search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய தலைவர் அமித் ஷா"

    வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 74 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். #AmitShah
    லக்னோ:

    2019 பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மத்தியிலுள்ள பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைகிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள்  பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.

    மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியை நிர்ணயம் செய்வதில் முக்கிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளது. 2014 தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 73 தொகுதிகளில் வெற்றியை தனதாக்கியது. 

    உ.பி.யில் பெரிய கட்சிகளான சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. இதற்கிடையே, காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். எனவே, பா.ஜ.க.விற்கு இந்த முறை கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, உ.பி.யில் பா.ஜ.க.வின் வாக்குச்சாவடி அளவிலான பணியாளர்களிடம் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று கலந்துரையாடினார். அப்போது பேசிய அமித் ஷா, உ.பி.யில் 74 பாராளுமன்ற தொகுதிகளை பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    மாநிலத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீதம் பா.ஜ.க.வுக்கு வரும் வகையில் தீவிரமாக கட்சி பணியாற்ற வேண்டும்.



    மாயாவதி பலவீனமான அரசு வேண்டும் என்கிறார்,  அது ஊழலுக்குதான் வழிவகை செய்யும். நாங்கள் வலுவான அரசை அமைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நரேந்திர மோடியால் மட்டுமே வலுவான அரசை கொடுக்க முடியும். எதிர்க்கட்சியினர் இதுபோன்ற தலைவரால் ஆட்சி செய்யப்படுவதை விரும்பவில்லை.  

    2014 தேர்தலில் உ.பி.யில் இருந்து 73 தொகுதிகள் கிடைத்ததால் மோடியால் மெஜாரிட்டி அரசு அமைக்க முடிந்தது என கூறப்பட்டது.  இப்போது மாநிலத்தில் 74 தொகுதிகளில் கட்சியை வெற்றிபெற செய்ய பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 2019 தேர்தலில் பா.ஜ.க வெற்றியை தனதாக்கிவிட்டால். மாயாவதியோ, அகிலேஷ் யாதவோ ஆட்சிக்கு வரமுடியாது.  அடுத்த 25 வருடங்களுக்கு பா.ஜ.க. தான் ஆட்சி செய்யும்.

    கடுமையான உழைப்பாளியான மோடிக்கு இந்த முறை தேடித்தரும் வெற்றி நம் அர்சியல் எதிர்களின் இதயத்துடிப்பை நிறுத்துமாறு அமைவதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். #AmitShah
    ×