search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வற்புறுத்தி மாற்று சான்றிதழ் கொடுத்தால் நடவடிக்கை
    X

    11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வற்புறுத்தி மாற்று சான்றிதழ் கொடுத்தால் நடவடிக்கை

    11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பள்ளியில் வற்புறுத்தி மாற்றுச்சான்று கொடுக்கக்கூடாது. அவ்வாறு கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    10-ம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ள காரணத்தை சுட்டிக்காட்டி பிளஸ்-1 வகுப்பில் அதே பள்ளியில் சேர்க்க மறுப்பதை தவிர்க்கவும், ஒரே பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு பிளஸ்-1 சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கவும் வேண்டும்.

    பதினோராம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதாலும், சில பாடங்களில் தோல்வியுற்றதாலும் இக்காரணங்களை சுட்டிக்காட்டி அந்த மாணவர்களை மாற்றுச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளுமாறு பெற்றோரை பள்ளி நிர்வாகம் வற்புறுத்துவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுபோன்ற செயல்பாடு முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல. அவ்வாறு நிர்ப்பந்தம் செய்யக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

    பதினோராம் வகுப்பில் தோல்வியுற்ற அந்த மாணவர்கள் தொடர்ந்து பனிரெண்டாம் வகுப்பில் படிக்க அனுமதித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அம்மாணவர்களை தேர்வில் ஆசிரியர்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களையும் தோல்வியுற்ற மாணவர்களையும் ஊக்குவித்து வெற்றி பெறச்செய்வதே பள்ளியின் முதன்மையான கடமை.

    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு இதுகுறித்து புகார் வரப்பெற்றால் உடனடியாக விசாரணை செய்து மாணவர்களின் நலன் பாதிக்காத வகையில் பள்ளிகளுக்கு தக்க அறிவுரை வழங்கி துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×