search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perambalur Molestation"

    பெரம்பலூர் பாலியல் சம்பவம் தொர்பான ஆடியோவை வெளியிட்ட வக்கீல் மீது அ.தி.மு.க. மகளிரணி புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெரம்பலூர்:

    பொள்ளாச்சியை போன்று, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் சிலரை அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் மற்றும் சிலர் பாலியல் தொந்தரவு செய்ததாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

    இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் கடந்த 21-ந் தேதி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் கொடுத்தார். அது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் வக்கீல் அருள் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மேற்கண்ட புகார் தொடர்பாக தன்னுடன் செல்போனில் பேசிய ஆடியோவினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி, பாதுகாப்பு கேட்டும் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்திருந்தார்.

    வக்கீல் அருள் கொடுத்த புகார் எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இன்றி உள்ளதாகவும், எனவே அருள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. வக்கீல் அணியினர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தனர்.

    இந்தநிலையில் பெரம்பலூர் வக்கீல்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த வக்கீல்கள் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தலிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், வக்கீல் அருள் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களை பற்றி எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இன்றி ஆடியோ ஒன்றை வெளியிட்டு, தவறான செய்தியையும் பரப்பி வருகிறார்.

    அவர் மீது பல்வேறு புகார்கள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஏன்? இன்னும் போலீசார் விசாரணையில் ஆஜராகவில்லை. அ.தி.மு.க. பிரமுகர் ஒரு பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதால், அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி, அவர் மீது திட்டமிட்டு அடிப்படை ஆதாரமற்ற பொய் செய்திகளை பரப்பி வரும் வக்கீல் அருள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதேபோல் அ.தி.மு.க. பிரமுகர் மீது பொய்யான பாலியல் புகார் கொடுத்த அருள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. மகளி ரணியினரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளனர்.
    பெரம்பலூர் பாலியல் பலாத்கார சம்பவத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற தமிழக அரசு முயற்சிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். #mkstalin #tngovt #perambalurmolestationissue

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    “பொள்ளாச்சி விபரீதம்” முடியும் முன்பே “பல பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட புகார்” இப்போது பெரம்பலூர் மாவட்டத்திலும் வெளி வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்ற போர்வையில் பெண்களை லாட்ஜுகளுக்கு அழைத்து நேர்காணல் நடத்தி, ஆசை காட்டி, ஆபாச வீடியோ படம் எடுத்து, அதை வைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ.வின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய விவரங்களை ஆடியோ டேப் உரையாடல் ஆதாரத்துடன் வழக்கறிஞர் அருள் வெளியிட்டுள்ளார்.

    250-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் வாழ்வு சூறையாடப்பட்ட ஒரு வழக்கினை இவ்வளவு மோசமாக ஒரு அரசு கையாண்டு, பெண்களின் பாதுகாப்பு குறித்து எவ்வித அக்கறையோ, ஆர்வமோ காட்டாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பாலியல் வன்கொடுமை புகாரில் குற்றம் சாட்டப்பட்ட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களையோ, ஆளுங் கட்சியின் முக்கியப் புள்ளிகளையோ மாவட்டக் காவல்துறையும் விசாரிக்க வில்லை.

    பிறகு விசாரணைக்குச் சென்ற சி.பி.சி.ஐ.டி போலீசாரும் விசாரிக்கவில்லை. பெண்களுக்கு நேர்ந்த கொடூரத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமியின் தலைமையிலான இந்த அரசு மவுனமாக வேடிக்கை பார்த்து வருவது இந்த ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு விபரீதமான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதை உணர்த்துகிறது.

    மாணவ-மாணவியரின் தன்னெழுச்சியான போராட்டத்தைப் பார்த்து அஞ்சிய அ.தி.மு.க அரசு, “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படுகிறது” என்று ஒரு அரசு ஆணையை வெளியிட்டது. அதைக்கூட முறையாக வெளியிடாமல் நீதிமன்றத்தின் கண்டனத்தை வாங்கிக்கொண்டது அ.தி. மு.க அரசு.

    அந்த அரசு ஆணையைச் செயல்படுத்த தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுத்து, வழக்கினை சி.பி.ஐ.யிடம் கூட இதுவரை ஒப்படைக்க முடியாமல் இந்த அரசு செயலிழந்து நிற்கிறது. அ.தி.மு.க அரசின் அலட்சியத்தைப் பார்த்த சென்னை உயர்நீதிமன்றம் “ஏன் வழக்கை இன்னும் நீங்கள் எடுத்துக் கொள்ள வில்லை” என்று சி.பி.ஐ. இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருக்கிறது.

    சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுத்து அ.தி.மு.க அரசுக்கு கிடுக்கிப்பிடி போட்டதால்தான் “பொள்ளாச்சி” வழக்கில் ஒரு சில குற்றவாளிகளாவது கைது செய்யப்பட்டார்கள். ஆனால், ஆளுங்கட்சியின் முக்கியக் குற்றவாளிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்னமும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்.


    “பொள்ளாச்சி” விவகாரத்தில் அ.தி.மு.க அரசின் தோல்வி இப்போது பெரம்பலூரில் எதிரொலித் திருக்கிறது.

    பெரம்பலூர் பாலியல் புகார்களை தீவிரமாக விசாரித்து அப்பாவிப் பெண்களிடம் பாலியல் வன்முறை செய்த காமக்கொடூரர்கள் அனைவரையும் தயவு தாட்சண்யமின்றி கைது செய்திடவும், “பொள்ளாச்சி பாலியல் வழக்கை” விரைந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திடவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    பொள்ளாச்சி வழக்கை முடிந்தவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் மூலம் விசாரித்து, ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகளுக்கு எதிரான ஆதாரங்களை எல்லாம் அழித்து விட்டு, பிறகு சி.பி.ஐ.யிடம் வழக்கு விசாரணையை ஒப் படைக்கலாம் என்றோ, பெரம்பலூர் வழக்கினை மூடி மறைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ.வை காப்பாற்றி விடலாம் என்றோ முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்துவிடக்கூடாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

    மே 23-ந்தேதிக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது பொள்ளாச்சி வழக்கு மற்றும் பெரம்பலூர் வழக்கு போன்றவற்றை நீர்த்துப் போக வைக்க அ.தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கைகள், அதற்குத் துணை போன அதிகாரிகள் ஆகியோர் பற்றி தனி விசாரணை நடத்தப்படும். இந்த இரு வழக்கிலும் உள்ள உண்மைக் குற்றவாளிகள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும், யாருக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #mkstalin #tngovt #perambalurmolestationissue 

    ×