search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக வாழ்வுரிமைக் கட்சி"

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வருகிற 5-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #VelMurugan
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர்களைக் காணச் சென்றபோது கைது செய்யப்பட்டு உணவும் தண்ணீரும் அருந்த விடாமல் 24 மணி நேரத்திற்குப் பின்னர் திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.

    மனிதாபிமானமின்றி நடத்தப்பட்டதால், அவர் உணவும் தண்ணீரும் அருந்தாமல் புழல் மத்திய சிறையில் அறப்போர் நடத்திய நிலையில், நான் அவரைச் சந்தித்து சிறுநீரகங்கள் பாதித்து உடல்நலம் பாழாகி விடும் என எடுத்துக்கூறி உணவருந்தச் செய்தேன்.

    அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில், மே 30-ந் தேதி மாலையில் தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் இந்திய குற்றவியல் சட்டத்தின் கடுமையான பிரிவுகளில் தமிழக அரசின் காவல்துறை அவர் மீது வழக்குப் போட்டுள்ளது.


    நேற்று 31-ந்தேதி மனிதாபிமானமின்றி மீண்டும் புழல் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அவரை அடைத்துவிட்டனர். தமிழக அரசின் பாசிசப் போக்கையும், காவல்துறையின் அடக்கு முறையையும் கண்டித்து ஜூன் 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில், ம.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    கழகத் தோழர்களும், தோழமைக் கட்சியினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் பெருந்திரளாக இந்த அறப்போரில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #MDMK #Vaiko #VelMurugan
    ×