என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்குவங்க டிஜிபி"

    • கடந்த வாரம் ஐ-பேக் (I-PAC) நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
    • மேற்கு வங்க அரசு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் 'கேவியட்' மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

    மேற்கு வங்க காவல்துறை தலைமை இயக்குநர் ராஜீவ் குமாரை பணியிடை நீக்கம் செய்யக் கோரி அமலாக்கத்துறை, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், விசாரணை முகமைக்கு மேற்கு வங்க காவல்துறையின் மூத்த அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்றும், அவர்கள் தவறாக நடந்துகொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அவர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமலாக்கத்துறை கோரியுள்ளது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தை அமலாக்கத்துறை வலியுறுத்தியுள்ளது. 

    கடந்த வாரம் தேர்தல் உத்தி வகுப்பாளரான ஐ-பேக் (I-PAC) நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இச்சோதனையின் நடுவே மம்தா பானர்ஜி வந்து, விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும், சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

    இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிறரின் பங்கு குறித்து சிபிஐ விசாரணை கோரி அமலாக்கத்துறை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. அங்கு உடனடி நிவாரணம் கிடைக்காததைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

    கடந்த வாரம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற அறையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால், நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரிக்கும். 

    ஐ-பேக் (I-PAC) மீது நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைகள் தொடர்பாக, தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என்று கோரி மேற்கு வங்க அரசு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் 'கேவியட்' மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

    ×