என் மலர்
நீங்கள் தேடியது "transfer certificate"
- 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் 25-க்கும் மேற்பட்டவர்களுக்கும் டி.சி வழங்கியுள்ளனர்.
- டி.சி. பெற்ற மாணவர்கள் கட்டிட பணி, ஆபீஸ் பணி என வேலைக்கு செல்கின்றனர்.
கோவை:
கோவை ஒண்டிப்புதூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையானது 900 வரை இருந்த நிலையில் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. தற்போது பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 450 மாணவர்களே படித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளியின் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்களே காரணம் என பெற்றோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நடவடிக்கையால், பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியராக சாந்தி என்பவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பள்ளிக்கு சரியாக வராத மற்றும் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை கண்டறிந்து அந்த மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ்(டி.சி) வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி பள்ளியில் 7-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 49 மாணவர்களுக்கு டி.சி கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் 25-க்கும் மேற்பட்டவர்களுக்கும் டி.சி வழங்கியுள்ளனர்.
இந்த நடவடிக்கை அனைத்தும் ஜூலை முதல் டிசம்பர் வரை நடந்துள்ளது. டி.சி.பெற்ற மாணவர்களின் விவரங்கள் தொடர்பான தகவல்கள் அவர்களது எமிஸ் எண் மற்றும் டி.சி. வாங்கிய தேதியுடன் சமூக வலைதளத்தில் பரவியது.
டி.சி. பெற்ற மாணவர்கள் கட்டிட பணி, ஆபீஸ் பணி என வேலைக்கு செல்கின்றனர். சிலர் வீடுகளில் இருக்கின்றனர். டி.சி. வாங்கிய பெரும்பாலான மாணவர்கள் தாங்கள் சரியாக படிக்கவில்லை என கூறி பெற்றோரை அழைத்து டி.சி. வாங்கி செல்ல கூறியதாகவும், அதன்படி டி.சி. வாங்கியதாகவும் தெரிவித்தனர்.
பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற செயல்களில் தனியார் பள்ளிகளை போன்று அரசு பள்ளிகளும் செயல்பட்டு வருவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஓரே ஆண்டில் 49 மாணவர்களுக்கு டி.சி. அளிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் விசாரித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ள நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணையை தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறியதாவது:-
மாணவர்களுக்கு டி.சி. வழங்கப்பட்டது என்பது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியையிடம் விளக்கம் கேட்கப்படும். அவரது விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் 49 மாணவர்கள் டி.சி. வாங்கி சென்றுள்ள நிலையில், அந்த மாணவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதொடர்பான விசாரணை தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
10-ம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ள காரணத்தை சுட்டிக்காட்டி பிளஸ்-1 வகுப்பில் அதே பள்ளியில் சேர்க்க மறுப்பதை தவிர்க்கவும், ஒரே பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு பிளஸ்-1 சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கவும் வேண்டும்.
பதினோராம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதாலும், சில பாடங்களில் தோல்வியுற்றதாலும் இக்காரணங்களை சுட்டிக்காட்டி அந்த மாணவர்களை மாற்றுச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளுமாறு பெற்றோரை பள்ளி நிர்வாகம் வற்புறுத்துவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுபோன்ற செயல்பாடு முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல. அவ்வாறு நிர்ப்பந்தம் செய்யக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
பதினோராம் வகுப்பில் தோல்வியுற்ற அந்த மாணவர்கள் தொடர்ந்து பனிரெண்டாம் வகுப்பில் படிக்க அனுமதித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அம்மாணவர்களை தேர்வில் ஆசிரியர்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களையும் தோல்வியுற்ற மாணவர்களையும் ஊக்குவித்து வெற்றி பெறச்செய்வதே பள்ளியின் முதன்மையான கடமை.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு இதுகுறித்து புகார் வரப்பெற்றால் உடனடியாக விசாரணை செய்து மாணவர்களின் நலன் பாதிக்காத வகையில் பள்ளிகளுக்கு தக்க அறிவுரை வழங்கி துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






