search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதவி ராஜினாமா"

    • மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக என அ.தி.மு.க. குழு தலைவர் சோலைராஜா பேட்டியளித்துள்ளார்.
    • உள்ளாட்சித் தினமான இன்று மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாநகர சபா குழு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    மதுரை

    உள்ளாட்சித் தினமான இன்று மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாநகர சபா குழு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் மாநகர சபை குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கவுன்சிலர்கள் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

    இது தொடர்பாக மதுரை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் குழு தலைவர் சோலைராஜா கூறியதாவது:-

    மதுரை மாநகராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 15 பேர் உள்ளோம். இன்று உள்ளாட்சித் தினத்தில் மாநகர சபை குழு கூட்டம் நடத்த அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு வார்டுகளிலும் கவுன்சிலர் தலைமையில் 10 பேர் குழு பட்டியல் கேட்கப்பட்டன.

    நாங்கள் அந்தந்த வார்டுகளில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் சேவை மனப்பான்மை கொண்டவரை இந்த பட்டியலில் உறுப்பினராக சேர்த்து ஒப்புதலுக்காக அனுப்பினோம். ஆனால் நாங்கள் அளித்த அந்த 10 பேர் குழு வில் 5 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். மீதம் 5 பேர் தி.மு.க.வை சேர்ந்த வட்ட செயலாளர், ஏற்கனவே கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் மற்றும் தி.மு.க.வினர் சேர்க்கப்பட்டுள்ளனர். நாங்கள் இவர்களுடன் சேர்ந்து எப்படி செயல்படமுடியும்?

    எங்கள் வார்டுகளில் எந்த பணியும் செய்யாமல் திட்டமிட்டு புறக்கணிப்பு செய்கின்றனர். இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ள மாநகர சபை குழுவிலும் எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திமுகவினரே சேர்க்கப்பட்டுள்ளனர். இது எப்படி நியாயமாகும்.

    ஏற்கனவே மதுரை மாநகராட்சி நிர்வாகம் செயல்படாமல் முடங்கி இருக்கின்றது. வார்டுகளில் எந்த பணியும் நடக்கவில்லை. ஒவ்வொரு மாமன்ற கூட்டத்தின் போதும் மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசுகிறோம். ஆனால் அதற்கு முறைப்படியான எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

    தெருவிளக்கு, பாதாள சாக்கடை, சாலை வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகளை தீர்க்க பலமுறை கோரிக்கை விடுத்தும் எங்களது கோரிக்கைகளை கேட்க மறுக்கிறார்கள். இப்படி செயல்படாத மாநக ராட்சியில் கவுன்சிலராக இருப்பதைவிட இந்த பதவியை ராஜினாமா செய்யும் சூழ்நிலைதான் உருவாகப்போகிறது.

    எனவே அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 15 பேரும் ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை. மக்களுக்கு சேவை செய்ய முடியாத பதவியில் எதற்காக இருக்க வேண்டும்?

    தி.மு.க.வினர் தொடர்ந்து பழிவாங்கும் போக்கில் நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள். இதனை மதுரை மக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வார்டுகளில் எந்த பணியும் நடக்கவில்லை. பணியே நடக்காத வார்டுக்கு குழு ஒரு கேடா? செயல்படாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    முன்னதாக மதுரை மாநகராட்சி ஆணையாளரை நாங்கள் சந்தித்து பேச உள்ளோம்.அவரிடம் நாங்கள் அளித்த மாநகர சபா குழு பட்டியலின்படி மாநகர சபை குழு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவோம்.எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் இந்த கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்.கூட்டத்தையும் நடத்த விட மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 15 பேரும் உடனிருந்தனர்.

    ×