search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayorletter"

    • மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளருக்கு, மேயர் கடிதம் எழுதியதாக புகார்.
    • மாநகராட்சிக்குள் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் மோதல்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு, திருவனந்தபுரம் மாநகராட்சியில் பணி நியமனம் வழங்க மேயர் ஆர்யா ராஜேந்திரன் சிபாரிசு கோரியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நவம்பர் 1ஆம் தேதி கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் அனவூர் நாகப்பனுக்கு மேயர் ஆர்யா ராஜேந்திரன் எழுதிய கடிதம் ஊடகங்களில் வெளியானது.

    திருவனந்தபுரம் மாநகராட்சியின் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 74 மருத்துவர்கள், 66 பணியாளர்கள் செவிலியர்கள் மற்றும் 64 மருந்தாளுநர்கள் பணியிடங்கள் உள்பட 295 தற்காலிக பணியிடங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் பெயரை சிபாரிசு செய்யும்படி அதில் மேயர் கோரியிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த கடிதம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருவனந்தபுரம் மாநகராட்சி முன்பு பாஜக மற்றும் இளைஞர்கள் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்ததுடன் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடித்தது. 


    மேயரின் கடிதம் தொடர்பாக, திருவனந்தபுரம் மாநகராட்சிக்குள் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் இடையே மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் தாக்கிய நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இந்த நிலையில், தான் அந்த கடிதத்தை அனுப்பவில்லை, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் திருவனந்தபுரத்தில் நான் இல்லை, இந்த விவகாரம் பற்றி முறையான விசாரணை நடத்தப்படும் என்று மேயர் ஆர்யா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

    ×