என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பம்பரம்"

    • ம.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.
    • தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை ஈரோடு தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ம.தி.மு.க.வுக்கு வழங்கப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க.வுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ம.தி.மு.க. குழுவில் இடம் பெற்றிருந்த ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ம.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. நாங்கள் இரண்டு பாராளுமன்ற தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா தொகுதியையும் கேட்டுள்ளோம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்று உள்ளதால் அவா் பயணம் முடித்து வந்ததும் அதுபற்றி முடிவெடுத்து அறிவிப்பார்.

    கேள்வி:- எந்தெந்த தொகுதி என்று பட்டியல் கொடுத்து விட்டீர்களா?

    பதில்:- தொகுதிகள் எது எது என்பதை இனிமேல் முடிவு செய்வோம்.

    கேள்வி:- கடந்த முறை போட்டியிட்ட அதே தொகுதியை கேட்கிறீர்களா? அல்லது வேறு தொகுதியா?

    பதில்:- அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. தலைமைக் கழகம்தான் முடிவு செய்யும். அது எந்தெந்த தொகுதி என்பதை பின்னர் சொல்வோம்.

    கேள்வி:- கடந்த முறை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டீர்கள்? இந்த முறை சொந்த சின்னத்தில் போட்டியிட கேட்டிருக்கிறீர்களா?

    பதில்:- இந்த முறை கண்டிப்பாக எங்களது கட்சி சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.

    கேள்வி:- அதற்கான உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்களா? பேச்சுவார்த்தையில் அதுபற்றி பேசப்பட்டதா?

    பதில்:- எங்களுடைய கோரிக்கையை வைத்து உள்ளோம். அது பின்னாடி தெரியும். தனி சின்னத்தில் எங்களது கட்சி சின்னத்தில் தான் நாங்கள் நிற்க வேண்டும் என்பது எங்களது கட்சியின் நிலைப்பாடு.

    கேள்வி:- அடுத்து எப்போது பேச்சுவார்த்தைக்கு வருவீர்கள்?

    பதில்:- முதலமைச்சர் வந்த பிறகு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடை பெறும்.

    கேள்வி:- அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வைகோ வருவாரா?

    பதில்:- அதுபற்றி அப்போது தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை ஈரோடு தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ம.தி.மு.க.வுக்கு வழங்கப்பட்டது. இந்த முறை 2 தொகுதிகளில் போட்டியிட ம.தி.மு.க. விரும்புகிறது. அதுவும் ம.தி.மு.க.வின் சொந்த சின்னத்தில் போட்டியிட நினைக்கிறது.

    இதற்காக விருதுநகர், திருச்சி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 தொகுதிகளை விருப்பப் பட்டியலாக தி.மு.க.விடம் வழங்கி உள்ளது.

    ×