search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "planned"

    அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இடையிலான பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது. #trumpkimsummit
    பீஜிங்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் இருக்கும் என்று உறுதியளித்தார்.

    இதன்பிறகு அமெரிக்காவுடன், வடகொரியா சமாதான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் நெருங்கி வரும் சூழலும் காணப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த வியாழக்கிழமை டிரம்ப் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார்.

    பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று திடீரென மனமாற்றம் அடைந்தார். கிம் ஜாங் அன்னை திட்டமிட்டவாறு சந்தித்துப் பேச அவர் தற்போது முடிவு செய்துள்ளார்.

    இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், “கிம் ஜாங் அன்னை சந்திப்பது தொடர்பாக தொடர்ந்து ஆக்கப் பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. எனவே ஜூன் 12-ம் தேதி திட்டமிட்டபடி எங்களது சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இந்த தேதிக்கு பின்னரும் கூட சந்திப்பை தள்ளி வைத்துக் கொள்ளலாம்” என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில், டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்திப்பு சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ம் தேதி திட்டமிட்டவாறு நடைபெறும் என நம்புவதாகவும், இதற்காக ஆவலாக காத்திருப்பதாகவும் சீன அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #trumpkimsummit
    காவிரி பிரச்சினை, கமல்ஹாசனின் அழைப்பு குறித்து விவாதிக்க அண்ணா அறிவாலயத்தில் இன்று நடக்க இருந்த தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. #DMK
    சென்னை:

    காவிரி பிரச்சினை, கமல்ஹாசனின் அழைப்பு குறித்து விவாதிக்க அண்ணா அறிவாலயத்தில் இன்று நடக்க இருந்த தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா? என கேள்வி எழுந்துள்ளது.

    காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் ஆளுங்கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் ஏதாவது ஒருவகையில் தங்களது போராட்டத்தை முன் எடுத்து நடத்தி வருகின்றன.

    இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் காவிரி பிரச்சினையை கையில் எடுத்துள்ளார். இது தொடர்பாக தான் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

    மேலும் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை, கமல்ஹாசன் சந்தித்து பேசினார். அப்போது அவர் 19-ந் தேதி ‘காவிரிக்காக தமிழகத்தின் குரல்’ என்ற தலைப்பில் தான் கூட்ட உள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

    இது குறித்து கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், இன்று (வியாழக்கிழமை) அண்ணா அறிவாலயத்தில் காவிரி பிரச்சினை குறித்து தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் தலைவர்களிடம் பேசி, முடிவை அறிவிப்பதாக கூறினார்.

    இதனிடையே இன்று நடைபெற இருந்த தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. இது குறித்து தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘காவிரி பிரச்சினை குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற உள்ளதால் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுவதாக இருந்த கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மு.க.ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு விடுத்த கமல்ஹாசன், மற்ற தலைவர்களுக்கு தொலைபேசி மற்றும் டுவிட்டர் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள நல்லக்கண்ணு ஒப்புதல் அளிக்கவில்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெளிப்படையாக அறிவித்து உள்ளது.

    தற்போது தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பும், காவிரி பிரச்சினை தொடர்பாக கமல்ஹாசன் கூட்டிய கூட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்குமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

    இது ஒருபுறம் இருக்க, நடிகர் ரஜினிகாந்தும் இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்றும், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து தலைமை நிர்வாகி ஒருவர் பங்கேற்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. 
    ×