என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்கள்"

    • அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் சம்பளம் வழங்குகின்றனர். அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும்.
    • ரூ.350 கோடியில் கோவில்களில் சிலை பாதுகாப்பு மையம் கட்ட 2018-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இதுவரை ஒரு கோவில் மட்டும் தான் கட்டபட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்து ஓய்வு பெற்ற பொன்.மாணிக்கவேல் இன்று நெல்லைக்கு வருகை தந்தார். அவர் நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 38 ஆயிரம் கோவில்கள் உள்ளது. இதில் நலிவடைந்த கோவில்கள் பல உள்ளது. கோவில்கள் பணம் வருமானத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. இது தவறான முன்னுதாரணம். இது போன்று பிரிப்பது வியாபார நோக்கமாக மாறிவிடும்.

    தூத்துக்குடி மாவட்டம் நானல்காடு பகுதியில் உள்ள திருகண்டீஸ்வரர் கோவில் மிகவும் சிதிலமடைந்து உள்ளது. சிதிலமடைந்த கோவில் ஆபத்தான நிலை இருப்பதால் கோவில் மூடப்பட்டுள்ளது. அது பாண்டியர் காலத்து கோவில். உடனடியாக சிதலமடைந்த கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

    கோவில் பூஜைக்கு வயதான அர்ச்சகர்களை நியமித்துள்ளனர். அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் சம்பளம் வழங்குகின்றனர். அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும்.

    கோவில்களை வரலாற்று பொக்கிஷங்களாக பார்க்க வேண்டும். கோவில்கள் தமிழ் பேரரசர்களால் கட்டப்பட்டுள்ளது. இறை நம்பிக்கை உள்ளவர்கள் உடனடியாக அதனை காப்பாற்ற வேண்டும். ரூ.350 கோடியில் கோவில்களில் சிலை பாதுகாப்பு மையம் கட்ட 2018-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இதுவரை ஒரு கோவில் மட்டும் தான் கட்டபட்டுள்ளது. உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை பணிகள் முழுமை பெறவில்லை. பந்தநல்லூர் கோவில் திருமேனி பாதுகாப்பு மையம் மட்டும் கட்டபட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அங்கும் நீதிமன்றத்தில் நாங்கள் தெரிவிக்கப்பட்ட அளவீடுகளில் கட்டப்படவில்லை. 100-க்கும் மேற்பட்ட கோவில்களில் கட்டுமான பணிகள் நடந்து வருவதாக சொல்லி வருகின்றனர்.

    தமிழகத்தை ஆளுகின்றவர்களும், முதலமைச்சராக வர ஆசைப்படுபவர்களும் கோவில்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருச்சியை அடுத்த மணச்சநல்லூருக்கு வடமேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்பைஞ்ஞீலி திருத்தலம். இந்த கோவிலின் வரலாற்றை பார்க்கலாம்.
    திருச்சியை அடுத்த மணச்சநல்லூருக்கு வடமேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்பைஞ்ஞீலி திருத்தலம். இங்கு விசாலாட்சி அம்மன் சமேதராக ஞீலிவனேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இந்தக் கோவில் நிலமடத்திற்கு கீழே, ஊரின் நடுவில் அமைந்துள்ளது. இத்தல மூலவர் சுயம்பு மூர்த்தி. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்தது இந்த ஆலயம். வசிஷ்ட முனிவருக்கு, ஈசன் நடனக் காட்சியை காட்டி அருளிய தலம் இதுவாகும். எனவே இத்தலம் மேலைச் சிதம்பரம் என்று அழைக்கப்படு கிறது. இத்தல இறைவனை அம்பாளும் வழிபட்டு பேறு பெற்றுள்ளார்.

    இங்கு இரண்டு அம்பாள் சன்னிதிகள் உள்ளன. ஒன்று மூலவருக்கு இடதுபுறம் கிழக்கு நோக்கியும், மற்றொன்று தெற்கு நோக்கியும் உள்ளன. இத்தல விசாலாட்சி அம்மன் சிலையில் பின்னம் ஏற்பட்டதால், புதியதாக ஒரு சிலை செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து பழைய அம்மன் சிலையை அகற்றப்பட்டது. அப்போது ஊரார் கனவில் தோன்றிய அம்மன், 'உங்கள் வீட்டில் யாருக்காவது உடலில் ஊனம் ஏற்பட்டால் வீட்டை விட்டு துரத்தி விடுவீர்களா?' என்று கேட்க, ஊர் மக்கள் மீண்டும் பழைய அம்மன் சிலையை மற்றொரு சன்னிதியில் வைத்து வழிபடத் தொடங்கினர்.

    இந்தத் தலத்தில் வாழை மரமே தல விருட்சமாக உள்ளது. இங்குள்ள வாழை மரம் 'ஞீலி' என்றொரு வகையைச் சார்ந்தது. இதன் இலை, காய், கனி அனைத்தும் இத்தல ஈசனுக்கே பயன்படுத்தப்படுகிறது. இறைவனுக்கு இவை நிவேதனம் செய்யப்பட்ட பிறகும் கூட, பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படுவதில்லை. நைவேத்தியத்திற்கு பின்னர் அவற்றை நீரில் விட்டு விடுகின்றனர். 'ஞீலி' வகையைச் சேர்ந்த வாழை வேறு இடங்களில் பயிரிடப்படுவதில்லை. ஏனெனில் இந்த வகை வாழை மரத்தில் இருந்து கிடைக்கும் இலை, காய், கனிகளைப் பயன்படுத்தினால் நோய் தாக்கும் என்பதால் இவ்வாறு செய்யப்படுவதாக காரணம் கூறப்படுகிறது.

    திருமணத் தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள வாழை மரத்திற்கு தாலி கட்டி பரிகார பூஜை செய்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். சப்த கன்னியர்களே, அம்மனின் அருளால் இத்தலத்தில் வாழை மரமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    திருக்கடையூரில் சிவபெருமானால் சம்ஹாரம் செய்யப்பட்ட எமதர்மன், இத்தல இறைவனின் அருளால், தைப்பூச நாளன்று மீண்டும் உயிரையும், பணியையும் பெற்றான். எனவே இங்கு எமதர்மனுக்கு தனிச் சன்னிதி உள்ளது. இங்குள்ள சுவாமியின் பாதத்தின் கீழ், குழந்தையாக எமன் இருக்கிறார். இத்தல இறைவனை வழிபட்டால் எம பயம் நீங்கும். அறுபதாம் கல்யாணமும், ஆயுள் ஹோமமும் இங்கு அதிகமாக நடைபெறுகிறது.

    அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர், சிவதல யாத்திரையின் ஒரு பகுதியாக இத்தல இறைவனை தரிசிக்க வந்து கொண்டிருந்தார். வழியில் அவருக்கு பசி அதிகரித்தது. அப்போது ஈசன், அர்ச்சகர் உருவத்தில் வந்து அப்பருக்கு பொதி சோறு கொடுத்து பசியைப் போக்கினார். இவர் 'சோற்றுடைய ஈஸ்வரர்' என்ற பெயரில், கோவிலின் முன்புறத்தில் இரண்டாம் கோபுர வாசலில் தனிச் சன்னிதியில் அருள்புரிகிறார். சித்திரை மாத அவிட்டம் நட்சத்திர நாளில், இந்தச் சன்னிதியில் அப்பருக்கு, ஈசன் சோறு படைத்த விழா நடைபெறுகிறது. சித்திரையில் இந்த ஆலயத்தில் 10 நாள் பிரமோற்சவம் நடைபெறும்.

    இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் ஒன்பது குழியில் விளக்குத் தீபங்களாக வழிபடப்படுகின்றன. இங்கு ராவணன் திருவாயில் கோபுரம் ஒன்று உள்ளது. ராவணன், நவக்கிரகங்களையும் அடக்கி, ஒன்பது படிகளாக மாற்றி வைத்திருந்தான். இத்தல ராவணன் வாசல் கோபுரத்தைக் கடந்து வந்தால், ஒருவருடைய நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் விலகும் என்பது ஐதீகம்.
    பாலக்காட்டில் உள்ள மீன்குளத்திப் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபடும் வணிகர்களுக்கு, அவர்களது வணிகம் பெருகிச் செல்வச் செழிப்பு ஏற்படும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
    ள மாநிலம், பாலக்காடு அருகில் பல்லசேனா எனும் கிராமத்தில் அமைந்திருக்கும் மீன்குளத்திப் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபடும் வணிகர்களுக்கு, அவர்களது வணிகம் பெருகிச் செல்வச் செழிப்பு ஏற்படும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. மேலும், இங்கு வழிபடும் பக்தர்களுக்குத் திருமணப்பேறு, குழந்தைப்பேறு ஆகியவை கிடைப்பதுடன் எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும் என்கின்றனர்.

    தல வரலாறு :

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் சிதம்பரம் பகுதியில் வைர வணிகம் செய்து வந்த வீரசைவ வேளாள (மன்னாடியார்) வகுப்பைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினர், அப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தால் தங்களது வணிகத்தைத் தொடர்ந்து செய்ய முடியாமல் அங்கிருந்து வெளியேறினர்.

    சிதம்பரத்திலிருந்து வெளியேறிய அவர்கள், முதலில் அவர்களது குலதெய்வமான மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கினர். அவர்களில் இளம் வயதினராக இருந்த ஒருவன், கோவிலின் பொற்றாமரைக் குளத்திலிருந்து ஒரு சிறிய கல்லை எடுத்துத் தன்னுடன் வைத்துக் கொண்டான்.

    அக்குழுவினர் மதுரையிலிருந்து, தாங்கள் வாழ்வதற்கேற்ற ஒரு நல்ல இடத்தைத் தேடித் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். சில நாட்கள் பயணத்திற்குப் பிறகு, கேரள மாநிலம், பாலக்காடு அருகிலுள்ள பல்லசேனா என்னுமிடத்தைச் சென்றடைந்தனர். அந்த இடம் அதிக வளமுடையதாக இருந்ததால், அங்கேயே தங்கிக் கொள்வதென முடிவு செய்தனர். தொடக்கத்தில், அந்தப் பகுதியில் வைர வணிகத்தைச் செய்யத் தொடங்கிய அவர்கள், நாளடைவில், வெளியூர்களுக்கும் சென்று வைர வணிகம் செய்து வளமடைந்தனர்.

    மதுரை மீனாட்சியம்மன் கோவில் குளத்திலிருந்து கல்லை எடுத்து வந்தவர், அருகிலுள்ள ஊர்களுக்கு வணிகம் செய்யச் செல்வதாக இருந்தால், அவர் எடுத்து வந்த கல்லை மதுரை மீனாட்சியம்மனாக நினைத்து வழிபட்டுக் கொள்வார், அதிகத் தொலைவிலிருக்கும் ஊர்களுக்குச் செல்ல வேண்டியிருந்தால், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு நேரடியாகச் சென்று வழிபட்ட பிறகு வணிகத்துக்குச் செல்வது என்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவர் எப்போது வணிகத்துக்குச் சென்றாலும், அவர் கோவில் குளத்திலிருந்து எடுத்து வந்த சிறிய கல்லையும் எடுத்துக் கொண்டு செல்வார்.

    இந்நிலையில் ஒருநாள், அவர் வணிகத்துக்காகத் தொலைவிலுள்ள வெளியூர் ஒன்றுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவர் வணிகத்துக்குத் தேவையான பொருட்களை ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டு, கையில் பனை ஓலைக் குடை ஒன்றையும் பிடித்துக் கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்வதற்காகப் புறப்பட்டார்.

    செல்லும் வழியில் ஊருக்கு வெளியிலிருந்த குளம் ஒன்றில் நீராடிவிட்டுச் செல்ல விரும்பிய அவர், பனை ஓலைக்குடையை விரித்து வைத்து, அதன் கீழ் அவர் கொண்டு வந்திருந்த மூட்டையையும் இறக்கி வைத்து விட்டுக் குளத்தில் இறங்கி நீராடிக் கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு, வயதான காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் செல்ல முடியாதே என்று புதிய கவலை தோன்றியது. அந்தக் கவலையுடனேயே நீராடிவிட்டுக் கரைக்குத் திரும்பினார்.

    குளக்கரையில் அவர் வைத்திருந்த மூட்டையையும், குடையையும் எடுக்க முயன்றார். அவர் பல முறை முயற்சித்தும் அதை எடுக்க முடியவில்லை. அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை அழைத்து, அங்கிருக்கும் குடையையும் மூட்டையையும் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்று, குடும்பத்தினர்களை அழைத்துக் கொண்டு திரும்பினார். அவர்களாலும், அவைகளை எடுக்க முடியவில்லை.

    அப்போது அவர்களுக்குக் குடை இருந்த இடத்தில் சிறியதாக ஒரு ஒளிவட்டம் இருப்பது தெரிந்தது. அதனைக் கண்ட அவர்கள் ஜோதிடர் ஒருவரை அழைத்து வந்து, குடையையும் மூட்டையையும் எடுக்க முடியாமல் போனதையும், குடை இருக்குமிடத்தில் ஒளிவட்டம் தோன்றி மறைந்ததையும் தெரிவித்தனர்.

    அந்தச் ஜோதிடர், அங்கேயேச் சிறிது நேரம் அமர்ந்து தியானித்து விட்டு, அந்தக் குடை இருக்குமிடத்தில் மதுரை மீனாட்சியம்மன் குடியேறி இருப்பது பற்றிச் சொன்னார். அந்தக் குடும்பத்தினர் அவ்விடத்தில் அம்மனுக்குப் புதிதாகக் கோவில் எழுப்பி வழிபடத் தொடங்கினர். அங்கிருக்கும் அம்மன் குடையில் குடியமர்ந்த காரணத்தால், அந்த இடம் குடைமன்னு (குடமந்து) என்று முதலில் அழைக்கப்பட்டது.

    அதன் பின்னர், நானூறு ஆண்டுகள் கடந்து விட்டன. அந்தக் கோவிலின் அர்ச்சகர் கனவில் தோன்றிய அம்மன், தனக்குப் புதிதாகப் பெரிய கோவில் ஒன்று கட்டி, அங்கு தன்னை இடமாற்றம் செய்யும்படிச் சொன்னார். அதன் பிறகு, ஊருக்கு நடுவில் பெரிய அளவிலான கோவில் கட்டப்பட்டது.

    கோவில் அமைப்பு :

    கேரள மாநிலக் கோவில்களைப் போன்று கட்டப்பட்டுள்ள இக்கோவிலுக்கு வடக்கு மற்றும் மேற்கு திசையில் நுழைவாயில்கள் உள்ளன. தேக்கு மரத்தால் செய்யப்பட்ட கொடிமரத்தைச் செப்புத் தகடு கொண்டு அலங்கரித்துள்ளனர். கோவில் கருவறையில் அம்மன் பகவதியம்மனாகக் கோவில் கொண்டிருக்கிறார். மீன்கள் அதிகமாகக் குதித்து விளையாடிக் கொண்டிருந்த குளத்தினருகே இந்த அம்மன் தோன்றியதால், அம்மனுக்கு மீன்குளத்திப் பகவதி அம்மன் என்றே அழைக்கப்படுகிறார்.

    இக்கோவில் வளாகத்தில், சப்த மாதர்கள், கணபதி, வீரபத்திரர், துர்க்கை, பரமேஸ்வரன், பைரவர், பிரம்ம ராட்சஸ், சாஸ்தா ஆகியோருக்குச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவிலுக்கு வெளியே பெரியகுளம் ஒன்றும் இருக்கிறது.

    மீன்குளத்திப் பகவதி அம்மன்

    வழிபாடு :

    தினமும் அதிகாலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் ஆலயம் வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. வார நாட்களில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை யிலும் வழிபாட்டுக்குத் திறந்து வைக்கப்படுகிறது.

    இத்தலத்தில் தினசரி வழிபாட்டில், மூன்று வேளை சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இவை தவிர, நிறப்பற சாந்தாட்டம், சோறூட்டல், தங்கத்தாலி, சுயம்வர மலர் வழிபாடு, மலர் வழிபாடு, ஐக்கிய சூத்திரம், பாக்கிய சூத்திரம், சரஸ்வதி மந்திர பூஜை, சந்தனம் சார்த்தல், வெடி பூஜை போன்ற சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகின்றன.

    சிறப்பு விழாக்கள் :

    இக்கோவிலில் கேரள நாட்காட்டியின்படி மேஷம் (சித்திரை) மாதம் வரும் அஸ்தம் நட்சத்திர நாளில் இக்கோவில் அம்மன் நிறுவப்பட்டதால், அந்நாளை அம்மனின் பிறந்தநாளாகக் கருதிச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. கேரள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதத்தில் எட்டு நாட்கள் வரை மாசித் திருவிழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா நாட்களில் ஓட்டன் துள்ளல், கதகளி போன்ற மலையாள ஆட்டங்களின் மூலம் புராணக் கதைகள் சொல்லும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    இவை தவிர, நவராத்திரி, திருக்கார்த்திகை, மண்டல விளக்குத் திருவிழா, பள்ளிசேட்டை, பைரவர் திருவிழா என்று பல சிறப்பு விழாக்கள் இக்கோவிலில் நடத்தப்படுகின்றன.

    வழிபாட்டுப் பலன்கள்:

    இக்கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களுக்குத் திருமணப்பேறு, குழந்தைப்பேறு ஆகியவை கிடைக்கும். மேலும், இங்கு வழிபடும் பக்தர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் என்கின்றனர். இக்கோவிலில் இருக்கும் அம்மன் வணிகம் செய்து வந்த குடும்பத்தினரின் வணிகத்தைச் செழிக்கச் செய்தவர் என்பதால், இங்கு வந்து வழிபடும் வணிகர்களின் வணிகம் பெருகிச் செல்வம் அதிகரிக்கும் என்கின்றனர்.

    கோவிலுக்கு வெளியிலுள்ள குளத்தில் நீராடிவிட்டு வந்து, அம்மனை வழிபடும் பக்தர்களுக்குத் தீராத நோய்கள் தீர்ந்து போய்விடும் என்பதும் இக்கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    அம்மன் ஊர்வலம்:

    மீன்குளத்திப் பகவதி அம்மன் தோற்றத்திற்கு முன்பாக வைக்கப்பட்ட பனை ஓலைக் குடையையும், பொருட்களையும் எடுக்க முடியாமல் போன போது, அவைகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த மாடு மேய்க்கும் சிறுவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மீன்குளத்திப் பகவதி அம்மன் ஊர்வலத்தில் அச்சிறுவர்களின் வழிவந்த குடும்பத்தினர் வீரவாள், திருவிளக்கு போன்றவைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

    அமைவிடம் :


    கேரள மாநிலம், பாலக்காடு நகரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரிலிருந்து 70 கிலோமீட்ட தொலைவிலும் இருக்கும் பல்லசேனா எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்லப் பாலக்காடு நகரிலிருந்து அதிக அளவில் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இருந்தும் இக்கோவிலுக்குச் செல்லச் சில பேருந்துகள் இருக்கின்றன.

    ×