search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "western toilet"

    • இந்தியன் டாய்லெட், வெஸ்டர்ன் டாய்லெட் இரண்டையும் பயன்படுத்துகிறவர்களும் உண்டு.
    • ஒவ்வொரு மனிதருக்கும் இது முக்கியமான பிரச்சினை.

    உலகில் கடந்த காலங்களில் எல்லா துறைகளிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கற்பனைக்கு அப்பாற்பட்ட வளர்ச்சி பல துறைகளில் ஏற்பட்டிருந்தாலும், மனிதர்களின் அத்தியாவசிய தேவையான 'டாய்லெட்' வடிவமைப்பில் அப்படி பெரிய அளவில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை என்பது உண்மை. ஏற்கனவே சொன்னதுபோல, உலகம் முழுவதும் டூ பாத்ரூம் அதாவது டாய்லெட் போக இரண்டே இரண்டு முறைகள்தான் இன்றைய தேதி வரை மிக அதிகமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    ஒன்று: கால் முட்டிகள் இரண்டையும் மடக்கி குத்தவைத்து இருந்து கொண்டு (SQUATTING POSITION) மலம் கழிப்பது. இதை 'இந்தியன் ஸ்டைல்' என்று சொல்வார்கள்.

    இரண்டு: நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போன்று உட்கார்ந்து கொண்டு மலம் கழிப்பது. இதை 'வெஸ்டர்ன் ஸ்டைல்' என்று சொல்வார்கள்.

    டாய்லெட் வசதி இல்லாத இடங்களிலும், டாய்லெட் அமைப்பு இல்லாத இடங்களிலும் குத்தவைத்து உட்கார்ந்திருந்து மலம் கழிக்கும் முறைதான் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, டாய்லெட்டை உபயோகப்படுத்துவது என்பது, ஒரு தனிப்பட்ட, அந்தரங்கமான விஷயமாகவே இன்றும் கருதப்படுகிறது. இந்திய ஜனத்தொகையில் குறிப்பிட்ட சதவீத மக்கள், இன்னும் கட்டாந்தரையிலும், வெட்ட வெளியிலும், இருள் மறைவிலும், ஆறு, குளம், ஏரி, வாய்க்கால் கரையோரங்களிலும், ஊருக்கு ஒதுக்குப்புறங்களிலும், உபயோகத்தில் இல்லாத நிலங்களிலும் தான் மல ஜலம் கழித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போன்று, உட்கார்ந்துகொண்டு மலம் கழிப்பது என்பது, மேலை நாடுகளில் ஆரம்பித்து, அங்கு தான் அதிகமாக உபயோகத்திலும் இருந்து வருகிறது. அதனால்தான் இதனை 'வெஸ்டர்ன் டாய்லெட்' என்கிறோம். நம்மவர்கள் முன்பெல்லாம் களைக்கும் அளவுக்கு உழைப்பவர்களாக இருந்தார்கள். அதனால் வயதான காலத்திலும் அவர்களால் குத்துக்காலிட்டு உட்கார முடிந்தது. இப்போது உடலுழைப்பு காணாமல்போய், மூளைக்கு அதிக வேலைகொடுத்து, மூட்டுகளை மடங்காத நிலைக்கு கொண்டு வந்திருக்கிறோம்.

    வயதானவர்கள், விபத்துகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபரேஷன் செய்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்களின் சவுகரியத்திற்காகத்தான் 'வெஸ்டர்ன் டாய்லெட்' அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தியன் டாய்லெட், வெஸ்டர்ன் டாய்லெட் இரண்டையும் பயன்படுத்துகிறவர்களும் உண்டு. அதனால்தான் பொதுகழிப்பறைகள் மற்றும் ரெயில்களில் இரண்டுவிதமான டாய்லெட்டுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தற்போது 'வெஸ்டர்ன் டாய்லெட்' பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    தானாகவே தண்ணீர் பீய்ச்சி சுத்தம் பண்ணும் 'WATER CLOSET' அமைப்பு 1880-ம் ஆண்டு பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு இந்த ஸ்டைல் பிரிட்டனிலிருந்து ஐரோப்பா முழுவதுக்கும் பரவியது. செயினால் இழுக்கும் வெஸ்டர்ன் டாய்லெட் அமைப்பு 1890-ல் அமெரிக்காவில் பணக்காரர்கள் வீட்டிலும், பிரபலமான ஓட்டல்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

    வெஸ்டர்ன் டாய்லெட்டில் மலம் கழிக்கும்போது உடலை கொஞ்சம் முன்பக்கமாக வளைத்தோ அல்லது முதுகை வளைக்காமல் 90 டிகிரியில் முதுகை நேராக வைத்துக்கொண்டோதான் நாம் உட்கார்ந்திருப்போம். உட்கார்ந்திருப்பதற்கு வேண்டுமானால் இது சவுகரியமாக இருக்குமே தவிர வயிறு சுத்தமாக காலியாகாது என்றுதான் சொல்லவேண்டும்.

    பெருங்குடலின் கடைசிப் பகுதியும் ஆசன வாய்ப் பகுதியும் சேரும் இடமானது 90 டிகிரி கோணத்தில் 'L' வடிவத்தில் இருக்கும். இந்த சந்திப்பு கோணத்திற்கு 'ஏனோரெக்டல் ஆங்கிள்' ANORECTAL ANGLE) என்று பெயர். இந்தப் "பெருங்குடல் - ஆசன வாய்ப்பகுதி சந்திப்பு" மலம் கழிக்கும் செயலில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

    1996-ம் ஆண்டு ஆராய்ச்சியாளர் 'டாகர்ட்' என்பவர் பல்வேறு நிலைகளில் மனிதனை உட்கார வைத்து மனிதனின் "பெருங்குடல்-ஆசன வாய்ப் பகுதி சந்திப்பை" பல கோணங்களில் அளவெடுத்துப் பார்த்தார். பின்பு அவர், "சாதாரணமாக 'L' வடிவத்தில் இருக்கும் கோணம் குத்தவைத்து உட்கார்ந்து மலம் கழிக்கும்போது, சற்று நேராகிறது" என்று தெரிவித்தார். அதாவது குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கும்போது பெருங்குடலின் கடைசிப்பகுதியும், ஆசன வாய்ப்பகுதியும் நேராக வருகிறதாம். குத்துக்காலிட்டு உட்கார்ந்து மலம் கழிக்கும் போது, வயிற்றுக்கு நாம் கொடுக்கும் அழுத்தம் குறைந்து விடுகிறது என்றும் மலச்சிக்கலும், மூலநோய் வருவதும் குறைகிறது என்றும் டாகர்ட் கூறியுள்ளார்.

    வயதானவர்களுக்கு, நோய்வாய்ப்பட்டவர் களுக்கு, வெஸ்டர்ன் டாய்லெட் அமைப்பு மிகவும் உபயோகமாக இருப்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இந்திய டாய்லெட் அமைப்பை உபயோகிப்பதே உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இந்தியன் டாய்லெட் அமைப்பை உபயோகிக்கும்போது இடுப்பிலிருந்து கணுக்கால் வரை உள்ள எல்லா மூட்டுகளும் நன்றாக இயங்குகின்றன. திடக்கழிவும் முழுமையாக வயிற்றிலிருந்து வெளியேறிவிடுகிறது. அதனால் இந்திய டாய்லெட் அமைப்பில் மலம் கழிப்பதுதான் நல்லது என்று பிரபல அமெரிக்க டாக்டர்.எம்.கே.ரிஜ் என்பவர் கூறியுள்ளார்.

    வெஸ்டர்ன் டாய்லெட்டை உபயோகித்துவிட்டு திடீரென்று இந்தியன் டாய்லெட்டில் போய் உட்காரச் சொன்னால் அவர்களால் முடியாது. மிகவும் கஷ்டப்படுவார்கள். அதனால் சிறு வயதிலிருந்தே இரண்டு டாய்லெட்டுகளையும் உபயோகிக்கும் பழக்கத்துக்கு தயாராகுவதே நல்லது. ஒவ்வொரு மனிதருக்கும் இது முக்கியமான பிரச்சினை. இதில் அலட்சியம்காட்டவேண்டாம்.

    கட்டுரை: டாக்டர் எஸ்.அமுதகுமார், பொது மற்றும் குடும்ப நல மருத்துவர், சென்னை.

    இப்போது வெஸ்டன் டாய்லெட் கலாசாரம் அதிகரித்திருக்கும் வேளையில், அதனை முறையாகப் பயன்படுத்துவது பற்றிய புரிதல் நம்மிடம் இன்னும் போதுமான அளவு இல்லை.
    பொது இடத்தில் மலம் கழிக்காமல் கழிவறையைப் பயன்படுத்துவது அவசியம் என்பதைப் போலவே, கழிவறையைப் பயன்படுத்திய பிறகு அதனை முறையாக சுத்தம் செய்வதும் அவசியம். இப்போது வெஸ்டன் டாய்லெட் கலாசாரம் அதிகரித்திருக்கும் வேளையில், அதனை முறையாகப் பயன்படுத்துவது பற்றிய புரிதல் நம்மிடம் இன்னும் போதுமான அளவு இல்லை. அந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார ஆர்வலர்கள் முக்கியமான ஒரு விஷயத்தை முன் வைக்கிறார்கள்.

    வெஸ்டன் டாய்லெட்டைப் பயன்படுத்திய பிறகு, அதனை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். அதன்பிறகு, சில நிமிட இடைவெளிகளில் டாய்லெட் சீட்டினை மூடி வைத்து அதன் பிறகு ஃப்ளஷ் செய்ய வேண்டும். தண்ணீரை ஃப்ளஷ் செய்யும்போதும் மூடிவைக்காவிட்டால், அதிலிருந்து வெளியேறும் கிருமிகளும், மலம் கலந்த அசுத்த நீரும் கழிவறையின் பிற பகுதிகளுக்கும் பரவுகிறது. இந்த நுண்கிருமிகள் கழிவறையிலுள்ள தரை விரிப்புகள், திரைச்சீலைகள் மற்றும் அங்கு நாம் வைத்திருக்கக்கூடிய டூத் ப்ரஷ்கள், துண்டு போன்ற பிற பொருட்களின் மீதும் படிகிறது.

    இப்படி அசுத்த நிலையில் உள்ள கழிவறையையும், அங்குள்ள மற்ற பொருட்களையும் பயன்படுத்திவிட்டு வெளியேறும்போது நமது கைகள், கால்கள் போன்ற உடல் உறுப்புகளின் மூலமும் கழிவறையிலுள்ள கிருமிகள் ஒட்டிக் கொள்கிறது.

    இதனால் வீட்டிலுள்ள குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக உள்ள நபர்களுக்கு கிருமித்தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, வெஸ்டன் டாய்லெட்டின் மீதுள்ள மூடியை சரியான முறையில் மூடி வைப்பதன் மூலமும், மூடிவைத்த பிறகு ஃப்ளஷ் செய்வதன் மூலமும் இதுபோன்ற கிருமித் தொற்று ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
    ×