என் மலர்
நீங்கள் தேடியது "பச்சைப்பயிறு"
- கரிசல் மண்ணில் நன்றாக விளையும் பச்சைப் பயிர்.
- முளை கட்டிய பச்சைப் பயிற்றைப் போட்டு பொங்கல் சமைத்து உண்டால் தூக்கத்திற்கு மாறாக ஊக்கம் கிடைக்கும்.
நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பயிறு வகைகளில் கெட்டித் தன்மை வாய்ந்ததும் உண்டு, சற்று மிருதுவானதும் உண்டு. கெட்டித் தன்மைக்குத் தேர்ந்த எடுத்துக் காட்டு கொண்டைக் கடலை என்றால் மிருதுத் தன்மை உடையதற்கு எடுத்துக்காட்டு பச்சைப் பயிறு. கொண்டைக் கடலைத் தமிழகத்தில் விளைகிறது என்றாலும் நம்மவர்கள் விளைவிப்பது போதியளவிற்கு இருக்காது. இங்கே பச்சைப் பயிறு கணிசமான அளவில் விளைவிக்கப்படுகிறது. பச்சைப் பயிற்றை நஞ்சைப் பாசனமும் செய்யலாம், புஞ்சைப் பாசனமும் செய்யலாம். எனவே இதனை விவசாயிகள் தம்முடைய வீட்டுத் தேவைக்கும் அப்பால் பணப்பயிராக விளைவிப்பது பரவலாகக் காணப்படுகிறது. குறிப்பாகக் கரிசல் மண்ணில் நன்றாக விளையும் பச்சைப் பயிர்.
இன்றைய தலைமுறையினருக்குப் தோலுடன் கூடிய பயிற்றிற்கும் தோல் நீக்கப்பட்டப் பருப்பிற்கும் வேறுபாடு அவ்வளவாகத் தெரியாது. தோல் நீக்கப்படாத முழுப் பச்சைப் பயிறு விளைவிக்கப்பட்ட நிலையில் களத்தில் அடித்துத் தூற்றி மணியாக அள்ளி மூட்டைக் கட்டுவதைப் பார்த்திருக்க மாட்டார்கள். நம் பிள்ளைகள் அவ்வளவு தொலைவிற்கு விவசாயத்தில் இருந்து அந்நியப்பட்டு விட்டனர். இன்று பலருக்கும் கொண்டைக்கடலைப் பருப்பையும், துவரம் பருப்பையும் செரிக்கும் திறன் இல்லை. அதிலும் புலால் சாப்பிடாதவர்கள் என்றால் அவர்களுக்குத் தேவையான புரதச் சத்தினை எப்படி ஈடுசெய்வார்கள்.
செரிமானத்திற்கும் எளிது, வேகவைப்பதும் எளிது என்று பார்த்தால் அதில் பயிறு வகைகளில் முதலிடத்தில் இருப்பது பச்சைப் பயிறுதான். இன்று பரவலாகத் தோல் நீக்கப்பட்ட பச்சைப் பருப்பைத் தான் வெளிர் மஞ்சள் நிறத்தில் பார்க்கிறோம். இது அவ்வளவு சத்தானது அல்ல. இதிலும் வணிகரீதியாக அதிக விளைச்சலுக்காக சற்றே பருமனான பச்சைப் பயிறும் சந்தையில் கிடைக்கிறது. அதுதான் பரவலாக விற்பனையில் கிடைக்கிறது.
ஆனால் தமிழகத்தில் புஞ்சையில் விளையும் பச்சைப் பயிறுதான் உண்மையில் சத்து மிக்கது. கேரளா மற்றும் கேரள எல்லைப் பகுதியை ஒட்டிய தமிழகத்தில் பச்சைப் பயந்தங்கஞ்சி காலைவேளைகளில் சத்துமிக்க உணவாக இன்றும் சமைக்கப்படுகிறது. உணவகங்களில் பரிமாறப்படும் பொங்கலின் ஆதி வடிவமே பயத்தங்கஞ்சி. பயத்தங்கஞ்சியில் உள்ள சத்துக்கள் பொங்கலில் கிடைக்கும் என்று கூறுவதற்கில்லை. அதிலும் பொங்கல் தூக்க மருந்து என்ற அவப்பெயரை நகரங்களில் பெற்று விட்டது காலத்தின் கோலம் தான்.

கடைப்பொங்கல் உண்ட அரைமணி நேரத்தில் மயக்க உணர்வு தோன்றுவதற்குக் காரணம், அதன் மூலப்பொருளான பச்சை அரிசியோ, தோல் நீக்கிய பச்சைப் பருப்போ அல்ல. மலினமான வியாபார உத்திக்காக அதில் சேர்க்கப்படும் டால்டா எனும் தாவரக் கொழுப்பே ஆகும். டால்டாவானது, இறுகின நிலையில் பிசுபிசுப்பாக இருக்கும். உருக்கினால் நெய்க்கு மாற்றுபோலத் தோன்றலாம். ஆனால் உருக்கின நிமிடத்தில் மட்டுமே அப்படி இருக்கும். ஆறியதும் தானும் இறுகி, தான் சார்ந்திருக்கும் பண்டத்தையும் இறுக்கி விடும். இந்தப் பிசுபிசுப்புதான் அதனைக் கொண்டிருக்கும் பண்டத்தை உண்டதும் மயக்கத்தைத் தருவது.
உண்மையில் தாவரக் கொழுப்பு அத்தனை பிசுபிசுப்பும் ஆறிய பின்னர் இறுகல் தன்மையும் அடைவதில்லை. பல தயாரிப்புகளில் டால்டாவில் தாவரக் கொழுப்புடன் பெட்ரோலியத்தின் உப தயாரிப்பான மெழுகும் சேர்க்கப்பட்டு விடுகிறது. இந்த மெழுகு இன்று எண்ணை வரைக்கும் கலப்படம் செய்யப்படுகிறது என்பது தனிக்கதை.
இப்படிக் கலக்கப்பட்ட உணவுப் பண்டம் உண்டதும் மயக்கம் மட்டுமல்ல, உண்ண உண்ண கல்லீரல் துவங்கி சிறுநீரகம், நுரையீரல் என இருதயம் வரைக்கும் நிரந்தரப் பாதிப்பினை உருவாக்கி விடும். இன்று அனைத்து வயதினருக்கும், அனைத்துப் பொருளாதாரப் பிரிவினருக்கும், அனைத்து வகையான வேலைகளைச் செய்வோருக்கும் எந்தச் சூழலிலும் தொடர்நோய்கள் உருவாவதற்கும், திடீர் மரணங்கள் ஏற்படுவதற்கும் காரணம் இத்தகைய நச்சுத் தன்மை மிகுந்த ரசாயனங்களின் கலப்பே ஆகும். இன்று நம் மக்கள் விவசாயத்தில் இருந்து வெகுதொலைவிற்கு விலகி வந்து விட்டது ஒருபுறம் என்றால் வீட்டுச் சமையலில் இருந்தும் நம்மை மிகவேகமாக விலக்கிக் கொண்டு வருகிறோம்.

போப்பு
இது மிகவும் ஆபத்தான போக்காகும். இதனை வெறும் கலாச்சார மாற்றமாக மட்டுமே பார்க்க முடியாது. இம்மாற்றம் உடலளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கங்களைக் கைக்கொள்ளும் பலரும் நோய் தம்மை நெருங்காமல் இருக்கத் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். இது அப்பாவித்தனமான எண்ணம். உடலை நோய்க்கலனாக மாற்றி விட்ட பின்னர் மருந்துகள் அதிலும் குறிப்பாக தடுப்பு மருந்துகளால் எப்படி உடலைப் பாதுகாக்க முடியும்.
உணவில் சத்துக்கள் உள்ள மூலப்பொருட்கள் கொண்டு தயாரிப்பதும், முறையான ஓய்வு, தூக்கம், பொருத்தமான உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி போன்றவற்றால் மட்டுமே உடலையும், உடல் தாங்கி நிற்கும் உயிரையும் பாதுகாக்க முடியும். அந்த வகையில் நமது கைக்கெட்டும் தொலைவில் உள்ள உயிர் ஆதாரப் பொருள் பச்சைப் பயிறு. அதாவது தோல் நீக்கப்படாத பச்சைப் பயிறு. அதிலும் சிறிய வகை என்றால் இன்னும் சிறப்பு. முளை கட்டிய பச்சைப் பயிறு என்றாலும் இன்னும் கூடுதல் சிறப்பு. பச்சைப் பயிற்றை திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சிறுபயிறு என்ற பெயரிலேயே அழைக்கிறார்கள்.
முளை கட்டிய பச்சைப் பயிற்றைப் போட்டு பொங்கல் சமைத்து உண்டால் தூக்கத்திற்கு மாறாக ஊக்கம் கிடைக்கும். உணவகப் பொங்கலில் ஒரு பங்கு தோல் நீக்கிய பச்சைப் பருப்புடன் அதேயளவு மூன்று அல்லது நான்கு பங்கு அரிசி போட்டு பொங்கல் சமைப்பார்கள். முன்னரே சொன்னது போல நெய் என்ற பெயரில் டால்டாவில் தாளிப்புப் போடுவார்கள். இது கையில் ஒட்டாமல் நெழு நெழுவென்று உள்ளிறங்கும். ஆனால் சாப்பிட்ட பின்னர் கைகழுவும் போதே தெரிந்து விடும் அதன் பிசுபிசுப்பு.
முளை கட்டிய பச்சைப் பயிறு நூறுகிராம் என்றால் நான்கு மடங்கு அதாவது நானூறு கிராம் பச்சை அரிசி போட்டு குழைவாக வேகவிட்டு வெறுமே சீரகத்தையும், ஒரு தேக்கரண்டி மிளகையும் நுணுக்கிப் போட்டு கிளறினால் அற்புதமான சத்து தரும் பொங்கல் தயார். இது நல்ல உழைப்பாளிக்கும் கூட ஊக்க உணவாக அமையும். தொடர்ந்து சுவைப்போம், சுகம் தரும் நல்லுணவு.
தொடர்புக்கு- 96293 45938
- நாம் விளைவித்த நெல்லை அவல், பொரி, இட்லி மாவு, இடியப்பம் மாவு என பல விதங்களில் மதிப்புக்கூட்டி விற்பதன் மூலம் நமக்கு வருடம் முழுவதும் சீரான வருமானம் கிடைக்கும்.
- பயறு வகை பயிர்களான உளுந்து, பச்சைப்பயிறு ஆகியவற்றை முழு தானியமாக விற்பனை செய்யாமல் உடைத்து அல்லது மாவாக அரைத்து விற்பனை செய்யலாம்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் (அட்மா) கேத்தனூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிர் அறுவடைக்கு பின்சார் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடைபெற்றது.
இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் விக்னேஷ் வரவேற்புரை ஆற்றி பயிற்சியை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக நீடாமங்கலம் அறிவியல் நிலையம் பேராசிரியை கமல சுந்தரி கலந்துகொண்டு அறுவடைக்குப்பின் செய்யும் தொழில்நுட்பங்களை பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்:-
விளைவித்த பயிர்களை முழு தானியங்களாக விற்பதன் மூலம் கிடைக்க கூடிய லாபம் குறைவு தான். இதுவே விளைவித்த பயிர்களை மதிப்புக்கூட்டி விற்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம். உதாரணமாக நமது பகுதியில் பிரதான பயிரான நெல்லை அனைத்து விவசாயிகளும் பயிர் செய்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கின்றனர். இதனால் லாபம் கிடைத்தாலும் பயிர் செய்த பருவங்களை மட்டுமே வருமானம் கிடைக்கும். இதுவே நாம் விளைவித்த நெல்லை அவல், பொரி, இட்லி மாவு, இடியப்பம் மாவு, இப்படி பல விதங்களில் மதிப்புக்கூட்டி விற்பதன் மூலம் நமக்கு வருடம் முழுவதும் சீரான வருமானம் கிடைக்கும். பயறு வகை பயிர்களான உளுந்து,பச்சைப்பயிறு ஆகியவற்றை முழு தானியமாக விற்பனை செய்யாமல் உடைத்து அல்லது மாவாக அரைத்து விற்பனை செய்யலாம்.
பெருநகரங்களில் முருங்கைக்கீரை போன்ற கிராமங்களில் விளையக் கூடிய பொருள்கள் கிடைப்பது அரிது. அதை நிறம் மற்றும் தரம் குறையாமல் பதப்படுத்தி விற்கலாம். இது போன்று அனைத்து பயிர்களிலும் அறுவடைக்குப்பின் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மதிப்பு கூட்டிய பொருளாக மாற்றலாம். விவசாயிகளாகிய நீங்களும் புதிய தொழில் முனைவோராக மாறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கேத்தனூர் பகுதி வேளாண்மை உதவி அலுவலர் மோகன்ராஜ் விவசாயிகளுக்கு நெல் மற்றும் இதர பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதலை பற்றி எடுத்து கூறினார். மேலும் ஆலங்குடி வேளாண்மை உதவி அலுவலர் சப்தகிரி வாசன் உடன் இருந்தார். பயிற்சியின் நிறைவாக உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரியங்கா நன்றியுரை கூறி நிறைவு செய்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சதீஷ் குமார் செய்திருந்தார்.






