search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜலந்தர்"

    • துளசி செடியை தெய்வமாக பார்க்கின்றனர்.
    • சமயத்திரு நூல்களில், துளசியை வ்ரித்தா என்று அழைக்கின்றனர்.

    இயற்கைக்கு ஈடு இவ்வுலகில் ஏதுமில்லை. அதிலும் செடி, கொடிகள் நம் வாழ்வோடு ஒன்றிய காலம் நோயற்ற காலமாகவே இருந்துள்ளது. அந்த வகையில் மற்ற செடிகளுக்கு இல்லாத சிறப்பு ஏன் இந்த துளசி செடிக்கு மட்டும் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

    அதற்கு காரணம் துளசி செடியை தெய்வமாக பார்க்கின்றனர் இந்துக்கள். எந்த ஒரு சடங்கும் துளசி செடிகள் இல்லாமல் நடைபெறாது என்று கூறலாம். துளசி செடியில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான மூலிகையாக துளசி விளங்குகிறது. இதுபோக சளி, இருமல் மற்றும் இதர நோய்களை குணப்படுத்தவும் துளசி பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழலை தூய்மையாக்கி கொசு விரட்டியை போல் செயல்படுகிறது இந்த துளசி செடி.

    சமயத்திரு நூல்களில், துளசியை வ்ரித்தா என்று அழைக்கின்றனர். அசுர அரசரான கால்நேமியின் அழகிய இளவரசி தான் இந்த துளசி. சிவபெருமானின் சக்தி வாய்ந்த பகுதியாக விளங்கிய ஜலந்தரை அவர் மணந்தார். சிவபெருமானின் நெற்றிகண்ணில் இருந்து வந்த தீயில் இருந்து பிறந்தவன் என்பதால் ஜலந்தருக்கு அதிக சக்தி இருந்தது.

    பத்தினியாகவும், ஈடுபாடுள்ள பெண்ணாகவும் இருந்ததால், வ்ரிந்தா இளவரசி மீது காதலில் விழுந்தார் ஜலந்தர். விஷ்ணு பகவானின் தீவிர பக்தையாக விளங்கினார் வ்ரிந்தா. ஆனால் ஜலந்தருக்கோ கடவுள்கள் என்றாலே வெறுப்பு தான். இருப்பினும் விதி அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்தது. வ்ரிந்தாவை மணந்த பின், அனைவராலும் வெல்ல முடியாதவனாக மாறினான் ஜலந்தர்.

    வ்ரிந்தாவின் தூய்மையும், கடவுள் பக்தியும் அதற்கு காரணமாக விளங்கின. அவனின் சக்தியை பல மடங்கு அதிகரித்தது. சிவபெருமானாலேயே ஜலந்தரை வெல்ல முடியவில்லை. அவனின் ஆணவம் அதிகரித்தது. சிவபெருமானை வீழ்த்தி, அண்டசராசரத்திலேயே சக்தி வாய்ந்த கடவுளாக திகழ வேண்டும் என்பதே அவனின் லட்சியமாக இருந்தது.

    ஜலந்தரின் சக்தி அதிகரித்து கொண்டிருந்தது. இது அனைத்து கடவுள்களுக்கும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியது. அனைத்து தேவர்களும் உதவியை நாடி விஷ்ணு பகவானிடம் சென்றனர். வ்ரித்தா அவரின் தீவிர பக்தை என்பதால் விஷ்ணு பகவானுக்கு குழப்பம் உண்டாயிற்று. அவளுக்கு அநீதி வழங்க அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் ஜலந்தரால் அனைத்து கடவுள்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்ததால், விஷ்ணு பகவான் ஒரு விளையாட்டை அரங்கேற்றிட நினைத்தார்.

    அதன்படி, சிவபெருமானுடன் ஜலந்தர் போரில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, ஜலந்தர் போல் வேடமிட்டு வ்ரிந்தாவிடம் வந்தார் விஷ்ணு பகவான். முதலில் அவரை அடையாளம் காண முடியாமல், ஜலந்தர் தான் வந்து விட்டான் என்று நினைத்து அவரை வரவேற்க சென்றாள் வ்ரித்தா.

    ஆனால் விஷ்ணு பகவானை அவள் தொட்ட மறு வினாடியே, அது அவளின் கணவன் இல்லை என்பதை அவள் உணர்ந்தாள். அவளுடைய தூய்மை கெட்டுப்போனதால், ஜலந்தர் தாக்குதலுக்கு உள்ளானார். தவறை உணர்ந்த அவள், தனது சுய ரூபத்தை காட்டுமாறு விஷ்ணு பகவானிடம் கேட்டுக் கொண்டாள். தன் கடவுளே தன்னிடம் விளையாடியுள்ளார் என்பதை அறிந்த அவள் உடைந்து போனாள்.

    தன்னுடைய தூய்மையை கெடுக்க தன் கணவன் போல் விஷ்ணு பகவான் வேடமிட்டு வந்ததை அறிந்த வ்ரித்தா அவரை சபித்தார். விஷ்ணு பகவான் ஒரு கல்லாக மாற வேண்டும் என்று அவர் சபித்தார். அந்த சாபத்தை ஏற்றுக்கொண்ட விஷ்ணு பகவான், கண்டக்கா நதி அருகே ஷாலிகிராம கல்லாக மாறினார். அதன்பின்னர், தனது மனைவியின் தூய்மை என்ற பாதுகாப்பு ஜலந்தரை விட்டு போனதால், சிவபெருமானால் அவன் கொல்லப்பட்டான்.

    மனம் உடைந்த வ்ரிந்தா, தன் வாழ்க்கையை முடிக்க முடிவெடுத்தாள். அவள் இறக்கும் முன்பு, இனி அவள் துளசியாக அறியப்படுவாள் என விஷ்ணு பகவான் அவருக்கு வரம் அளித்தார். அதன்படி, இனி விஷ்ணு பகவானை வழிபடும் போது துளசியும் வழிபடப்படும். துளசி இலை இல்லாமல் விஷ்ணு பகவானுக்கு செய்யப்படும் பூஜை முழுமை பெறாது. அதனால் தான் இந்து சடங்குகளின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக விளங்குகிறது துளசி. நல்ல ஆரோக்கியத்துடன் அனைவரையும் ஆசீர்வதிக்க அனைத்து மக்களின் வீட்டில் வளரும் ஒரு செடியாக அருள் அளிக்கப்பட்டார்.

    ×