search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Young Man Kidnapped"

    • குழந்தையுடன் பெண்ணை கடத்திச்சென்ற வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • போலீசார் வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அடுத்துள்ள வேந்தனூரை சேர்ந்த சக்திவேல்(29). இவருக்கு மஞ்சுளாதேவி(28) என்ற மனைவியும், தேவிஸ்ரீ(4) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது தனது மனைவி மற்றும் மகளை காணவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சக்திவேல் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள முளையூரை சேர்ந்த ஆனந்த்(25) என்பவருடன் தனது மனைவி பழகி வந்ததாகவும், அவர்தான் மனைவி மற்றும் மகளை கடத்திச்சென்றிருக்ககூடும் என குறிப்பிட்டுள்ளார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    காதல் தகராறில் வாலிபரை காரில் கடத்திய கும்பலை 3 மணி நேரத்தில் போலீசார் மீட்ட சம்பவம் வேலூர், காவேரிப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    வேலூர் அடுத்த அரப்பாக்கத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 28). இவர் புதுவசூர் பகுதியில் உள்ள ஒரு கார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வாணாபாடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வேணுகோபாலிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் வேணுகோபாலிடம், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. வேணுகோபால் மீண்டும் மறுத்துள்ளார்.

    இந்த நிலையில் அப்பெண்ணின் தரப்பை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் நேற்று வேணுகோபால் வேலை செய்யும் கம்பெனிக்கு வந்தனர். அங்கு வேணுகோபாலை சந்தித்து திருமணம் குறித்து பேசினர். கம்பெனிக்கு வெளியே வேணுகோபாலிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த கும்பல் திடீரென அவரை காரில் தூக்கிப்போட்டு கடத்திச் சென்றனர். இதைப்பார்த்த அக்கம்பெனியின் மேலாளர் உடனடியாக சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்திக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடனடியாக மாவட்டத்தின் அனைத்து போலீஸ் நிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் வேணுகோபாலை கடத்திச் சென்ற கார் எண் குறித்தும் அக்கம்பெனியின் மேலாளர் போலீசாரிடம் தெரிவித்திருந்தார். அந்த எண்ணை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையை நடத்தினர்.

    கடத்தப்பட்ட வேணுகோபாலை, அக்கும்பல் காவேரிப்பாக்கம் அருகே உள்ள திருப்பாற்கடல் பாலாற்றுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அக்கும்பலில் 3 பேர் வேலூரில் உள்ள ஒரு மோட்டார்சைக்கிளை எடுப்பதற்காக வேலூருக்கு அதே காரில் சென்றனர். வேணுகோபால் மீதம் உள்ள 3 பேரின் பிடியில் இருந்தார்.

    கார் வாலாஜா சுங்கச்சாவடி அருகே வந்தபோது அங்கிருந்த போலீசார் அந்த காரை பார்த்தனர். அதில் வேணுகோபால் இல்லை. இதுகுறித்து வாலாஜா போலீசார் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அந்த காரை வாலாஜா போலீசார் பின்தொடர்ந்து வந்தனர். சத்துவாச்சாரி அருகே கார் வந்தபோது சத்துவாச்சாரி போலீசாரும், வாலாஜா போலீசாரும் அக்காரை மடக்கி காரில் இருந்த 3 பேரையும் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் ராணிப்பேட்டை சீனிவாசபேட்டை தெருவை சேர்ந்த உமாமகேஸ்வரன் (29), காவேரிப்பாக்கம் அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த பூவரசன் (30), ராணிப்பேட்டை காரை பகுதியை சேர்ந்த புத்தன் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் வேணுகோபாலை அவர்களின் கூட்டாளிகள் 3 பேர் பிடித்து வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

    பின்னர் போலீசார், பிடிபட்ட 3 பேரிடம் உங்களது கூட்டாளிகளுக்கு போன் செய்து வேணுகோபாலை விடுவிக்குமாறு கூறினர். இதையடுத்து அவர்கள் தங்களது கூட்டாளிகளுக்கு போன் செய்து அவரை விடுவிக்குமாறு கூறினர். அதைத்தொடர்ந்து வேணுகோபாலை அவர்கள் விடுவித்தனர். பின்னர் அவர், தனது உறவினர் பாஸ்கர் என்பவர் மூலம் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். வேணுகோபாலை விடுவித்த 3 பேரும், தலைமறைவாகி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர். சினிமா பாணியில் வாலிபர் மீட்கப்பட்ட சம்பவம் வேலூர், காவேரிப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×