search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nationwide strike"

    மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் நாடு முழுவதும் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் பரிமாற்றம் ஆகாமல் முடங்கியது என வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்தது. #BankStrike #Strike
    சென்னை:

    வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பொதுத்துறைகளில் தனியார்மயத்தையும், அன்னிய நேரடி முதலீட்டையும் அனுமதிக்க கூடாது. குறைந்தபட்ச கூலியாக மாதம் ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறைகளின் பங்குகளை விற்பனை செய்வதை கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தத்தை நேற்று தொடங்கினர். இதனால் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.



    சென்னை அண்ணாசாலையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பு மத்திய அரசு ஊழியர்கள், வங்கி மற்றும் காப்பீட்டு துறை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    பெரும்பாலான மக்களை சார்ந்து அரசு செயல்பட வேண்டும். ஆனால் முதலாளிகளுக்கு சாதகமான திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே இந்திய வருமானத்தில் 73 சதவீதம் மூலதனம் மூலம் பயனடைந்து வருகின்றனர். இதனால் ஏழை, பணக்காரர்கள் வித்தியாசம் அதிகரித்து வருகிறது. 50 கோடி தொழிலாளர்கள் நலனுக்கு எதிரான திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.

    அனைவருக்கும் ஓய்வூதியம், பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு, பொதுத்துறையை வளர்ப்பது போன்ற செயல்களை விடுத்து, மத்திய அரசு முதலாளிகளுக்கு சாதகமான திட்டங்களை அறிவித்து உள்ளது. இந்த கொள்கைகளை கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் 20 கோடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    45 ஆயிரம் வங்கி கிளை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால் பண பரிமாற்றம், காசோலை பரிமாற்றம், அரசு கருவூல கணக்குகள் செயல்பாடு, ஏற்றுமதி, இறக்குமதி கணக்குகள் போன்ற வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் நாடு முழுவதும் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் காசோலைகள் முடங்கி கிடக்கிறது. தமிழகத்தில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் பரிமாற்றம் ஆகவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுசெயலாளர் சி.பி.கிருஷ்ணன், இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க பொதுசெயலாளர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த வேலைநிறுத்தம் இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது.

    நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், ஸ்டேட் வங்கி மற்றும் தனியார் வங்கிகள் உள்ளிட்டவை வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் வழக்கம் போல் செயல்பட்டன.
    ×