என் மலர்
நீங்கள் தேடியது "trucks seized"
குறிஞ்சிப்பாடி:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சத்திரம் செல்லும் சாலையில் இன்று மதியம் குறிஞ்சிப்பாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒன்றன் பின் ஒன்றாக 26 லாரிகள் வேகமாக வந்து கொண்டிருந்தன. அந்த லாரிகளை போலீசார் வழி மறித்தனர். இதை பார்த்த லாரி டிரைவர்கள் 14 பேர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். மீதி 12 லாரிகளில் வந்த டிரைவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
அதில் அவர்கள் நாகை மாவட்டம் வேடங்குடி கிராமத்தில் உள்ள ஆற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தி, அவற்றை சென்னைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்திய 26 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
லாரியை ஓட்டி வந்த காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல் பட்டு பள்ள மேடை சேர்ந்த கன்னியப்பன் (வயது 39), மதுராந்தகத்தை சேர்ந்த ஜெயக்குமார் (36), செந்தில், ஏழுமலை, சக்திவேல் உள்ளிட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
தப்பி ஓடிய 14 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரிகள் அனைத்தையும் குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மணல் கடத்தி வந்த 26 லாரிகளை ஒரே நேரத்தில் போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






