search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "One Poll"

    நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் கமிஷனும், சட்ட ஆணையமும் வருகிற 16-ந் தேதி ஆலோசனை நடத்துகின்றன. #ElectionCommission #LawCommission
    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தவேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். தேர்தல் செலவுகளை பெரிய அளவில் குறைக்கும் நோக்கில் இந்த கருத்தை அவர் தெரிவித்து உள்ளார்.

    இதைத்தொடர்ந்து இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் நடவடிக்கையில் மத்திய சட்ட ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக சட்ட ஆணையம் அரசியல் சாசன நிபுணர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தலில் தொடர்பு கொண்டோரிடம் கருத்து கேட்டு உள்ளது.

    மேலும் நாடாளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் இது குறித்து கொண்டு வரப்படவேண்டிய சட்ட திருத்தங்கள், ஒப்புதல்கள் பற்றிய செயல் திட்டங்களையும் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி முதல் கட்டமாக 2019-ம் ஆண்டும், இரண்டாம் கட்டமாக 2024-ம் ஆண்டு பல மாநிலங்களின் சட்டசபை தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதேநேரம் தலைமை தேர்தல் கமிஷனர் ஓம் பிரகாஷ் ராவத் அண்மையில் மிகுந்த எச்சரிக்கையுடன் கூறும்போது, குதிரைக்கு முன்பாக நாங்கள் வண்டியை பூட்டவிரும்பவில்லை. ஏனென்றால் இதில் சட்ட ரீதியாக அணுகவேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. அந்த சட்ட வடிவமைப்பு உருவாகாதவரை நாங்கள் எதைப்பற்றியும் பேச விரும்பவில்லை என்று கூறி இருந்தார்.

    மேலும் இதுபோல் ஒன்றாக தேர்தலை நடத்துவதற்கும், மின்னணு ஓட்டுப்பதிவு மற்றும் ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் வாங்குவதற்கும் ரூ.9284 கோடி செலவு பிடிக்கும் என்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட துணை ராணுவத்தினரின் பங்களிப்பும் பெரிதும் தேவைப்படும் எனவும் எதிர்பார்ப்பதாக தேர்தல் கமிஷன் கருத்து தெரிவித்து இருந்தது.

    என்றபோதிலும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் கமிஷனும், மத்திய சட்ட ஆணையமும் முறைப்படியான பேச்சுவார்த்தையை தொடங்க திட்டமிட்டு இருக்கின்றன. இந்த பேச்சுவார்த்தை வருகிற 16-ந் தேதி டெல்லியில் நடக்கிறது.

    இது தொடர்பாக சட்ட ஆணையத்தின் தலைவரும் நீதிபதியுமான பி.எஸ்.சவுகானுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்துள்ளது.

    இதுபற்றி பி.எஸ்.சவுகான் கூறுகையில் “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் கமிஷனுடன் விரிவான ஆலோசனை நடத்த இருக்கிறோம். ஏனென்றால் நாடு முழுவதும் தேர்தலை நடத்தும் பொறுப்பு அவர்களுக்குத்தான் உள்ளது“ என்றார்.   #ElectionCommission #LawCommission
    ×