search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறைச்சிக்கழிவு"

    • 5 கிலோமீட்டர் தூரம் வரை துர்நாற்றம் வீசுகிறது.
    • நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

     உடுமலை :

    உடுமலை-பொள்ளாச்சி சாலையில் கணபதிபாளையம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது.உடுமலை நகராட்சிப் பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொண்டு வரப்படுகின்றன.இங்கு காய்கறி மற்றும் மக்கும் தன்மையுள்ள கழிவுகளை உரமாக மாற்றுதல்,விரைவில் மக்கும் தன்மையற்ற பாலிதீன் உள்ளிட்ட கழிவுகளை மறு சுழற்சி செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் விதிகளை மீறி, சுகாதார சீர்கேடுகளை உருவாக்கும் வகையில் இங்கு இறைச்சி மற்றும் மீன் கழிவுகள் அரைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சம்பவத்தன்று, இரவில் நகராட்சி குப்பைக்கிடங்குக்கு இறைச்சிக் கழிவுகளை கொண்டு வந்த வாகனங்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர். அத்துடன் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- 2002 ம் ஆண்டு சிவசக்தி காலனி பகுதியில் செயல்பட்டு வந்த நகராட்சி குப்பைக்கிடங்கு இந்த பகுதிக்கு மாற்றப்பட்ட போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்போது குப்பைகளை தரம் பிரிக்கவும்,காய்கறிக்கழிவுகளை உரமாக மாற்றவும் மட்டுமே பயன்படுத்துவதாக உறுதியளித்தார்கள். மேலும் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தும் வித மாகவோ,பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவோ எந்த பணிகளும் இங்கு நடைபெறாது என்று உறுதியளித்தனர்.ஆனால் தற்போது அந்த விதிகள் எதையும் மதிக்காமல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல்,சுகாதார சீர்கேடுகளை உருவாக்கும் வகையில் இறைச்சி மற்றும் மீன் கழிவுகளை அரைத்து மறுசுழற்சி செய்யும் வகையிலான எந்திரங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களிலிருந்து இறைச்சிக் கழிவுகள்,வாகனங்கள் மூலம் இங்கு கொண்டு வரப்பட்டு அரைக்கப்படுகிறது. இதுதவிர கேரள மாநிலத்திலிருந்தும் இறைச்சி கழிவுகள் இங்கு கொண்டு வரப்படுவதாக தெரிகிறது.இதனால் இந்த பகுதியிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை துர்நாற்றம் வீசுகிறது.

    அழுகிய இறைச்சி கழிவுகள் மட்டுமல்லாமல் நோய் தாக்கி இறந்த கோழிகளும் இங்கு கொண்டு வரப்படுவதால் நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன் இறைச்சி கழிவுநீரை சுத்திகரிக்காமல் நிலத்தில் விடுவதால் நிலத்தடி நீர் பாழாகி விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.பொதுவாக இறைச்சிக் கழிவுகள் இங்கு கொண்டு வரப்படுவதும் அரைக்கப்படுவதும் இரவு நேரங்களில் ரகசியமாக நடைபெறுகிறது. எனவே பணிகளை தடுத்து நிறுத்தும் விதமாக இரவில் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்த வாகனங்களை சிறைபிடித்தோம்.அதுகுறித்து வருவாய்த்துறை,நகராட்சி,சுகாதாரத்துறை,மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தும் யாரும் வரவில்லை.இதனால் இறைச்சி கழிவுகளுடன் வாகனங்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தோம்.மேலும் சட்ட விதிகளை மீறி நகராட்சி குப்பை கிடங்கில் இறைச்சி கழிவுகளை அரைக்கும் எந்திரம் நிறுவ அனுமதியளித்த அதிகாரியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று போலீசில் புகார் அளித்துள்ளோம் என்றனர்.

    ×