search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vaikasi visakam festival"

    திருப்பரங்குன்றம், சோலைமலையில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று முருகப்பெருமான் திருவீதி உலா வந்தார்.
    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் முதற்படை வீடு என்ற பெருமை கொண்ட திருத்தலமாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவில் அமைந்து உள்ளது. அறுபடைவீடுகளிலேயே திருமண திருத்தலமாகவும் இந்த கோவில் விளங்குகிறது. கோவிலின் கருவறை மலையை குடைந்து அமைந்துள்ளதால், குடவரை கோவிலாக சிறப்பு கொண்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும்.

    அதே போல இந்த ஆண்டிற்கான விசாக திருவிழா கடந்த 19-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் இரவு 7 மணிக்கு உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு சாமி எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று முருகப்பெருமான் திருவீதி உலா நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 28-ந்தேதி விசாக திருவிழா நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் இருந்து வள்ளி, தெய்வானையுடன் சண்முகப் பெருமான், தனது சன்னதியை விட்டு இடம் பெயர்ந்து கொறடு மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சாமிக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடக்கிறது.

    முன்னதாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திகடனாக பால்குடம் சுமந்தும், பல்வேறு வகையான காவடிகளை எடுத்தும் கோவிலுக்கு வருகிறார்கள். திருவிழா காலங்களில் உற்சவர் சன்னதியில் இருந்து சாமி தெய்வானையுடன் (உற்சவர்) எழுந்தருளி நகர் வலம் வருவது வழக்கம். ஆனால் விசாக திருவிழாவில் மட்டும் ஆண்டிற்கு ஒரு முறை சண்முகர் தனது சன்னதியை விட்டு இடம்பெயருவது தனி சிறப்பாகும்.

    இதேபோல அழகர்மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலைமுருகன் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது வைகாசி மாத வசந்த உற்சவ திருவிழாவாகும். இந்த விழா கடந்த 19-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதில் காப்புகட்டுதல், சண்முகார்ச்சனை, மகாபிஷேகம், சாமி புறப்பாடு நடந்தது.

    நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்று, மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பிரகாரங்கள் வழியாக முருகப்பெருமான் புறப்பாடு நடந்தது. விழாவை தொடர்ந்து தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வருகிற 28-ந்தேதி 10-ம் நாள் திருவிழாவுடன் வசந்த உற்சவ திருவிழா நிறைவுபெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து உள்பட திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

    முருக பெருமான் பிறந்த நாளான வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால், ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    விசாக தினத்துக்கு முந்தைய நாளான 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    விசாக திருநாளான 28-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    வைகாசி விசாக திருவிழாவின் மறுநாளான 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்து முருகபெருமானை வழிபடுவார்கள்.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    தமிழ்க் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தமிழ்க் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனி திருத்தலத்தில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை போன்ற பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. இதில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கொண்டாடப்படும் வைகாசி விசாக திருவிழா ‘வசந்த உற்சவம்’ என்று வர்ணிக்கப்படுகிறது.

    இதையொட்டி இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக நேற்று காலை முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானைக்கு பெரியநாயகி அம்மன் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு பூஜைகளும், 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது.

    பின்னர் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி உட்பிரகாரம் சுற்றிவந்து, கொடிக்கட்டு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு விநாயகர் பூஜை, கொடிமரம் கொடிபட பூஜை, பாத்திய பூஜைகள் நடைபெற்றது, காலை 10.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து முத்துக்குமாரசாமி வள்ளி- தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    10 நாட்கள் கொண்டாடப்படும் வைகாசி விசாக திருவிழாவில் தினசரி காலை தந்த பல்லக்கிலும், மாலை 8 மணிக்கு மேல் தங்கமயில், வெள்ளி காமதேனு, கற்பக விருட்சம், வெள்ளி யானை, வெள்ளி காம தேனு, தங்க குதிரை, பெரிய தங்க மயில் வாகனம் போன்றவற்றில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவில் 6-ம் நாளான 27-ந் தேதி தனுர் லக்னத்தில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    7-ம் திருநாளான 28-ந் தேரோட்டம் நடக்கிறது.
    ×