என் மலர்
நீங்கள் தேடியது "கோதண்ட ராமர் கோவில்"
- ராமபிரான் 14 ஆண்டுகள் வன வாசம் செல்ல நேர்ந்தது.
- வனங்கள், ஆறுகள், மலைகளை கடந்து பயணத்தை மேற்கொண்டனர்.
தசரத மன்னனிடம் கைகேயி பெற்ற வரத்தின் காரணமாக, ராமபிரான் 14 ஆண்டுகள் வன வாசம் செல்ல நேர்ந்தது. அவருடன் சீதாதேவியும், லட்சுமணனும் சென்றனர். தென்திசை நோக்கிச் சென்ற அவர்கள், பல வனங்கள், ஆறுகள், மலைகளைக் கடந்து தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.
அப்போது இயற்கை எழில் மிகுந்த அடர்ந்த வனத்தின் ஒரு பகுதியில் ஆற்றின் பக்கமாக சிறிய மலை இருப்பதைக் கண்டனர். 60 அடி உயரத்துடன் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்த சிறிய மலை அது. அந்த மலையின் உச்சியில் சிறிய குடில் ஒன்றை அமைத்து தங்கி இருந்தனர்.
அந்த பகுதியில் அசுரர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், ராமர், சீதையையும், லட்சுமணனை காக்கும் பொருட்டு. வானரர்கள் எப்போதும் கண் காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். சீதாபிராட்டி எங்கே இருந்தாலும் அங்குள்ள ஆற்றின் நீரைக் கொண்டு வந்து இறைவனுக்கு பூஜை செய்வது வழக்கம். அப்படி பூஜை செய்வதற்கு முன்பாக அவர் ஆற்றில் நீராடி விட்டு வருவார். அப்படி ஆற்றில் நீராடும் அவருக்கு அசுரர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வந்தது.
உடனே அவர் இது பற்றி ராமபிரானிடம் சொன்னார். மறுநாள் சீதாதேவி ஆற்றில் குளிக்க சென்றபோது, மகிஷாசுரன் என்ற அரக்கன், சீதாதேவியை நோக்கி வந்தான். அதைக் கண்ட ராமபிரான், ஆற்றின் ஓரமாக வளர்ந்திருந்த புற்களை கொண்டு. சீதாதேவி நீராடும் இடத்தைச் சுற்றி சுவர் போன்று அமைத்தார். பின்னர் எருமை தலைகொண்ட மகிஷாசுரனுடன் போரிட்டு அவனின் தலையை துண்டித்தார். பின்னர் சில காலம் அங்கேயே தங்கியிருந்து மீண்டும், வனத்தின் வேறு பகுதிக்கு ராமபிரான் தன் மனைவி மற்றும் தம்பியுடன் இடம்பெயர்ந்தார்.
ஆனால் ராமபிரான் வசித்த அந்த பகுதியில் மக்கள் பலரும் குடியேறினர். மகிஷாகரன் தலை கொய்யப்பட்ட அந்த இடத்திற்கு 'எருமை வெட்டிப்பாளையம் என்றுபெயர் வந்தது. அதேபோல் கொசகொசப்பான புற்கள் வளர்ந்த ஆற்றுக்கு கொசஸ்தலை ஆறு' என்று பெயரிடப்பட்டு புகழ் பெற்றது.
மேலும் அங்கு வசித்த மக்கள், மலையில் ராமர் குடில் அமைத்து வாழ்ந்த இடத்திற்குச் செல்வதற்காக, செம்பாறை கற்களால் படிக்கட்டுகளை அமைத்தனர். அதன்பின்னர் மலையின் மேல் பகுதியில் ராமர் வசித்த இடத்தில் அவருக்காக ஒரு கோவிலை கட்டினர்.
இந்த கோவிலில் அமைந்துள்ள மூலவர் சிலையானது. சாளக்கிராம கல்லால் செய்யப்பட்டுள்ளது. ராமர் மடியில் சீதாதேவி அமர்ந்திருக்க. அருகில் லட்சுமணன், ஆஞ்சநேயர் இருப்பது போன்று, பட்டாபிஷேக ராமர் திருக்கோலத்தில் இறைவன் காட்சி தருகிறார்.
கோவிலின் முன் புறத்தில் விஷ்வசேனர், ராமானுஜர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார். திருகச்சி நம்பிகள் ஆகியோரது சிலைகள் இருக்கின்றன. கோவிலின் வெளிப்புறத்தில் சன்னிதிக்கு எதிரில் பலிபீடம், கொடிமரம் அமைந்துள்ளது.
கோவிலின் வலதுபுறத்தில் வராகர், நரசிம்மர், நாராயணன், இடதுபுறத்தில் விஜயன், விஷ்ணு, துர்கை ஆகியோரது திருவுருவ சிலைகள் அழகான கலைநயத்துடன் காண்போரை வியக்கும் அளவில் பிரமிக்க வைக்கிறது. இத்தல இறைவன் கோதண்டராமர் என்று அழைக்கப்படுகிறார்.
இந்த ஆலயத்தில் புனர்பூசம் வரும் நட்சத்திரம் அன்று நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டால், திருமணத்தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், பிரிந்த தம்பதியர் ஒன்றிணைவர் என்ற நம்பிக்கை நிலவுகிறது. தங்களின் வேண்டுதல் நிறைவேறியவர்கள், அதற்கான நேர்த்திக்கடனை ஆலயத்திற்கு வந்து செலுத்துகின்றனர்.
இங்கு வரும் பக்தர்கள் தங்கள் குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வதுடன், காதணி விழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளையும் ஆலயத்திலேயே நடத்துகின்றனர். ஆலயத்தின் தல விருட்சமாக அரசமரம் உள்ளது.
அமைவிடம்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காரனோடை அருகே உள்ளது எருமை வெட்டிப்பாளையம். சென்னையில் இருந்து காரனோடை பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஆட்டோ, கார்கள் மூலம் ஆத்தூர் கிராமம் வழியாக செல்லலாம்.






