search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shanmukhar Pacha Sathi Golam"

    • சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெறும்.
    • பச்சை சாத்தி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    கோலாகலமாக நடந்து வரும் இந்த விழாவின் 8-ம் நாளான நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணியளவில் சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து, வெண்ணிற மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, பிரம்மா அம்சமாக வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் மேலக்கோவில் சென்ற சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பந்தல் மண்டபத்தில் பச்சை சாத்தி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. மதியம் 12.05 மணியளவில் சுவாமி சண்முகர்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாக எழுந்தருளினார்.

    பின்னர் ௮ வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம் நாளான நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. முதலில் விநாயகர் எழுந்தருளிய தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய தேரும் 4 ரத வீதிகளில் பவனி வருகிறது. தொடர்ந்து வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேரானது ரத வீதிகளில் பவனி வந்து நிலையை சேர்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    ×