search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Northstate Youth Arrested"

    • ஏ.டி.எம். கொள்ளையர்களுக்கு கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். நகரில் ஏஜெண்டு ஒருவர் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்துள்ளார்.
    • கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்துள்ளதால் விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வடமாநில கும்பல் திருவண்ணாமலை நகர பகுதியில் தேனிமலை, மாரியம்மன் கோவில் தெருவில் 2 எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்., மற்றும் போளூரில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். ஒன்றிலும், கலசப்பாக்கத்தில் ஒன்இந்தியா ஏ.டி.எம் மையம் என 4 ஏ.டி.எம் எந்திரங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    கொள்ளை கும்பல் தேவிகாபுரம், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பொன்னை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் சென்றுள்ளனர்.

    வழியில் உள்ள எந்த சுங்கச்சாவடியிலும் இவர்களது வாகனம் கடக்காமல் இருந்துள்ளது. சுங்கச்சாவடியை தவிர்த்தே கொள்ளை கும்பல் தப்பியுள்ளனர்.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் அரியானா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் யூகித்தனர். முதற்கட்டமாக தனிப்படை போலீசார் அரியானாவிற்கும், ஆந்திராவிற்கும் சென்றனர்.

    இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தவர்கள் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப்.பில் அறை எடுத்து தங்கியிருந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கே.ஜி.எப்.பிற்கு விரைந்து சென்றனர்.

    ஏ.டி.எம். கொள்ளையர்களுக்கு கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். நகரில் ஏஜெண்டு ஒருவர் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்துள்ளார். அவர்களுக்கு அறை எடுத்து கொடுத்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவல் அடிப்படையில் அரியானா வாலிபர் ஒருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

    முதல் கட்ட விசாரணையில் அவரது பெயர் ஆரிப் என தெரியவந்துள்ளது.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அங்கு தங்கியிருந்த கும்பல் போலீசார் நெருங்கியதை அறிந்து வட மாநிலத்திற்கு தப்பி சென்றனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்துள்ளதால் விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஏ.டி.எம். கொள்ளையில் சந்தேகப்படும்படியான நபர்கள் மற்றும் உதவியவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கொள்ளை கும்பல் பிடிபடுவார்கள் என்றனர்.

    ×