search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sashti Devi"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீபாவளி முடிந்ததும் சஷ்டி விரத காலம் ஆரம்பமாகும்.
    • முருகப்பெருமான் சூரனை வதைத்த நாளே கந்தசஷ்டி எனப்படுகிறது.

    தீபாவளி முடிந்ததும் சஷ்டி விரத காலம் ஆரம்பமாகும். இன்று (திங்கட்கிழமை) விரதம் தொடங்கி விட்டது. சஷ்டி விரதம் என்பது ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அமாவாசையில் தொடங்கி சஷ்டி எனப்படும் வளர்பிறை ஆறாவது நாள் நிறைவுறும். முருகப்பெருமான் சூரனை வதைத்த நாளே கந்தசஷ்டி எனப்படுகிறது. சஷ்டியில் விரதமிருந்து அகப்பையாகிய கருப்பையில் கருவைத் தாங்கியோர்

    ஏராளம். ஆறுமுகரை வழிபட்டால் வாழ்வில் எந்த குறையும் வராது. வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை' என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் சரவணன் தரும் சந்தான செல்வத்தை குறை ஏதும் வராமல் காத்திடும் சஷ்டி தேவி பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது.

    குமரேசன் தாள்பற்றி குழந்தைவரம் பெறலாம் என்றாலும், அன்னை சஷ்டிதேவியே பரிந்துரைத்து அந்த பாக்கியத்தை பெற்றுத்தருகிறாள் என்கின்றன புராணங்கள். குழந்தைகள் நலம்காக்கும் தாயாகத் திகழும் சஷ்டி தேவி யார்?

    தோன்றிய விதம்:

    சஷ்டி தேவி, முருகனது தேவியாகிய தெய்வானையின் அம்சமாகத் தோன்றியவள் என்றும், சஷ்டி தேவியே சண்முகனை மணக்க மனம்கொண்டு தேவசேனாவாக வடிவெடுத்தாள் எனவும் இருவிதமான கருத்துகள் உண்டு. அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் யுத்தம் நடந்த காலகட்டம். முருகப்பெருமான் தேவர்கள் படைத்தலைவனாக பொறுப்பேற்று வீரத்திருக்கோலம் பூண்டு களமாடினார்.

    அந்த நேரத்தில் மருமகனான முருகனின் வீரத்தையும் அழகையும் கண்டு மகிழ்ந்த மகா விஷ்ணு ஆனந்தக்கண்ணீர் சிந்த அது ஒரு பெண்ணுருக் கொண்டது. பெருமாளின் ஆனந்தக்கண்ணீரில் இருந்து தோன்றியதால் மக்களுக்கு ஆனந்தத்தையும், நலத்தையும் அருள வல்லவள் என்று மகாலட்சுமியால் ஆசிர்வதிக்கப்பட்டாள் அந்தப் பெண். அமாவாசை முடிந்த ஆறாம் நாள் தோன்றியதால் இவளுக்கு சஷ்டி என்றே பெயர் சூட்டப்பட்டது.

    வெள்ளையானையான ஐராவதம் அப்பெண் குழந்தையைக் கண்டு எடுத்துவந்து தேவேந்திரனிடம் அளிக்க, இந்திரனும், இந்திராணியும் சஷ்டி தேவியை தங்களது மகளாகப் பேணி வளர்த்தனர். மிகுந்த வீரம் உடைய சஷ்டி தேவி, தேவர்கள் படையில் இருந்து யுத்தம் செய்தாள். அசுர கணங்கள் தோல்வி அடைந்து ஓடின.

    வெற்றியைக் கொண்டாடும் விதமாக சரவணனுக்கு மாலைகள் சூட்டி, 'அரோகரா' என்று கோஷமிட்டு வாழ்த்தினார்கள் அனைவரும், தேவர்கள் யாவரும் தத்தமது பரிசுகளை வழங்கி வாழ்த்திய சமயத்தில் இந்திரன், தனது மகளான சஷ்டி. என்கிற தேவ சேனாவை குமரக் கடவுளுக்குத் திருமணம் செய்து தருவதாகக் கூறினார். முருகனுக்கு மிகவும் பிரியமானவள் சஷ்டி. போர்க்கோலத்தில் இருந்த சஷ்டியை மணப்பெண்ணாக அலங்கரித்தாள் மகாலட்சுமி தேவி, தேவர்சேனையில் இணைந்து போரிட்டதால், சஷ்டி தேவிக்கு `தேவசேனா' என்ற பெயரும் வந்தது என்றொரு புராணக்கதை சொல்கிறது.

    பொன்னாபரணங்கள், அழகான ரத்தினக் கிரீடம், இடுப்பிலே பல மணிகள் கொண்ட மேகலை, புயங்களிலே தோள் வளைகள், கைகளிலே வைர நவமணி வளையல்கள், கால்களில் அழகான வெள்ளிக் கொலுசுகள் என அணிந்து அழகே உருவாக நின்ற தேவசேனாவின் வளைக்கரத்தை தனது தெய்வீக திருக்கரத்தால் பற்றி திருமங்கல நாணிட்டு மாலைசூட்டி மணம் செய்து கொண்டார் மயில்வாகனன். இதை ஒட்டியே சூரசம்ஹார நிகழ்ச்சியின் நிறைவாக தெய்வானை திருக்கல்யாணம் நடத்தப்படும் வழக்கம் வந்தது.

    சஷ்டி தேவியின் சிறப்பு:

    மிகவும் பழமையான காலம் தொட்டே சஷ்டி தேவி வழிபாடு இருந்திருக்கிறது. இதனை பத்மபுராணம், யாக்ஞ் யவல்கிய ஸ்மிரிதி போன்ற நூல்கள் மூலமாக அறியலாம். பெண்களுக்கு குறிப்பாக கர்ப்பிணிகளுக்கும். அவர்களது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பவள் சஷ்டி தேவி. குழந்தைகள் கருவாக உருவாவது முதல், பதினாறு வயது வரும் வரை சஷ்டியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், திருஷ்டி, தோஷம், பயக்கோளாறு போன்றவற்றை நீக்குபவள் சஷ்டி தேவியே. அவளது சிறப்பை விளக்க தேவி பாகவதத்திலும், வாயு புராணத்திலும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

    பலப்பல யுகங்களுக்கு முன்னால் பிரியவிரதன் என்னும் ஓர் அரசன் இருந்தான். அவனது மனைவி மாலினி தேவி. இருவருக்கும் பலகாலமாகக் குழந்தைகள் இல்லை. பல முனிவர்களிடமும் குலகுருவிடமும் யோசனை கேட்டனர். அப்போது சுயம்புவமனு என்பவர் புத்திர காமேஷ்டி யாகத்தைப் பற்றிக் கூறினார். அப்படியே இருவரும் புத்திர காமேஷ்டி யாகம் செய்தனர். ஒவ்வொரு முறையும் மகாராணிக்கு குழந்தை பிறக்கும். ஆனால் அந்தக் குழந்தை இறந்தே தான் பிறக்கும் இப்படியே பன்னிருமுறை நிகழ்ந்தது. அப்போது அங்கே வந்த யாக்ஞ் யவல்கிய மகரிஷி சஷ்டி தேவியின் பெருமைகளை அரசனுக்கும் அரசிக்கும் எடுத்துரைத்தார்.

    `மன்னா! நீ வழக்கம் போல புத்திர காமேஷ்டி யாகம் செய்! அதோடு உன் குழந்தை பிறந்த ஆறாம் நாள் சஷ்டி தேவிக்கு பூஜை செய்வதாகவும், வருடா வருடம் சஷ்டி விரதம் இருப்பதாகவும் வேண்டிக்கொள். அப்படிச் செய்தால் உன் குறை நீங்கும்" என்று சொல்லி, பூஜை முறையையும் கற்றுக் கொடுத்தார். அதேபோல அவர்களும் வேண்டிக்கொள்ள, இம்முறை அழகான ஆண் குழந்தை உயிரோடு பிறந்தது. மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர் அரச குடும்பத்தினர்.

    அந்த சந்தோஷத்தில் சஷ்டி தேவிக்கு பூஜை செய்வதை மறந்து போய்விட்டனர். அதனால் குழந்தை பிறந்த ஆறாம் நாள் இறந்துவிட்டது. மன்னரும் அரசியும் கதறிக் கலங்கி கண்ணீர் வடித்தனர். 'பூஜை செய்ய மறந்தது எங்கள் குற்றம்தான்! ஆனால் ஏன் பச்சிளம் குழந்தையை தண்டிக்கிறாய்?" என்று அழுது கேட்டனர். அப்போது சஷ்டி தேவி அவர்கள் முன் தோன்றினாள்.

    `மன்னா! இந்த பூவுலகில் எந்த குழந்தை பிறந்தாலும் பிறந்த ஆறாம் நாள், தாயும் சேயும் இருக்கும் அறைக்குள்ளேயே எனக்கென்று சாதம் படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அந்தக் குழந்தைக்குப் பதினாறு வயதாகும் வரை எந்தக் கெடுதலும் வராமல் நான் பார்த்துக் கொள்வேன்" என்றாள்.

    அதன்படியே அரசனும் அரசியும் கொஞ்ச சாதத்தில் பால் கலந்து அதனை அன்னை சஷ்டிக்கு அர்ப்பணித் தனர். மகிழ்ந்த சஷ்டி தேவி, இறந்த குழந்தையை எடுத்து முத்த மிட அது உயிர் பிழைத்தது. அன்று முதல் இன்று வரை வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் குழந்தை பிறந்த ஆறாம் நாள் பால் சாதம் சஷ்டி தேவிக்குப் படைக் கப்படும் வழக்கம் தொடர்கிறது.

    சஷ்டி தேவியின் வடிவம்:

    யசூர் வேதம் மற்றும் யாக்ஞ்யவல்கிய ஸ்மிரிதி, தேவி கொலு விருக்கும் விதத்தை வர்ணிக்கிறது. அழகான பொன்னிற மேனியில் சிவப்பு நிற பட்டுப்புடவை இலங்க பொன்னாபரணங்கள் மின்னக் காட்சி யளிப்பாளாம் அன்னை. மடியில் எட்டுக் குழந்தைகளைத் தாங்கியபடி தோற்றம் தருவாள். இவளது வாகனம், கரும்பூனை. முருகனைப் போற்றி வழிபட்டால் சஷ்டி தேவிக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் முருகனை நினைத்து சஷ்டி விரதம் இருப்பவர் களுக்கு கேட்டவற்றை எல்லாம் அளிக்கிறாள்.

    வயல்களில் நல்ல விளைச்சல் பெற, பெண்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்க, கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவத்தில் நல்ல குழந்தை பெற, பிறந்த குழந்தையை கெட்ட சக்திகள் தீண்டாதிருக்க என்று சஷ்டி தேவியை வேண்டி வழிபடுகிறார்கள்.

    குழந்தை வரம் வேண்டி சஷ்டி விரதம் இருப்போர், குழந்தை பிறந்த பின் நினைவாக பிறந்த ஆறாம் நாள் தாயும் சேயும் இருக்கும் அறையிலேயே சஷ்டி தேவிக்கு அன்னம் படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் கிடைத்தற்கரிய பாக்கியமான சந்தான பாக்கியம் நிலைத்து, அக்குழந்தை நோய் நொடியின்றி பலகாலம் வாழும்.

    வழிபாடு:

    கந்த சஷ்டி அன்றே சஷ்டி தேவியையும் பூஜித்து வணங்கலாம். அன்னைக்கு என்று உருவச்சிலைகள் எதுவும் இல்லை. ஆகையால் முருகன் படத்துக்கே பூஜைகள் செய்ய வேண்டும். பொதுவாக சிவப்பு வர்ணம் இந்த தேவிக்கு உரியது. சிவப்பு நிறப் பூக்களால் முருகனை அர்ச்சித்து விட்டு சஷ்டி தேவியை மனமுருகி வேண்டினால் போதும். தேவியின் அருள் கிட்டி விடும்.

    பூஜையின் போது சிவப்பு வண்ணப் புடவையும் சிவப்புக்கயிறும் வைப்பது வழக்கம். அந்தக் கயிற்றை குழந்தையின் கைகளில் கட்டினால் எந்தத் தீங்கும் வராமல் பாதுகாப்பாள் அன்னை சஷ்டி. புடவையை யாராவது ஏழை சுமங்கலிக்குத் தானமாகக் கொடுப்பது சிறந்தது. கண்டிப்பாக திருமணமான பெண்களுக்கு மட்டுமே அந்தப்புடவையை தானமாக அளிக்கவேண்டும்.

    கன்னிப் பெண்கள்அதனை உடுத்தக் கூடாது என்பது ஐதீகம். இந்த வருடம் நவம்பர் 18-ம் தேதி கந்த சஷ்டி வருகிறது. அன்று நாம் முருகனோடு சேர்த்து அவனது பிரியத்துக்குரிய தேவியான சஷ்டியையும் பூஜித்து வணங்கி, சந்தான சவுபாக்யங்களைப் பெற்று நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் உள்ள குழந்தைச் செல்வங்களுடன் ஆனந்த வாழ்வு வாழுங்கள்!

    திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் சூரனை அழித்து தன் அவதார காரணத்தை முருகப்பெருமான் முற்றுப்பெறச் செய்தார். இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    உண்மையில் முருகன் சூரனை சம்ஹாரம் செய்யவில்லை. சூரன் முருகனிடம் சரணாகதி அடைந்தான். அவன் வேண்டு கோளை ஏற்று அவனை இரு கூறாக்கி ஒன்றை சேவலாகவும், மற்றொன்றை மயிலாகவும் முருகன் மாற்றினார். அவைகளை கொடியாகவும், வாகனமாகவும் வைத்துக் கொண்டு அவனை முருகப்பெருமான் தன்னுடனேயே சேர்த்துக் கொண்டார். இப்படி பகைவனுக்கும் அருளியது கந்தன் கருணை எனப்படுகிறது.

    இப்படி சேவற்கொடியோன் ஆன மயில்வாகனனை வணங்கும் போது பகவானு டைய மயில், வேல், சேவல், திருச்செந்தூர் ஆலயம் மற்றும் கடல், கடலை ஒட்டிய பகுதி ஆகியவற்றையும் நாம் வணங்க வேண்டும். எனவே நாளை திருச்செந்தூர் தலத்தின் சிறப்புகளை காணலாம்.

    ×