search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reliance Communication"

    எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானியை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் அறிவித்து அபராதம் விதித்துள்ளது. #RelianceCommunication #AnilAmbani
    புதுடெல்லி:

    அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் நஷ்டத்தில் திணறி வரும் நிலையில், எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டிய 1600 கோடி ரூபாய் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அந்த நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் நீதிமன்றம் மூலம் சென்டில்மென்ட் தீர்வு காணப்பட்டு 550 கோடி ரூபாய் பெற்றுக்கொள்ள எரிக்ஸன் சம்மதித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அந்தத் தொகையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம்  கொடுத்திருக்க வேண்டும். அனில் அம்பானி அந்தத் தொகையை வழங்கவில்லை.



    இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது எரிக்ஸன் நிறுவனம். நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட விதிகளை மதிக்கவில்லை என்று எரிக்ஸன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2018-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் நிலுவை தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    ஆனால், குறிப்பிட்ட தேதி கடந்தும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் அனில் அம்பானி அந்த தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்கவில்லை. இதையடுத்து, எரிக்ஸன் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    கடந்த 12ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அனில் அம்பானி நேரில் ஆஜரானார். மேலும், அவரது சார்பில் 118 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் அனில் அம்பானி மற்றும் அந்த நிறுவனத்தின் இரண்டு இயக்குனர்களை குற்றவாளிகள் என அறிவித்தது.

    அத்துடன், அனில் அம்பானி மற்றும் 2 இயக்குனர்களும் இன்னும் 4 வாரங்களுக்குள் எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.453 கோடியை செலுத்த வேண்டும், தவறினால் 3 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

    இதுதவிர 3 பேருக்கும் தலா 1 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை ஒரு மாதத்திற்குள் செலுத்தாவிட்டால், ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. #RelianceCommunication #AnilAmbani 
    ×