என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கிடாக்காரன் வரலாறு"

    • மொத்தத்தில் கயிலாய மண்ணை காத்து நிற்பான்.
    • மண்காத்த பெருமாளை கயிலாயத்தில் காவலுக்கு வைத்துவிட்டு சென்றனர்.

    மண்காத்தபெருமாள் என்று அழைக்கப்படும் செங்கிடாக்காரன் சுவாமியின் வரலாறை பற்றி இன்று நாம் தெரிந்துகொள்ளலாமா?

    ஒருசமயம் சிவபெருமான், பார்வதிதேவியிடம் மறைபொருட்களை உணர்த்திக் கொண்டிருந்தார். அதைக்கண்ட முருகப்பெருமான், தந்தையும், தாயும் என்ன ரகசியம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்? நாமளும் அதை கேட்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு ஒரு வண்டுபோல் உருவம் எடுத்து தனது தாயின் கூந்தலுக்குள் ஒலிந்துகொண்டு கேட்டுக்கொண்டிருந்தார்.

    அகிலத்தையே காத்தருளக்கூடிய அகிலாண்டீஸ்வரிக்கு இது தெரிந்துவிட்டது. இருந்தாலும் தனது மகனின் விளையாட்டை ரசித்துக்கொண்டு இருந்தார். தடுக்கவே இல்லை. ஆனால் இறைவனாகிய சிவபெருமான் ஞானத்தால் அதை உணர்ந்துகொண்டார். உடனே கோபத்துடன் சிவபெருமான், பார்வதிதேவியை பார்த்து மலைமகளே என்ன இது? என்று கூறிக்கொண்டு வண்டுவடிவில் இருந்த முருகனை பார்த்து சிவபெருமான் வேலவா? பெற்றவர்களை மதிக்காமல் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டதால் நீ கடலில் மீனாக பிறப்பாய் என்று சாபம் அளித்தார்.

    அதுமட்டுமில்லாமல் மிகுந்த கோபத்துடன் பார்வதிதேவியை பார்த்து உன்னுடைய மகன் தவறிழைத்தபோதும் அதை தடுக்காமல் ரசித்த மலைமகளே நீ மானிட பிறவி எடுத்து அதியரசனுக்கு மகளாக பிறப்பாய் என்று சாபமிட்டார்.

    இதைகேட்டதும் பார்வதிதேவி, சிவபெருமானை பார்த்து எங்களுக்கு சாபவிமோசனம் எப்போது? என்று கேட்டார். உடனே சிவபெருமான் நீ பருவ வயதை நிரம்பியதும் நான் உன்னை வந்து மணப்பேன். அப்போது மகர மீனாக இருக்கும் முருகனும் விமோசனம் பெறுவான் என்று சொன்னார்.

    சிவபெருமான் அளித்த சாபத்தின்படி பார்வதி தேவி மங்கைபதி பகுதியை ஆட்சிசெய்து வந்த அதியரசனின் மகளாக பிறந்தார். பார்வதி தேவி பருவ வயதை அடைந்ததும் அவரை மணமுடிக்க சிவபெருமான் பூலோகத்திற்கு சென்றார். பூலோகத்திற்கு செல்லும்போது சிவபெருமான் அந்த நேரத்தில் கயிலாயத்தில் உள்ள முனிவர்களை எல்லாம் அழைத்து நான் பார்வதிதேவியை மணம்முடித்து திரும்பும் வரை கயிலாயத்தை நீங்கள் அனைவரும் காக்க வேண்டும் என்று கூறினார்.

    ஆனால் அங்குள்ள சிவனடியார்கள் அனைவருக்கும் இறைவனாகிய சிவபெருமானின் திருமணத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை. இங்கு காவலில் இருந்தால் பார்க்க முடியாது. அதனால் தங்களுடைய இயலாமையை சிவபெருமானிடம் தெரிவித்தனர். சுவாமி, கயிலாய மலையில் யாராவது வந்து இங்கு இருக்கக்கூடிய செல்வத்தை திருட முயன்றால் அதை தடுப்பதற்கும், அவர்களோடு மோதுவதற்கும் எங்களுடைய உடலிலும், மனதிலும் பலமே இல்லை என்று கூறினார்கள் சிவனடியார்கள்.

    உடனே சிவபெருமான் என்னுடைய பெயரை சொல்லி யாகம் வளருங்கள். அதில் இருந்து ஒருவன் பிறப்பான். மானுட ரூபம் கொண்டிருப்பான். மாண்ட பிணங்களையும் திண்றிருப்பான். பூத செயல்களை கொண்டிருப்பான். நீங்கள் ஏவினால் அதை செய்து முடிப்பான். அழைத்தால் உடனே தாவி வந்து நிற்பான். மொத்தத்தில் கயிலாய மண்ணை காத்து நிற்பான் என்றார்.

    சிவபெருமான் கூறியதுபடி நந்தி, நாரதர், உருத்திரர், வாள்முனி, ஓமமுனி, சக்திமுனி, விசுவாச முனி, தக்கமுனி, வசிஷ்ட முனி எல்லாரும் கூடி கயிலாத்தில் வேள்வி வளர்த்தனர். அந்த வேள்வியில் தோன்றினார் செங்கிடாக்காரன் சுவாமி. அந்த செங்கிடாக்காரன் சுவாமியை மண்காத்த பெருமாள் என்று அழைத்தனர்.

    அந்த முனிவர்கள் எல்லோரும் மண்காத்த பெருமாளை கயிலாயத்தில் காவலுக்கு வைத்துவிட்டு சிவபெருமானி திருமணத்தை பார்ப்பதற்காக சென்றனர். சிவபெருமான் தன்னுடைய திருமணத்தை முடித்துவிட்டு கயிலாயம் வந்தார். கயிலாயத்தை காவல் காத்துக்கொண்டிருந்த செங்கிடாக்காரன் சுவாமியை பார்த்து உன்னுடைய கோரபசிக்கும், உயிர்பலித்து உண்ணும் உன்னுடைய செயலுக்கும் கயிலாயத்தில் உனக்கு இடம் இல்லை. ஆகவே பூலோகம் செல்ல வேண்டும் என்று உத்தரவு கொடுத்தார் சிவபெருமான்.

    உடனே செங்கிடாகாரன் சுவாமியும், எனக்கு ஆக்கும் வரமும், அழிக்கும் வரமும், என்னை நம்பி வணங்கும் அடியவர்களை காக்கும் வரமும் தர வேண்டும் என்று கேட்டார். உடனே சிவபெருமானும், அப்படியே ஆகட்டும். நீ கேட்டதை பெற்றாய் என்று சொல்லி பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார்.

    சிவபெருமானிடம் வரம்பெற்ற செங்கிடாகாரன் சுவாமி அகத்தியர் வாழ்ந்த சாஸ்தா காவலில் இருந்த பொதிகை மலைக்கு வந்தார். அங்கிருந்து சுடலைமாட சுவாமியின் காவலுக்குட்பட்ட காக்காய்ச்சி மலைக்கு வந்து மரசோலையில் வாசம் செய்தார்.

    காலங்கள் பல கடந்தன. ஒரு சமயம் லண்டன் நாட்டில் இருந்து மூவர் புதிதாக கப்பல் கட்ட எண்ணினர். அதற்காக இந்தியாவிற்கு வந்தனர். தூத்துக்குடியில் கப்பல் கட்டுவதில் திறமைவாய்ந்தவர்களை கண்டறிந்து அந்த பொறுப்பினை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

    பெரியதுரை, சின்னதுரை, பரங்கி துரை ஆகிய மூவருடன் கப்பலுக்கு மரம்வெட்ட காக்காய்ச்சி மலைக்கு வந்தனர். செங்கிடாகாரன் சுவாமி உறைந்திருக்கும் மரத்தையும் வெட்டிக்கொண்டு வந்தனர். உடனே கப்பல் கட்டப்பட்டு வெள்ளோட்டமாக கடலில் பயணம் செய்யத் தொடங்கினர்.

    மேற்குநோக்கி சென்றுவிட்டு மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்பினர். கப்பல் கேரளம், கருநாகப்பள்ளி, திருவனந்தபுரம் மற்றும் குளச்சல், பல்லம், மணக்குளம், கோவங்குளம் கடந்து முட்டபொதியை வந்தடைந்தது. முட்டைபொதி பகுதியில் கப்பல் வந்ததும், சூறாவளி காற்றுடன் ஒரு பேரலை வந்து கப்பல் கடலில் மூழ்கியது.

    உடனே செங்கிடாகாரன் சுவாமி பருந்து உருவத்தில் பறந்து சென்று வெண்கல ராஜன் கோட்டைக்கு வந்தார். வெண்கல ராஜன் கோட்டைக்கு வந்திறங்கிய செங்கிடாகாரன் சுவாமி, தான் வந்ததை அரசன் அறிய வேண்டும் என்று எண்ணி தன்னுடைய திருவிளையாடலை நடத்தினார்.

    அந்த ஊரில் நோய்நொடிகளை ஏற்படுத்தினார். மரங்கள் எல்லாம் தானே முறிந்துவிழும்படி செய்தார். கடல்நீர் ஊருக்குள் பெருக்கெடுத்துவர செய்தார். இதனால் பயந்துபோன மன்னன், கேரள நம்பூதிரிகளை வரவழைத்து சோளிபோட்டு பார்த்தார். சோளிபோட்டு பார்த்ததும் அங்கு வந்திருப்பது மண்காத்த பெருமாள் என்ற செங்கிடாகாரன் சுவாமி என்று கூறினார்கள் நம்பூதிரிகள்.

    உடனே அந்த மன்னன் செங்கிடாகாரன் சுவாமிக்கு நிலையம் கொடுத்து செங்கிடா பலிகொடுத்து சாந்தப்படுத்தினார். செங்கிடாகாரன் சுவாமியும் ஆங்காரம் தணிந்து சாந்தமாகி, அடிபணிந்தவர்களுக்கு அருள்புரிந்து வந்தார். காலங்கள் பல கடந்தன. அந்த பகுதியில் வாழ்ந்த வந்த மக்களுக்கு செங்கிடாகாரன் சுவாமி குலதெய்வமானார்.

    செங்கிடாகாரன் சுவாமி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கோவில்கொண்டுள்ளார். நாம் ஒவ்வொருவரும் செங்கிடாகாரன் சுவாமியை வழிபடுவோம். அவர் அருள் பெறுவோம்.

    ×