search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பத்தூர் முன்னாள் கவுன்சிலர் மரணம்"

    கொலை வழக்கில் விடுதலை என்று தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் முன்னாள் கவுன்சிலர் பரிதாபமாக இறந்தார்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்மிடிகாம்பட்டி கொட்டாவூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், சென்னையில் துரித உணவகம் (பாஸ்ட்புட்) நடத்தி வந்தார். மேலும், இவர் இதே ஊரின் தே.மு.தி.க. முன்னாள் கிளை செயலாளராகவும் இருந்தார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    கடந்த 2.3.2012 அன்று அதே பகுதியில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில் முன்பு வெங்கடேசன் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வெங்கடேசனை வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி கந்திலியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பாபுசங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபுஜி, திருப்பதி, முரளி, ஜோதி, குப்புசாமி, கோவிந்தன், விஜய், அருண் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கு திருப்பத்தூரில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை நீதிபதி டி.இந்திராணி விசாரித்து, பாபுசங்கர் உள்பட 9 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

    இந்த நிலையில் தீர்ப்பு வந்தால், நமக்கு தண்டனை அளிக்கப்படுமோ? என பாபுசங்கர் சோகத்துடன் காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு திடீரென பாபுசங்கருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பாபுசங்கர் பரிதாபமாக இறந்தார்.

    அதாவது வழக்கில் இருந்து பாபுசங்கர் உள்ளிட்ட 9 பேரும் விடுதலையாகிவிட்டார்கள் என தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே பாபுசங்கர் இறந்துவிட்டார்.

    இந்த சம்பவம் கந்திலி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ×