என் மலர்
நீங்கள் தேடியது "திருச்சி வாலிபர் மர்ம மரணம்"
பூதலூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்சினம்பூண்டி பகுதியில் காவிரி ஆறு செல்கிறது. நேற்று மாலை இப்பகுதி காவிரி ஆற்றில் அம்பேத்கர் நகர் அருகே ஆண் மற்றும் பெண் பிணங்கள் கரை ஒதுங்கின.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து தோகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு இன்ஸ் பெக்டர் கென்னடி, சப்-இன்ஸ் பெக்டர் கார்த்தி ஆகியோர் விரைந்து வந்தனர். அந்த உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இறந்து கிடந்த ஆணின் ஜட்டியில் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் கார்டு, வழக்கறிஞர் ஒருவரின் விசிட்டிங் கார்டு ஆகியவை இருந்தது. ஆதார் கார்டு மற்றும் பான்கார்டில் முத்துராஜ் என்ற பெயர் உள்ளது.
இருவரது உடல்களையும் போலீசார் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆற்றில் இறந்து மிதந்து வந்த இருவரும் யார்? அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது வெவ்வேறு சம்பவங்களில் இறந்து இருவரதும் உடலும் ஒரே இடத்தில் ஒதுங்கியதா? என்றும் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆதார் கார்டில் உள்ள செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது இறந்து கிடந்த ஆண் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பகுதி முருக்குப்பட்டி மருதுபாண்டியர் நகரை சேர்ந்த முத்துராஜ் (வயது 37) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






