search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவனின் கள்ளக்காதல்"

    கள்ளக்காதலினால் மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கீழ் கோர்ட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற கணவனை விடுதலை செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. #Highcourt #IllegalAffair
    சென்னை:

    சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கும், சங்கீதா என்பவருக்கும் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், மாணிக்கத்துக்கு, வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்தது. இதை சங்கீதா கடுமையாக எதிர்த்தார். இதை மாணிக்கம் கேட்காததால், தன்னுடைய 18 மாத பெண் குழந்தையுடன் கிணற்றில் விழுந்து சங்கீதா தற்கொலை செய்து கொண்டார்.



    இதுகுறித்து மாணிக்கம் மீது தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சணை துன்புறுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிர் கோர்ட்டு, தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், வரதட்சணை கொடுமை குற்றத்துக்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மாணிக்கம் மேல்முறையீடு செய்தார்.

    இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    இந்த வழக்கில் மாணிக்கம் மீது வரதட்சணை கேட்டு மனைவி சங்கீதாவை கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை சங்கீதாவின் தாயார் மட்டுமே சுமத்தியுள்ளார். மற்ற சாட்சிகள் இதற்கு ஆதாரமாக எந்த ஒரு வாக்குமூலத்தையும் கொடுக்கவில்லை.

    இந்த வழக்கில் வட்டார வருவாய் அலுவலரிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையில் கூட, மனுதாரர் வரதட்சணை கொடுமை செய்யவில்லை என்று கூறியுள்ளார். அதேபோல பிற சாட்சிகள் வரதட்சணை கொடுமை குறித்து எதுவும் கூறவில்லை. அதனால் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அடுத்தப்படியாக தற்கொலைக்கு தூண்டினார் என்ற குற்றச்சாட்டு மனுதாரர் மீது உள்ளது.

    கள்ளக்காதல் விவகாரத்தில், தன்னுடைய மனைவியை ஆத்திரமூட்டி, அவரை தற்கொலை செய்ய வைத்தார் என்பதை போலீசார் நிரூபிக்கவில்லை. அந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு உருப்படியான ஆதாரங்களையும் போலீசார் சமர்ப்பிக்கவில்லை. சமீபத்தில் பிரகாஷ்பாபு என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கணவன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருந்தால், மனைவி தற்கொலை செய்து கொண்டார் என்று எல்லா சூழ்நிலைகளிலும் கணவனை தண்டிக்க முடியாது. அதேநேரம், இந்த கள்ளக்காதல் விவகாரத்தினை சுட்டிக்காட்டி, விவாகரத்து பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறி உள்ளது

    மனுதாரர் 2008-ம் ஆண்டே ஜாமீனில் வெளியில் வந்து, மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு, 3 குழந்தைகள் உள்ளனர் என்றும் கூறப்பட்டது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, கள்ளக்காதலினால் மனைவியை தற்கொலைக்கு மனுதாரர் தூண்டினார் என்று மாணிக்கத்தை தண்டிக்க முடியாது. அதனால் அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்கிறேன். கீழ் கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.  #Highcourt #IllegalAffair


    ×