என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்ஜிஆர் சிலை உடைப்பு"

    • மர்மநபர்கள் நள்ளிரவில் எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தினர்.
    • சிலையின் வலது கையை உடைத்து, இடுப்பு பகுதியை நொறுக்கி இருந்தனர்.

    திருச்சி:

    திருச்சி லால்குடி அருகே ரெட்டி மாங்குடியில் அ.தி.மு.க. சார்பில் 2003-ம் ஆண்டு 5 அடி உயரம் கொண்ட எம்.ஜி.ஆர்.சிலை நிறுவப்பட்டது.

    இந்த சிலைக்கு அவரது பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளின் போது நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் அந்த எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தினர். சிலையின் வலது கையை உடைத்து, இடுப்பு பகுதியை நொறுக்கி இருந்தனர்.

    இதை அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து அப்பகுதியில் குவிந்தனர்.

    பின்னர் அவர்கள் கோஷங்கள் எழுப்பியபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்த லால்குடி துணை போலீஸ் சூப்பிரெண்டு அஜய் தங்கம் மற்றும் காணக்கிளியநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதற்கிடையே சிலை உடைக்கப்பட்ட தகவல் அறிந்து தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப. குமார் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் கூறும் போது, சமூக விரோத செயல்களுக்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன் இந்த இழிசெயலுக்கு காரணமானவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதற்கிடையே பிரச்சனைகளை மேலும் தவிர்ப்பதற்காக அங்கே போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

    • எம்.ஜி.ஆர் சிலை உடைப்பு குறித்து கிளை அ.தி.மு.க. செயலாளர் ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
    • பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டதால் ஆவினன்குடி போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே எம். ஜி.ஆர்., சிலை உள்ளது.

    நேற்று இரவு எம்.ஜி.ஆர். சிலையின் இடது கையை மர்மநபர்கள் உடைத்து உள்ளனர். இதனை இன்று பார்த்த அ.தி.மு.க.வினர் அதிரச்சி அடைந்தனர்.

    இதுபற்றி கிளை அ.தி.மு.க. செயலாளர் ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் அப்பகுதியில் அதிமுகவினர் தொடர்ந்து குவிந்தவாறு உள்ளனர். இதனால் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டதால் ஆவினன்குடி போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ உடைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையை பார்வையிட்டு இதுகுறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என போலீசாரை கேட்டுக்கொண்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பாக காணப்படுகிறது.

    • சேதமான எம்.ஜி.ஆர்.சிலையை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று பார்வையிட்டார்.
    • அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராமும் நேரில் சென்று பார்த்தார்.

    சென்னை:

    சென்னை ஆயிரம் விளக்கு ஜி.என். செட்டி சாலையில் மார்பளவு எம்.ஜி.ஆர். சிலையை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

    ஆயிரம் விளக்கு 117-வது வட்டத்தில் எம்.ஜி.ஆர். சிலை கடந்த 2006-ம் ஆண்டு அ.தி.மு.க. தொண்டர்களால் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு இந்த எம்.ஜி.ஆர். சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். எம்.ஜி.ஆர். சிலையின் மூக்கு பகுதிகள் உடைக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து சிலை முன்பு அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலையை உடைத்தவர்களை கைது செய்ய அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சிலையை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

    இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சேதமான எம்.ஜி.ஆர்.சிலையை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று பார்வையிட்டார். அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராமும் நேரில் சென்று பார்த்தார்.

    ×