என் மலர்
நீங்கள் தேடியது "religious preacher murder"
- கிறிஸ்தவ மத போதகர் கிரகாம் ஸ்டெயின்ஸ்(58), அவரது மகன்கள் பிலிப்(10) மற்றும் டிமோதி(6) ஆகிய 3 பேரை 'ஒரு கும்பல்' உயிருடன் எரித்து கொலை செய்தது.
- முக்கிய குற்றவாளி தாரா சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் மற்றும் அவரது மகன்களை கொலை செய்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த நபர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் கியோன்ஜர் மாவட்டத்தில் உள்ள மனோகர்பூர் கிராமத்தில் கடந்த 1999 ஜனவரி 21, ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் கிரகாம் ஸ்டெயின்ஸ்(58), அவரது மகன்கள் பிலிப்(10) மற்றும் டிமோதி(6) ஆகிய 3 பேரை ஒரு கும்பல் உயிருடன் எரித்து கொலை செய்தது.
சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மகேந்திர ஹெம்பிராம், தாரா சிங் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளி தாரா சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
மற்றொரு குற்றவாளி மகேந்திர ஹெம்பிராம் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு நன்னடத்தை அடிப்படையில் மகேந்திர ஹெம்பிராம் தற்போது சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தற்போது 50 வயதாகும் மகேந்திர ஹெம்பிராம், சிறையில் இருந்து வெளிவந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "மதமாற்றம் தொடர்பான ஒரு சம்பவத்தில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டு 25 ஆண்டுகள் சிறையில் கழித்தேன்" என்று தெரிவித்தார்.
விடுதலை பெற்ற மகேந்திர ஹெம்பிராம்- ஐ வலதுசாரி இந்து முன்னணி அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் மாலை மரியாதையுடன் 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷமிட்டு உற்சாகமாக வரவேற்றது.

கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா கோயில்பிள்ளை (வயது 60). தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மேலும் இவர் கடலூரில் கிறிஸ்தவ மத போதகராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ராஜா கோயில்பிள்ளையின் அண்ணன் பால் தங்கசாமி. இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் ஊழியராக பணியாற்றினார். இவருடைய மகன் ராஜா (32), ஆட்டோ டிரைவர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பால் தங்கசாமியும், அவருடைய மனைவியும் இறந்து விட்டனர். இதனால் ராஜாபுதுக்குடியில் உள்ள பூர்வீக வீட்டில் ராஜா தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆனது.
இந்த நிலையில் ராஜா கோயில்பிள்ளைக்கும், ராஜாவுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. பூர்வீக சொத்துக்களை ராஜா கோயில்பிள்ளை அபகரித்ததாக ராஜா புகார் கூறியிருந்தார். இதுகுறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
கடலூரில் இருக்கும் ராஜா கோயில்பிள்ளை அடிக்கடி சொந்த ஊருக்கு சென்று, தனது நிலங்களை பார்த்து வந்தார். அதேபோல் நேற்று முன்தினம் இரவில் சொந்த ஊரில் உள்ள தனது நிலங்களை பார்ப்பதற்காக இவர் தனியாக புறப்பட்டு வந்தார்.
நேற்று மதியம் அவர், ராஜாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்களுக்கு இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ராஜா திடீரென அரிவாளால் ராஜா கோயில்பிள்ளையை சரமாரியாக வெட்டினார்.
இதில் தலை, கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார். பின்னர் ராஜா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுபற்றி கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ், கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட ராஜா கோயில்பிள்ளையின் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி ராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.






