என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணைக் கொலை"

    • பெற்றோர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
    • குழாய் மூலம் உணவு வழங்குவதை நிறுத்தி கண்ணியமான முறையில் மரணிக்க அனுமதி.

    உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் 32 வயதான ஹரிஷ் ராணா. 2013 ஆம் ஆண்டு கல்லூரி மாணவராக இருந்தபோது விடுதியின் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் கோமா நிலைக்கு சென்றார்.

    கடந்த 13 ஆண்டுகளாக ஹரிஷ் ராணா கோமா நிலையில் இருந்து வருகிறார். அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. உணவுக் குழாய்கள் மூலமே அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த நியூட்ரிஷன் உணவு மற்றும் தண்ணீர் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மட்டுமே அவர் உயிர்வாழ்கிறார். 

    ராணாவை கருணைக் கொலை செய்ய 2024 இல் அவரது பெற்றோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர். நோயாளி வெண்டிலேட்டர் உதவியில் இருந்தால் மட்டுமே கருணை கொலை சட்டப்படி சாத்தியம் என உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.  அதே ஆண்டு அவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகினர்.

    உச்சநீதிமன்றம் அவரது உடல்நிலை குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தகத்து. 

    இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெபி பர்திவாலா, கேவி விஸ்வநாதன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

    பெற்றோர், ராணாவுக்கு குழாய் மூலம் உணவளிப்பதை நிறுத்தி அவரை கருணை கொலை செய்ய நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இந்தியாவில் ஒருவரை கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இதுவாகும். 

    இதுபோன்ற வழக்குகளில் நோயாளிக்கு மருத்துவ உதவி நன்மையா அல்லது மரணம் தான் தீர்வா என்பதை பொறுத்தே முடிவெடுக்க முடியும். இதுபோன்ற முந்தைய வழக்குகளில் மருத்துவ அறிக்கைகள் சிக்கலாக இருந்தன. 

    ஆனால் இந்த வழக்கில் எய்ம்ஸ் மருத்துவமனை வழங்கிய அறிக்கையில் ராணா உணவுக் குழாய் மூலம் அளிக்கப்படும் உணவு மூலம் மட்டுமே உயிர்வாழ்கிறார் என்றும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருக்காது என்றும் உறுதியாகி உள்ளதால் அவரின் நலன் கருதி குழாய் மூலம் உணவு வழங்குவதை நிறுத்தி அவரை கண்ணியமான முறையில் மரணிக்க அனுமதிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.

    கருணை கொலை குறித்து 2018 உச்சநீதிமன்றம் வகுத்த வழிகாட்டு நெறிமுறைகள் படி தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    ×