என் மலர்
நீங்கள் தேடியது "Navodaya Schools"
- காங்கிரஸ் அரசு அனைத்து மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டது
- ஸ்டாலினின் 2011-ஆம் ஆண்டு தேர்தல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பல மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியது திமுக.
இரு மொழிக்கொள்கையை பாதிக்கும், நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் அமைக்க, திமுக அரசு வழி ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"`திராவிடம்' என்பதை கட்சியின் பெயராக வைத்துக்கொண்டு, `திராவிட மாடல் ஆட்சி நடத்துகிறோம்' என்று வித்தை காட்டிவரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கல்விக் கொள்கையில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்து, தமிழ்நாடு மாணாக்கர்களின் வாழ்வில் விளையாடி வருவதும், வெளியே இருமொழிக் கொள்கை என்று பேசிவிட்டு, காங்கிரஸ் அரசு கொண்டுவந்த மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தும் நவோதயா பள்ளிகள் அமைய உச்ச நீதிமன்றம் உத்தரவிடுவதற்கான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவது வெட்கக்கேடான ஒன்றாகும்.
நம் நாட்டை காங்கிரஸ் கட்சி ஆண்ட காலத்தில்தான், தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் அலட்சியத்தால் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி மத்திய அரசின் பொதுப்பட்டியலுக்குச் சென்றது. 45 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு அனைத்து மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்ட எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை நடைமுறைபடுத்தப்படும்போது, இந்தியைத் திணிக்கும் வகையில் காங்கிரஸ் அரசால் திணிக்கப்படும் 'நவோதயா பள்ளிகளை' அனுமதிக்கமாட்டேன் என்று தெள்ளத் தெளிவாக அறிவித்து செயல்படுத்தினார்.
இதைத்தான் 30 ஆண்டுகால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஜெயலலிதாவும், எனது தலைமையிலான அரசும் கடைபிடித்தது. ஒரு நிறுவனம் 2017-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் திறக்க அரசு அனுமதி தர மறுப்பதாகவும், மத்திய அரசு திட்டத்தின்கீழ் நடத்தப்படும் நவோதயா பள்ளிகளைத் திறப்பதற்கு அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டதில், நவோதயா பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க வேண்டும், அந்தப் பள்ளிகளை நடத்த முன்வருவோருக்கு, சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நிலம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு, நமது உயிர் மூச்சாம் 'இருமொழிக் கொள்கையை' பாதிக்கும் என்பதால், உடனடியாக எனது அறிவுறுத்தலின்படி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து, மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடி, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடையாணையும் பெறப்பட்டது. 2021 வரை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கை எனது தலைமையிலான அரசு கண்காணித்தது.
1.12.2025 அன்று இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாட்டின் சார்பாக விடியா திமுக அரசின் மூத்த வழக்கறிஞர்கள் வாதிடாமல், ஜூனியர் வழக்கறிஞர் ஆஜராகி உள்ளார். இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அனுபவம் வாய்ந்த மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடாமல், திமுக வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதாடி உள்ளார்.
மூத்த வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாட்டின் வாதங்களை சரியான முறையில் எடுத்துரைக்காத காரணத்தினால், 15.12.2025 அன்று உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நவோதயா பள்ளிகளை நடத்துவதற்கு குறிப்பிட்ட காலத்தில் நடவடிக்கை எடுக்கவும், அது சம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள், கொலை வழக்கு குற்றவாளிகள், திமுக-வின் ஊழல் அமைச்சர்கள் இவர்களையெல்லாம் காப்பாற்றுவதற்காக, பலகோடி அரசுப் பணத்தை செலவிட்டு, டெல்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர்களை நியமித்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் நிலையில், மொழிப் பிரச்சனை பற்றிய இம்முக்கிய வழக்கில் ஏனோ தானோ என்று நடந்துகொண்டதும், மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிடாததும், தமிழ்நாடு மக்களிடம் இருமொழிக் கொள்கையில் திமுக-வின் முதலமைச்சர் ஸ்டாலினின் இரட்டை வேடம் அம்பலப்பட்டுள்ளது.
2025, டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில், முதலமைச்சர் ஸ்டாலினின் 2011-ஆம் ஆண்டு தேர்தல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பல மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியது. ஆனால், நவோதயா பள்ளி வழக்கில் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வாதாடவில்லை. இதிலிருந்து இருமொழிக் கொள்கையில் விடியா திமுக அரசின் இரட்டை வேடத்தை தமிழ்நாடு மக்கள் புரிந்துகொள்வர். நவோதயா பள்ளி வழக்கில் தமிழ்நாட்டின் வாதங்களை சரியான முறையில் எடுத்துரைக்காத முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
'தமிழ் நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்று வாய் வீரம் காட்டாமல், இனியாவது இந்த விடியா திமுக அரசு, மூத்த வழக்கறிஞர்களை வைத்து தமிழ்நாட்டின் வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் முழுமையாக எடுத்துரைத்து, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று ஃபெயிலியர் மாடல் ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.






