என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்வளத்துறை அதிகாரி"

    • மீன்வளத்துறை அதிகாரிகள் கடலில் சோதனை நடத்தினர்.
    • சீன என்ஜின்கள் பயன்படுத்தும் படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் மரத்தில் செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் அரசு அனுமதி அளித்த குதிரைத்திறன் கொண்ட என்ஜின் பயன்படுத்தி மீன் பிடிக்க வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் வழிகாட்டு நெறிமுறைகளை விதித்துள்ளனர்.

    இந்நிலையில் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம்-1983 விதிகளை பின்பற்றாமல் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட அதிக குதிரை திறன் கொண்ட சீன என்ஜின்கள் பொருத்தப்பட்ட 4 மீன்பிடி விசைப்படகுகள் மீன்பிடிப்பதை கண்டறிந்த ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி, சம்பந்தப்பட்ட படகின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கி மீன் பிடி தொழிலில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டிருந்தார்.

    அதனை மீறி அந்த 4 விசைப்படகுகளில் 2 படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி தலைமையில் அதிகாரிகள் கடலில் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த 2 படகுகளை கண்டுபிடித்து அதில் இருந்த வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் தொழில் முடக்கத்துடன் வழக்குப்பதிவு செய்து படகை பறிமுதல் செய்து ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தினர்.

    ராமேசுவரம் மீன்வளத் துறை அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ளதால் வழக்கு முடியும் வரை இந்த படகை அதன் உரிமையாளர் எடுக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட அதிக குதிரை திறன் கொண்ட சீன என்ஜின்கள் பயன்படுத்தும் படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி எச்சரித்து உள்ளார்.

    • உவரியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதாக மீன்வளத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • உத்திராண்டு ராமன் கொடுத்த புகாரின்பேரில் உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணிராயை வலைவீசி தேடிவருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் உவரியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதாக மீன்வளத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்கள் உத்தரவின்பேரில் ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் உத்திராண்டு ராமன், உவரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது, அங்கு சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடிக்கப்பட்டது தெரியவந்தது. அவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களை உத்திராண்டு ராமன் பறிமுதல் செய்ய முயன்றார்.

    அந்த சமயத்தில் அங்கு உவரி மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான அந்தோணி ராய் என்பவர் வந்தார். அவர் மீன்வளத்துறை அதிகாரி உத்திராண்டு ராயிடம் தகராறு செய்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவரை பணி செய்ய விடாமல், தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து உத்திராண்டு ராமன் கொடுத்த புகாரின்பேரில் உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணிராயை வலைவீசி தேடிவருகின்றனர். இதற்கிடையே, மீன்வளத்துறை அதிகாரியை, அந்தோணி ராய் மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வாட்ஸ்-அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×