என் மலர்
நீங்கள் தேடியது "Story of Kraunja Parvatam"
- கிரவுஞ்சா என்ற அசுரன் ஆற்றலும், ஆணவமும் உள்ளவனாக இருந்தான்.
- மலை வடிவம் எடுத்து மற்ற முனிவர்களை துன்புறுத்தினான்.
கிரவுஞ்சா என்ற அசுரன், மற்றவர்களை அழிக்கக்கூடிய ஆற்றலும், ஆணவமும் உள்ளவனாக இருந்தான். அகத்தியர் கயிலாயத்திற்குச் சென்று சிவ வழிபாடு செய்து, காவிரியை தன்னுடைய கமண்டலத்தில் அடைத்து எடுத்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுது கிரவுஞ்ச அசுரன் மலை வடிவம் எடுத்து மற்ற முனிவர்களை துன்புறுத்தியது போல், அகத்தியரையும் வழிமறித்து தடுத்தான். மேலும் பலத்த மழையையும் தன் சக்தியால் ஏற்படுத்தினான். இதனால் அகத்தியர் அந்த மலையை கடக்க முடியாமல் பல நாள் காட்டினுள் தவித்தார்.
பின்னர் கிரவுஞ்ச அசுரனின் மாயையால் தான் நாம் இவ்வாறு சிரமப்படுகிறோம் என உணர்ந்து, காவிரி நீரை எடுத்து மந்திரப் பிரயோகம் செய்தார். "நீ எப்போதும் மலையாகவே இருப்பாய். உன்னால் இனி நகரவே முடியாது" என்று சபித்தார். இதைக்கேட்டு தன் ஆணவம் அழியப்பெற்ற அசுரன், தனக்கு சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினான்.
அப்போது அகத்தியர். "முருகப்பெருமான் பிறப்பெடுத்து அவரின் வேல் உன் மீது படும் வேளையில் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்" என்றார்.

அதன்படியே முருகப்பெருமான் பிறப்பெடுத்து வந்ததும், சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனை அழிக்க வந்தார். அவனோ, தன் படைகள் அனைத்தும் அழிந்த நிலையில் முருகனின் சக்தியைப் பற்றி அறிந்து கொண்டு, கிரவுஞ்ச மலைக்கு பின்பக்கமாக வந்து ஒளிந்துகொண்டான்.
இதையடுத்து மாயைகள் நிறைந்த கிரவுஞ்ச மலையைத் தாண்டி, தாரகாசுரனை அழிப்பதற்காக முதலில் வீராவாகு தேவர் வந்தார். ஆனால் கிரவுஞ்ச மலையின் மாயைக்கு முன்பாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே அவர் சென்று முருகப்பெருமானிடம் கூறினார்.
உடனே முருகப்பெருமான் கிரவுஞ்ச மலை இருந்த பகுதிக்குச் சென்று, தன்னுடைய வேலை எடுத்து அந்த மலையின் மீது வீசினார். இதையடுத்து கிரவுஞ்ச மலை தகர்ந்ததோடு, அகத்தியரின் சாபத்தால் பாதிக்கப்பட்டிருந்த கிரவுஞ்ச அசுரனின் சாபமும் நீங்கப்பெற்றது.






