search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Snowline house"

    ‘ஒரு மகனை போல் விஜய் எனக்கு ஆறுதல் கூறினார்’ என்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்னோலினின் தாய் கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பேரணியாக சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். இவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து வருகிறார்கள்.

    இதையடுத்து காயமடைந்தவர்களை பார்த்து நலம் விசாரிக்கவும், பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக நடிகர் விஜய் நேற்று நள்ளிரவு விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினார். அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார்.

    இது குறித்து மாணவி ஸ்னோலினின் தாய் வனிதா கூறியதாவது:-

    நேற்று நள்ளிரவு 2 மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களிடம் யார் என்று கேட்ட போது நான் விஜய் என்று கூறினார். ஆனால் அவர் நடிகர் என்று சொல்லவில்லை. அவருடன் வந்தவர்கள் தான் நடிகர் விஜய் பலியானவர்கள் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூற வந்துள்ளார் என்றனர்.

    அப்போது விஜய் எனது கைகளை பிடித்து கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார். பின்னர் நாற்காலியை கொடுத்து அமரச் சொன்னேன் அதற்கு மறுத்த அவர் தரையில் உட்கார்ந்தார். அவர் மிகவும் எளிமையாக இருந்தார். பகலில் வராமல் இரவில் ஏன் வந்தீர்கள் என்று கேட்டதற்கு பகலில் வந்தால் வருவது தெரிந்து கூட்டம் அதிகமாக வருவார்கள் பாதுகாப்பிற்காக போலீசார் வருவார்கள். ஏற்கனவே நீங்கள் மனவேதனையில் உள்ளீர்கள் அது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கூட்டம் கூடுவதை நான் விரும்பவில்லை என்றார். ஒரு மகனை போல் விஜய் எனக்கு ஆறுதல் கூறினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×