search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்து வட்டி கும்பல்"

    கந்துவட்டிக்கு வீட்டை அபகரித்த கும்பலிடம் இருந்து மீட்டுத் தரக் கோரி கலெக்டர் ஆபீஸ் முன்பு பெண் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஒரு பெண் தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைக்க முயன்றார்.

    உடனே அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் கண்ணீர் மல்க தெரிவிக்கையில், நான் வடமதுரை இ.பி. காலனியில் வசித்து வருகிறேன். எனது பெயர் டெய்சி ராணி (வயது 35). எனது கணவர் சேகருக்கு சொந்தமாக 3 செண்ட் இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தோம். கணவரின் சகோதரர் தேவராஜ் மற்றும் அவரது மனைவி வெங்கடேஸ்வரி ஆகியோர் கடந்த 2011-ம் ஆண்டு தங்கள் குடும்ப தேவைக்காக எங்களிடம் பணம் கேட்டனர்.

    நாங்கள் பெருமாள் மற்றும் வீரணன் ஆகியோரிடம் வீட்டு பத்திரத்தை வைத்து ரூ.10 லட்சம் கடன் வாங்கினோம். அதன் பிறகு மாதம் தோறும் வட்டி கட்டி வந்த நிலையில் ரூ.50 லட்சம் பணம் கொடுத்தால்தான் வீட்டு பத்திரத்தை தர முடியும் என எங்களை மிரட்டி வந்தனர்.

    இது தொடர்பாக எனது கொழுந்தன் தேவராஜிடம் கூறியபோது அவர் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். பணத்தை தராவிட்டால் வீட்டை தங்களது பெயரில் மாற்றி எழுதிக் கொள்வோம் என என்னையும், என் கணவரையும் அடியாட்களை வைத்து மிரட்டி வந்தனர்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு சொந்தமான வீட்டை அபகரித்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தற்கொலை செய்ய முடிவு செய்தோம் என்று தெரிவித்தார். இதனையடுத்து மாவட்ட கலெக்டரிடம் தனது கோரிக்கை மனுவை அளித்துச் சென்றார்.

    ×