்பு நிவாரண நிதி உதவி கேட்க இருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். மத்திய அரசு இந்த சிறப்பு திட்டத்துக்கு உதவி செய்யும் பட்சத்தில் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் தென்னை மரங்களை உருவாக்க முடியும் என்று கருதப்படுகிறது.

    டெல்டா மாவட்டங்களில் தற்போது 600-க்கும் மேற்பட்ட முகாம்களில் சுமார் 2½ லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் உதவிகள் கேட்கப்படும் என்று தெரிகிறது.

    பிரதமரை சந்தித்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்திய பிறகு சில மத்திய மந்திரிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது. நாளைதான் இது பற்றிய தகவல்கள் தெரிய வரும்.

    டெல்லி செல்லும் முதல்-அமைச்சருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் பேரிடர் நிவாரண குழு செயலாளர், அதிகாரிகள் செல்ல உள்ளனர்.

    இந்த சந்திப்பின் போது, கஜா புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய டெல்டா மாவட்டங்களுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுப்பார் என்று தெரிகிறது. #GajaCyclone #Cyclone #EdappadiPalaniswami

    ×