என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிட்டு திருவிழா"

    • முன்பொரு காலத்தில் மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
    • இறைவன் மீது பட்ட பிரம்பு அடி, மன்னன் உட்பட உலக மக்கள் அனைவரின் மீதுமாக விழுந்தது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம் 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 26-ந்தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடலும், 27-ந்தேதி நாரைக்கு முக்தி அருளிய திருவிளையாடலும், 28-ந்தேதி மாணிக்கம் விற்ற திருவிளையாடலும், 29-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அருளிய திருவிளையாடலும், 30-ந் தேதி உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடலும், 31-ந்தேதி பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடலும் நடைபெற்றது.

    1-ந்தேதி வளையல் விற்ற திருவிளையாடலும் அன்று மாலை சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. நேற்று (2-ந்தேதி) நரியை பரியாக்கிய திருவிளையாடல் நடைபெற்றது.

    ஆவணி மூல திருவிழாவின் முத்தாய்ப்பாக 9-ம் நாளான இன்று மதியம் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி சிறப்பு அலங்காரமாக பிட்டுக்கு மண் சுமந்த திருக்கோலத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார்.

    முன்னதாக சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பாடாகி நான்கு சித்திரை வீதிகள், கீழமாசி வீதி, யானைக்கல் வழியாக பழைய சொக்கநாத சுவாமி கோவில் உள்பட பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பேச்சியம்மன் படித்துறை வழியாக புட்டுத்தோப்பு மண்டபத்திற்கு சென்றனர்.

    அங்கு மதியம் 1.35 மணிக்கு மேல் 1.55 மணிக்குள் பிட்டுக்கு மண் சுமந்த லீலையும், அப்போது பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உற்சவம், மண் சாற்றுதல் லீலையும் நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. இதில் திருப்பரங்குன்றம் முருகன், திருவாதவூர் மாணிக்கவாசகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக புட்டுத்தோப்புக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் புறப்பாடை முன்னிட்டு இன்று காலை மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டது. மாலை அவர்கள் கோவிலுக்கு திரும்பியதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    திருவிழாவின் 10-ம் நாளான நாளை (4-ந்தேதி) விறகு விற்ற லீலை திருவிளையாடல் நிகழ்வும், 5-ந்தேதி இரவு 9.05 மணிக்கு மேல் 9.29 மணிக்குள் சட்டத்தேரில் வீதி உலா நிகழ்வு நடக்கிறது. 6-ந்தேதி 12-ம் நாள் தீர்த்த வாரியுடன் ஆவணி மூலத்திருவிழா நிறைவு பெறுகிறது.

    முன்பொரு காலத்தில் மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பாண்டிய மன்னன் அமைச்சர்களை கலந்து ஆலோசித்தான். அந்த ஆலோசனையில் வீட்டுக்கு ஒருவர் மண் சுமந்து வைகை கரையை வலுப்படுத்தும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    மதுரையில் வசித்து வந்த 'வந்தி' என்னும் மூதாட்டி. இவள் பிட்டு சுடும் தொழில் செய்பவள். முதலில் சோமசுந்தரக் கடவுளுக்குப் பிட்டைப் படைத்து விட்டுப் பின்னர்தான் விற்பனை செய்து வந்தாள். வைகை கரையை வலுப்படுத்த மன்னன் ஆணைப்படி வீட்டுக்கு ஒருவர் சென்றனர்.

    வந்தி, 'தனக்கு யாரும் இல்லையே' என்று சோமசுந்தரக் கடவுளை நினைத்துக் கண்ணீர் மல்க வேண்டினாள். அடியவர்க்கு அருளும் இறைவன், வந்திக்கும் அருள்செய்ய பிட்டுக்கு மண் சுமக்கும் கூலி ஆளாய் வந்தியிடம் வந்து சேர்ந்தார். கூலியாகப் பிட்டைப் பெற்றுக்கொண்ட இறைவன், மண்வெட்டியுடன் வைகை நதிக்கு வந்தார்.

    வைகைக் கரைக்கு வந்த இறைவன், மண் சுமந்து கரையை வலுப்படுத்தாமல், நீரில் குதித்தும், மற்றவர்கள் சுமந்து வரும் மண்ணைக் கீழே தள்ளிவிட்டும், ஆடியும், பாடியும் தனது விளையாட்டைத் தொடங்கினார். இதைக் கவனித்த காவலர்கள், 'இவனுக்குப் பித்துப் பிடித்துவிட்டதோ?' என நினைத்தனர். உடனடியாக மன்னனிடம் சென்று முறையிட்டனர்.

    வைகை நதிக்கு வந்த மன்னன் ஆத்திரம் அடைந்து, தனது தங்கப் பிரம்பால் அடித்தார். முதுகில் ஓங்கி அடித்தான். இறைவன் மீது பட்ட பிரம்பு அடி, மன்னன் உட்பட உலக மக்கள் அனைவரின் மீதுமாக விழுந்தது. இந்திராதி தேவர்களையும் அந்த அடியின் வலி விட்டு வைக்கவில்லை. எல்லா உயிர்களுக்கும் அந்த அடி விழுந்தது.

    அதன் பிறகு மறைந்து போன இறைவன், நந்தி முதலிய கணாதிபர்களுடன் வானத்தில் தோன்றி வந்தி மூதாட்டிக்கு அருள் புரிந்து, அவளைத் தன்னோடு வானுலகம் அழைத்துச் சென்றார். சோமசுந்தரப் பெருமானின் இந்தத் திருவிளையாடலைக் கண்ட மன்னனும் மக்களும் இறைவனைத் தொழுதனர் என்பது வரலாறு. இறைவனை மனிதனாக அவதரித்து அடியார்களுக்கு உதவி பிரம்படி பட்ட திருவிளையாடலை நினைவு கூறும் வகையில் பிட்டுத் திருவிழா இன்று நடைபெற்றது.

    சுவாமி தங்க கூடையில் பிட்டுக்கு மண் சுமந்த கோலத்தில் பிரியாவிடையுடன் மீனாட்சி சுந்தரேசுவரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வேறெங்கும் இல்லாத வகையில் பக்தர்களுக்கு பிட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. 

    • .70ம் ஆண்டு பிட்டுத்திருவிழா 5-ந் தேதி மாலை நடக்கிறது.
    • இரவு 7 மணிக்கு,சுவாமி பிட்டுக்கு மண் சுமந்த படலம் திருக்காட்சியும் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், வாணிய செட்டியார் சமுதாய பிட்டுத்திருவிழா கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் ஆவணி மாதம், பிட்டுத்திருவிழா நடத்தப்படுகிறது.70ம் ஆண்டு பிட்டுத்திருவிழா 5-ந் தேதி மாலை நடக்கிறது.

    அன்று மாலை 6 மணிக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகளும், இரவு 7 மணிக்கு, சுவாமி பிட்டுக்கு மண் சுமந்த படலம் திருக்காட்சியும் நடைபெறுகிறது. வந்தியம்மை சார்பில் பிட்டுக்காக, சிவபெருமான் மனித உருவில் வந்து மண் சுமந்த காட்சி, பாண்டியன் பிரம்பால் அடிப்பது போன்ற காட்சிகள் நிகழ்த்தப்படுகிறது. மகா தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    ×