என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் மதுக்கடை"

    • 14 நாட்கள் தொடர்ந்து போராடிவரும் நிலையில் எங்களை இதுவரையில் அரசு அழைத்துப் பேசவில்லை.
    • பணி புறக்கணிப்பு போராட்டத்தை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

    சென்னை:

    டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    இந்தப் போராட்டத்தை சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.சி. பாட்டாளி, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து நடத்துகின்றன. டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களும் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். அரசு இதுவரையில் அழைத்து பேசாததால் அடுத்த கட்டமாக 17-ந்தேதி முதல் காலவரையற்ற கடை அடைப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். போராட்டம் குறித்த நோட்டீஸ் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் (16-ந்தேதி) இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடைகளை மூடி சாவியை நிர்வாகத்திடம் கொடுத்து விடுவதாகவும் 17-ந்தேதியில் இருந்து பணிக்கு செல்ல மாட்டோம் என்றும் கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் 4,749 டாஸ்மாக் கடைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இதில் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மிகவும் குறைந்த சம்பளத்தில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கையாகும்.

    14 நாட்கள் தொடர்ந்து போராடிவரும் நிலையில் எங்களை இதுவரையில் அரசு அழைத்துப் பேசவில்லை. அதனால் பணி புறக்கணிப்பு போராட்டத்தை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் காலிபாட்டில் ஸ்டிக்கர்களை ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த போராட்டத்தில் அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கம் கலந்து கொள்ளுமா என்று அதன் மாநில செயலாளர் சிவகுமாரிடம் கேட்டதற்கு, இது பற்றி தலைமையிடம் கேட்டு முடிவு செய்வதாக தெரிவித்தார்.

    டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவியாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதால் பாதிப்பு ஏற்படக்கூடும். ஆளுங்கட்சி தொழிற்சங்கமான தொ.மு.ச. தொழிலாளர்கள் இதில் பங்கேற்பார்களா என்று தெரியவில்லை.

    தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை முறியடிக்க டாஸ்மாக் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது ஓரிரு நாட்களில் தெரிய வரும்.

    • பொதுமக்களுடன் சேர்ந்து அருள் எம்.எல்.ஏ. மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் மது கடைக்கு வந்தனர்.
    • மதுக்கடையை மூடுவதற்கான கெடு முடிந்து விட்டதாகவும், தொடர்ந்து நாளையில் இருந்து மதுக்கடையை திறக்க கூடாது என அரசு மதுபான கடை ஊழியரிடம் கூறினர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் 10 ஆண்டு காலமாக அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடை ஊரின் மத்தியில் அமைந்துள்ளதால் இந்த பகுதியில் குடியிருப்பு வாசிகள் கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    தொடர்ந்து 10 ஆண்டு காலம் போராடியும் அரசு மதுபான கடையை மூட முடியாமல் இருந்தது. எனவே இந்த கடையை மூட கோரி கடந்த மாதம் சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்பொழுது போலீசார் மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் கடையை அகற்ற ஒரு மாத காலம் அவகாசம் கேட்டது.

    கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ. உட்பட அனைவரும் கலைந்து சென்றனர். அவகாசம் கேட்டு ஒரு மாத காலம் முடிந்தும் இதுவரை மதுக்கடையை மூடவும் அல்லது வேறு இடத்தில் மாற்றவோ டாஸ்மாக் நிர்வாகம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து டாஸ்மாக் கடையை மூடுவதற்கான வழிமுறைகள் குறித்து அருள் எம்.எல்.ஏ. தலைமையில் முத்துநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை ஆகிய கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆலோசனை ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து பொதுமக்களுடன் சேர்ந்து அருள் எம்.எல்.ஏ. மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் மது கடைக்கு வந்தனர். மதுக்கடையை மூடுவதற்கான கெடு முடிந்து விட்டதாகவும், தொடர்ந்து நாளையில் இருந்து மதுக்கடையை திறக்க கூடாது என அரசு மதுபான கடை ஊழியரிடம் கூறினர். மேலும் அங்கு இருந்த டாஸ்மாக் ஊழியரின் காலில் திடீரென விழுந்த சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அருள் தயவு செய்து கடையை மூடுங்கள் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

    இதை சற்றும் எதிர்பாராத கடை ஊழியர்கள் பதறினர். பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். எம்.எல்.ஏ.வின் போராட்டம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது. இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை மதுக்கடை மூடப்பட்டது. கடை முன்பாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறும் பொழுது மூடப்பட்ட மதுக்கடையில் உள்ள மதுபானங்களை வேறு பகுதிக்கு கொண்டு செல்லும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். சர்சைக்குரிய மதுக்கடை மூடப்பட்டதால், அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×