என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poovaraga swamy temple srimushnam"

    • கோரைக்கிழங்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
    • பெருமாள் சாளக்கிராமத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    கோவில் தோற்றம்:

    வைணவத் திருத்தலங்களுள் சுயம்புலிங்கம் போல தானாகவே தோன்றிய தலங்கள் எட்டு என்பார்கள். அவை திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், சாளக்கிராமம், நைமி சாரண்யம், வானவாமலை, புஷ்கரம், நாராயணம் என்று கூறுவர். இவற்றையே வடமொழியில் `ஸ்வயம் வியக்த சேத்திரம்' என்பர்.

    இதில் தனிச்சிறப்பு வாய்ந்தது இந்த ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவில். 'முஷணம்' என்றால் நமக்குத் தெரியாமல் அபகரித்துச் செல்லுதல் என்று பொருள். இந்த திருத்தலத்துக்கு வரும் அடியார்களின் பாவங்களை எல்லாம் அவர்களுக்கே தெரியாமல் இவ்வூர் அபகரித்து விடுவதால் (முஷணம் செய்வதால்) இவ்வூர் 'ஸ்ரீமுஷ்ணம்' என்று பெயர் பெற்றது.


    தல வரலாறு

    பெருமாளின் பத்து அவதாரங்களில் சிறப்பு வாய்ந்தது வராக அவதாரம் ஆகும். மகாவிஷ்ணு, வராக (காட்டுப்பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமியை மீட்டார். கடலுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை, தன்னுடைய இரண்டு கோரைப் பற்களில் தாங்கியபடி மேல் எழுந்து வந்து, மீண்டும் வான்வெளியில் நிலைபெறச் செய்தார் என்கிறது புராண வரலாறு.

    தனது ஒரு விழிப் பார்வையால் அரச மரத்தையும், மறு விழிப் பார்வையால் துளசிச் செடியையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அரசமரம், இந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தின் தென்கரையில் உள்ளது. இதுவே தல விருட்சமாகவும் விளங்குகிறது. இங்குள்ள கோவில் விஜயநகர நாயக்கர்களால் கட்டப்பட்டது.

    இங்கு பெருமாள் சாளக்கிராமத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஸ்ரீ பூவராகசுவாமி மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். முகம் மட்டும் தெற்கு நோக்கி உள்ளது. அசுரர்களை வென்றதால் ஏற்பட்ட வெற்றிப் பெருமித உணர்ச்சியில் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு முகத்தை நிமிர்த்தி கம்பீரமாக பார்க்கிறார்.

    பிள்ளைப்பேறு வேண்டுவோர் நித்ய புஷ்கரணியில் நீராடி, அரசமரத்தைச் சுற்றிவந்து, பூவராகரை உள்ளன்புடன் உருகி வழிபட வேண்டும். பின்னர் ஆலயத்தில் சந்தான கிருஷ்ண மூர்த்தத்தை, கைகளில் வாங்கி மடியில் வைத்து வணங்கினால், குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை யாகும்.

    இந்த சிறப்பு வாய்ந்த வராக அவதார கோலத்தில் பெருமாள், பூவராகராக இந்த ஊரில் இருப்பதால் இவரை வழிபடுவது மோட்சத்திற்கு செல்வதற்கான வழி என்கிறார்கள்.

    கோவிலின் மூலவரான பூவராக மூர்த்தி கோவிலின் கருவறையில் உள்ளார். கோவில் விமானம் 'பாவன விமானம்' ஆகும். வடபுறத்தில் உள்ள கோபுரத்தின் பக்கத்தில் குழந்தை அம்மன் ஆலயம் உள்ளது. இங்கே அம்புஜவல்லித் தாயாரின் தோழிமார்களுக்கும் இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

    அர்த்த மண்டபத்தில் உற்சவர் யக்ஞ வராக மூர்த்தி, ஸ்ரீ தேவி-பூதேவியருடன் மேற்கு நோக்கி காட்சி தருகின்றார். உடன் ஆதி வராக மூர்த்தியும், கண்ணனும் எழுந்தருளி உள்ளனர்.


    பெருமாள் சன்னிதிக்கு வடக்குச் சுற்றில், பாவை பாடிய ஆண்டாள் சன்னிதியும், பரமபத வாசல் கோபுரம் அருகே மகேஸ்வரி, சாமுண்டி, வராகி போன்ற சப்த மாதர்கள் கோவிலும் உள்ளன.

    இவர்களை வேண்டிக் கொண்டு அருகே இருக்கும் வேப்ப மரத்தடியில், குழந்தை அம்மன் சன்னிதியில் விளக்கேற்றி வழிபடுவோரும் உண்டு.

    ஸ்ரீ வராக பெருமாளை வணங்குவோர் சிறந்த வாக்கு வன்மை, பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு, நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெற்று உலகம் போற்றும் வகையில் சிறப்பு பெற்று வாழ்வார்கள் என்று புராணங்களும், சாஸ்திரங்களும் சொல்கின்றன.

    குரு, ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பெருமாளை வணங்கினால் அத்தகைய தோஷங்கள் நிவர்த்தி ஆகும். தவிர புதிய வாகனங்கள் வாங்குவோர் தங்கள் வாகனத்தை இத்தலத்துக்கு கொண்டு வந்து அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது. இதனை 'வாகனம் படைத்தல்' என்று கூறுகிறார்கள்.

    தவிர விபத்துக்குள்ளான வாகனங்களை பழுதுபார்த்து பின்பு இங்கு கொண்டு வந்து பூவராக பெருமாளிடம் வழிபட்ட பின்னரே ஓட்டுகின்றனர். அதனால் பூவராகர் தங்களை உடனிருந்து காப்பார் என்று நம்புகிறார்கள்.


    கோவில் சிறப்பு

    'முஸ்தா சூரணம்' என்பது கோரைக்கிழங்கு பிரசாதம். ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள், பன்றி அவதாரம் எடுத்துள்ள காரணத்தால் அவரது அவதாரத்திற்கு மிகவும் பிடித்தமான உணவாக கோரைக்கிழங்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி திருக்கோவிலில் மாசி மகம் பிரம்மோற்சவம், மாசி மாதம் பரணி நட்சத்திரத்தன்று தொடங்கி 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த உற்சவத்தில் சமுத்திரத்திற்கு எழுந்தருளும் முன், தைக்கால் கிராமத்தில் ஒரு மசூதி வழியாகப் பெருமாள் எழுந்தருள்வதும், மசூதி மேட்டில் மேள தாளங்களுடன் பூஜையை ஏற்றுக்கொள்வதும், நவாப்பின் அரண்மனை வரையில் எழுந்தருள்வதும் தனிச் சிறப்பு.

    சித்திரை பிரம்மோற்சவ விழாவும் சிறப்பு வாய்ந்தது. இதில் ஒன்பது நாட்கள் பெருமாள் பகல் மற்றும் இரவு நேரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஒன்பதாவது நாள் நடைபெறும் மட்டையடி உற்சவம் விசேஷமானது.

    சித்ரா பவுர்ணமி அன்று நண்பகலுக்கு மேல் புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெறும். இதுதவிர ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள், பவுர்ணமி, அமாவாசை, மாதப்பிறப்பு நாட்களில் யோக நரசிம்ம சுவாமி பிரகாரத்தில் எழுந்தருள்கிறார்.


    அவதார தினமாகிய சித்திரை மாதம் ரேவதி நட்சத் திரத்தில் பூவராகர் எழுந்தருள்கிறார். வைகாசி விசாகத்தில் உற்சவர் கருடவாகனத்தில் பவனி, ஆடிப்பூரத்தில் ஆண்டாள் உற்சவம், ஆவணியில் பத்து நாள் ஸ்ரீஜெயந்தி விழா, உறியடி, புரட்டாசியில் பெருமாள் தாயார் நவராத்திரி கொலு, ஐப்பசியில் தீபாவளி உற்சவம், கார்த்திகையில் திருக்கார்த்திகை சொக்கப்பனை, மார்கழியில் பகல் பத்து இராப்பத்து மற்றும் ஆண்டாள் நீராட்டு, வைகுண்ட ஏகாதசியில் யக்ஞவராகன் வீதி உற்சவம் மற்றும் கருடசேவை, தை சங்கராந்தியில் யக்ஞவராகனுக்கும் ஆண்டாளுக்கும் திருக்கல்யாணம், மாட்டுப்பொங்கலன்று பாரிவேட்டை, தைப்பூசம் அன்று தீர்த்த உற்சவம், பங்குனி உத்திரத்தில் பெருமாள் தாயார் திருக்கல்யாணம், திரு ஊரல் உற்சவம் ஆகியவை சிறப்பாக நடைபெறும்.

    தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    விருத்தாச்சலத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும் ஸ்ரீமுஷ்ணம் உள்ளது. இரு ஊர்களில் இருந்தும் ஸ்ரீமுஷ்ணத்துக்கு நகர பேருந்து வசதி உள்ளது.

    பிரசித்தி பெற்ற ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் கருட சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற பூவராகசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசிமக திருவிழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் 3-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டு தங்க கருட வாகனத்தில் யக்ஞவராகன் சுவாமி எழுந்தருளினார். இதையடுத்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை சென்றடைந்தார்.

    இதை தொடர்ந்து சாத்தியம், எரப்பாவூர், பெ.பூவனூர், வண்ணாங்குடிகாடு, வலசக்காடு, எசனூர் ஆகிய ஊர்களில் உள்ள வரதராஜ பெருமாள், திருப்பயர் பட்டாபி ராமபெருமாள், கோவிலூர், க.இளமங்கலம் ராதா கிருஷ்ண பெருமாள், பெரம்பலூர், ரெட்டிக்குப்பம், கோ.பவழங்குடி சீனிவாச பெருமாள், மேமாத்தூர், கோமங்கலம், ஆண்டிமடம், அணிக்குதிச்சான், கோபாலபுரம் லட்சுமி நாராயண பெருமாள், கோ.மங்கலம் பிரசன்ன வெங்கடேச பெருமாள், தேவஸ்தான கோபுராபுரம் ஆதி நாராயண பெருமாள், ஸ்ரீநெடுஞ்சேரி வேணுகோபால பெருமாள், மன்னம்பாடி வேணுகோபால் பெருமாள், விருத்தாசலம் பெரியார் நகர் ராஜகோபால சுவாமி ஆகிய 22 சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளினர்.

    இதையடுத்து ஸ்ரீமுஷ்ணம் கடைவீதி காமராஜர் சிலை அருகில் உள்ள பஜனை மடத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் வருகிற 19-ந்தேதி கிள்ளை கடற்கரையில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.
    ×