search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் நிறுத்தத்தில்"

    • ஒரு நாளைக்கு சராசரியாக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் நிழற்குடைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
    • பயணிகள் அமரும் இடத்தில் ஒருசிலர் சோம்பேறித்தனமாக அமர்ந்து கொண்டு வெட்டிக்கதை பேசி வருகின்றனர்.

    குனியமுத்தூர்,

    கோவை டவுன்ஹாலில் மாநகராட்சி அலுவலகம் முன்பு வரிசையாக பஸ் நிறுத்த நிழற்குடைகள் உள்ளன. அங்கு ஏராள மான பயணிகள் காத்திருந்து பஸ்ஏறி செல்வது வழக்கம். அதுவும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ -மாணவிகளின் கூட்டம் அலைமோதும்.

    ஒரு நாளைக்கு சராசரியாக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள், இந்த பகுதிகளில் உள்ள நிழற்குடைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    கோவை உக்கடம், ஆத்துப்பாலம், கோவைப்புதூர், மதுக்கரை, குனியமுத்தூர், குறிச்சி, சுந்தராபுரம், ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி, கிணத்துக்கடவு, தொண்டா முத்தூர், சாய்பாபாகாலனி, கணுவாய், துடியலூர், கவுண்டம்பாளையம் பெரியநாயக்கன்பாளையம், காந்தி பூங்கா , ஆர் எஸ் புரம் ,காந்திபுரம் காரமடை மற்றும் கோவையின் சுற்றுவட்டார பகுதி அனைத்திற்கும் மேற்கண்ட பஸ் நிறுத்தங்களில் இருந்து வாகன போக்குவரத்து உள்ளது. எனவே அங்கு 24 மணி நேரமும் பயணிகளை பார்க்க முடியும்.

    ஒவ்வொரு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் குறிப்பிட்ட இடத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம். அதன்படி 7-ம் நம்பர் பஸ் நிற்கும் இடத்தில் ஒரு நிழற்குடை உள்ளது.

    அது எந்தநேரமும் சோம்பேறிகளின் புகலிட மாக உள்ளது மற்றும் போதை கும்பல் இங்கு வந்து உட்கார்ந்து கொண்டு பீடி-கஞ்சா புகைத்து கொண்டு அங்கேயே படுத்து தூங்குவதை பார்க்க முடிகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. இது அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளிடம் முகச்சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் பயணிகள் அமரும் இடத்தில் ஒருசிலர் சோம்பேறித்தனமாக அமர்ந்து கொண்டு வெட்டிக்கதை பேசி பொழுதை போக்கி வருகின்றனர்.

    போலீசார் ரோந்து வரும்போது அந்த கும்பலை எச்சரிக்கை செய்து அனுப்பி வைப்பர். அதன்பிறகு அவர்கள் மீண்டும் நிழற்குடைக்கு வந்திருந்து ஒருவருக்கொருவர் கெட்ட வார்த்தைகளை பேசி பொழுதை கழித்து வருகின்றனர். இது பயணிகளுக்கு

    மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கோவை மாநகரின் மைய பகுதியாக விளங்கும் டவுன்ஹால் பகுதியில் மேற்கண்ட அத்துமீறலுக்கு போலீசார் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்படி செய்தால்மட்டுமே பயணிகள் கூச்சமின்றி பேருந்து நிறுத்தத்தில் நிம்மதியாக காத்திருந்து பஸ் ஏறி செல்ல முடியும் என்று தெரிவித்து உள்ளனர்.

    ×