என் மலர்
நீங்கள் தேடியது "ஜீவனுள்ள தேவன்"
- தேவனைத் தவிர பூமியெங்கும் வேறு தேவன் இல்லை.
- இயேசுவை நோக்கி பிரார்த்திப்போம்.
அன்பானவர்களே, நம்முடைய வாழ்க்கையில் ஒரு நோய், பிரச்சினைகள், சவால்கள், ஆபத்துக்கள் வந்தால் உடனே அதை பெரிய அளவில் சிந்தித்து, பயந்து, கவலைப்படுகிறோம். ஒரு சில நல்ல ஆலோசனைகளை உதாசீனப்படுத்துகிறோம். உடனே பிரச்சினைகள் தீர்ந்து விட வேண்டும் என்று துடிக்கிறோம். ஆனால் நம்முடைய துன்ப காலங்களில் இயேசுவை நோக்கி பார்த்தால், அவருடைய வார்த்தைகளால், வசனங்களால் எல்லா ஆபத்தில் இருந்தும் விடுபடுவோம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இதற்கு எடுத்துக்காட்டாக வேதாகமத்தில் இருந்து ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்...
சிரியா நாட்டில் நாகமான் என்ற பலம் படைத்த, செல்வாக்கான தளபதி இருந்தார். கர்த்தர் அவர் வழியாக சிரியா நாட்டிற்கு பல வெற்றிகளைக் கொடுத்திருந்தார். இதனால் இவர் சிரியா ராஜாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். ஆனால் இந்த நாகமான் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவரது வீட்டில் இஸ்ரவேல் நாட்டைச்சேர்ந்த ஒரு சிறுமி பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தாள். அவள் தன் எஜமானியிடத்தில், `இஸ்ரவேலின் சமாரியாவில் இருக்கும் இறைவனின் தீர்க்கதரிசி எலிசாவிடம் சென்று அவர் சொல்கிறபடி செய்தால் நாகமான் நிச்சயமாக குணமடைவார்' என்று தெரிவித்தாள்.
இதன்படி நாகமான், சிரியா ராஜாவிடம் இருந்து இஸ்ரவேலின் ராஜாவுக்கு கடிதம் பெற்றுக்கொண்டு, பொன், வெள்ளி, விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள், பரிசுப் பொருட்களை எடுத்துக்கொண்டு இஸ்ரவேல் சென்றார். அந்த நாட்டு ராஜாவிடம் சிரியா ராஜா எழுதிய கடிதத்தைக் கொடுத்தார்.
அந்தக் கடிதத்தில், நாகமானுடைய தொழுநோயை குணப்படுத்த வேண்டும் என்று எழுதியிருந்தது. கடிதத்தை படித்த இஸ்ரவேலின் ராஜா, 'சிரியாவின் ராஜா என் மேல் யுத்தம் தொடுக்க முகாந்திரம் தேடுகிறார். தொழுநோயைக் குணப்படுத்த நான் என்ன கடவுளா?' என்று கேட்டு சினமடைந்தார்.
இந்த செய்தியை அரண்மனையில் இருந்து எலிசாவுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது எலிசா நாகமானை தன்னிடம் அனுப்பும்படி வேண்டினார். அப்படியே நாகமான் தன் பரிவாரங்களுடனும், எல்லா பொருள்களுடனும் எலிசாவின் வீட்டின் முன் வந்து நின்றார்.
அப்பொழுது எலிசா தன் பணியாளனாகிய கேயாசி என்பவனை சிரியா படைத் தளபதியிடம் அனுப்பி, நாகமானை நோக்கி `யோர்தான் நதியில் ஏழு தரம் மூழ்கி குளித்தெழுந்தால் தொழுநோய் நீங்கி சுத்தமாவார்' என்று சொல்லச்சொன்னார்.
இதைக் கேட்டவுடன் நாகமான், `சிரியாவில் தண்ணீர் ஓடுகிற நதிகள் இல்லாமலா இங்கு வந்தேன்' என்று சொல்லி மிகுந்த கோபத்துடன் திரும்பினார்.
இதைப்பார்த்த நாகமானின் ஊழியக்காரன் ஒருவன் அவர் அருகில் வந்து, `கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய எலிசா கடினமான பெரிய காரியங்களை ஒருவேளை செய்யச் சொல்லியிருந்தால் நீங்கள் அதை செய்திருப்பீர் அல்லவா? இந்த சிறிய காரியத்தைச் செய்வதில் தடைஎன்ன?' என்று கேட்டதும், நாகமான் நதியில் ஏழு தரம் மூழ்கி எழுந்தான்.
குளித்து முடித்ததும் அவன் உடலில் இருந்த தொழுநோய் நீங்கி, சிறு பிள்ளையின் உடலைப் போல மாறியதைக் கண்டு "இதோ இஸ்ரவேலில் இருக்கிற தேவனைத் தவிர பூமியெங்கும் வேறு தேவன் இல்லை என்பதை அறிந்தேன்" என்று கூறி இறைவனைப் புகழ்ந்து போற்றினார்.
கர்த்தருடைய தீர்க்கதரிசி எலிசாவுக்கு பொன், வெள்ளி, ஆபரணங்கள், பரிசுப் பொருட்களை கொடுத்தார். நாகமான் வருந்தி கேட்டும் எலிசா எதையும் வாங்கவில்லை. நாகமான் மகிழ்ச்சியோடு சிரியா நாட்டிற்கு திரும்பினார்.
இங்கே நாகமான் எதிர்பார்த்து வந்தது இறைவனின் தீர்க்கதரிசி எலிசா, தன் உடலில் கைகளை வைத்தோ, அல்லது எண்ணெய்யைப் பூசி ஜெபித்தோ தனக்கு சுகம் கிடைக்கும் என்று எண்ணினார். ஆனால் கர்த்தரோ தீர்க்கதரிசி எலிசா மூலமாக, 'தண்ணீரில் குளித்து முழ்கி எழுந்தாலே போதும்' என்ற அற்பமான காரியத்தைக் கூறக் கேட்டதும் நாகமானின் மனம் ஏற்க மறுக்கிறது.
இன்றைக்கு கூட இவ்வாறே நம் கடினமான செயல் களால், அல்லது உடலை வருத்திக்கொள்வதால், பெருமுயற்சி செய்வதால், இறைவனிடமிருந்து அற்புதங்களைப் பெற்றுவிடலாம் என்று எண்ணுகிறோம். ஆனால் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது ஆழ்ந்த இறைநம்பிக்கையையும், சின்னச்சின்ன காரியங்களிலும்கூட நாம் இறைவனுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதே.
ஏனெனில் அற்ப காரியங்களிலும் கூட அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்வது இறைவனுக்கு மிகவும் லேசான காரியம். அற்பமான காரியத்தை யார் அசட்டை பண்ண முடியும்.
இறைவனை நம்புவோம், கீழ்ப்படிவோம். சிறிதோ, பெரிதோ இறை மகன் இயேசுவை நோக்கி பிரார்த்திப்போம். அவரையே நம்புவோம், அவருக்கு கீழ்ப்படிந்து காத்திருப்போம்.
நாகமானுடைய வாழ்வில் அற்புதம் செய்த மீட்பர், நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். அவர் ஜீவனுள்ள தேவன். ஆகவே அவரை நோக்கி பார்க்கும் போது நமக்கு சுகம் நிச்சயம், வெற்றி நிச்சயம், ஆசீர்வாதம் நிச்சயம், ஜெயம் நிச்சயம்.






